அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் தொடரட்டும்

பொதுச்சபைக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதியின் உரையைப் பற்றி, இலங்கையில் எவரும் கருத்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவர், ஐ.நா செயலாளர் நாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும், இனப்பிரச்சினை விடயத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் மட்டுமே, பலரது கவனத்தை ஈர்த்திருந்தன. அவர், இனப்பிரச்சினைச் சார்த்த விடயங்களைப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கேட்டறிந்த பலர், கோட்டாபய ராஜபக்‌ஷவா, மாறிவிட்டாரா என்று கேட்கவும் கூடும்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்தல், 2009 ஆம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டட ‘பாரிய’ அபிவிருத்தி ஆகியவற்றைப் பற்றி, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் அவர் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தைப் பற்றி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

காணாமற் போனவர்கள் விடயத்தில், அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் காணாமற்போனோருக்காக மரண சான்றிதழ்களை வழங்குவது போன்ற முயற்சிகளைத் துரிதப்படுத்தப் போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை, தாம் பதவிக்கு வந்ததன் பின்னர் விடுதலை செய்ததாகவும் அவ்வாறு விடுதலை செய்ய முடியாதோர் விடயத்திலான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு, அவர்களது நீண்ட கால தடுப்புக் காவலை கருத்தில் கொண்டும் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகிய பின்னர், ஜனாதிபதி மன்னிப்பை வழங்கத் தாம் தயங்கவில்லை என்றும் ஜனாதிபதி அந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் உள்விவகாரங்கள், உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலமே தீர்க்கப்பட வேண்டும எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை அழைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், வடக்கு, கிழக்கில் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குதல், வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்தல், காணாமற்போனவர்கள் விடயத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்குதல், உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் பொறுப்புக் கூறல்,  புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவை, நல்ல காரியங்கள் என்றே, ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடல் மூலம் கூறுகிறார். 

ஆனால், இப்பணிகள் நல்ல பணிகள் என்று அவரோ அவரது கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அக்கட்சியோடு இணைந்திருக்கும் சிறிய கட்சிகளோ கருதுவதாக, நாம் இது வரை விளங்கிக் கொண்டு இருக்கவில்லை. அது எமது தவறா? இல்லை; நாம் அவ்வாறு சிந்திக்கும் வண்ணம், அவரோ அவரது கட்சியோ அக்கட்சியோடு இணைந்து இருக்கும் கட்சிகளோ செயற்படவில்லை. அவ்வனைவரும், அதற்கு மாறாகவே இதுவரை நடந்து கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய, கடந்த அரசாங்கம் முற்பட்ட போது, பொதுஜன பெரமுனவினர் (அப்போது மஹிந்த அணியினர்) “அரசாங்கம் கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்யப் போகிறது” என்று கூச்சலிட்டு, இனவாதத்தைத் தூண்டி, அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். எனவே, தனித்தனி நபர்களாக, தனித்தனி வழக்குகள் மூலம் அவர்களை விடுதலை செய்ய, கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.

போர்க் காலத்தில், ஆயுதப் படையினர்  கைப்பற்றிய காணிகளை விடுவிக்க, கடந்த அரசாங்கம் முற்பட்ட போதும் இதேபோல் பாதுகாப்புக்குக் குந்தகமான முறையில் அரசாங்கம் காணிகளை, தமிழர்களிடம் கையளிக்கிறது என்று மஹிந்த அணியினர் கூச்சலிட்டனர். 

கடந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அப்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர்ந்தவர்களின் பல அமைப்புகள் மீதான தடையை நீக்கி, அவர்களது விழா ஒன்றை, 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இலங்கையில் நடத்தத் தயாரானார். அப்போது மஹிந்த அணியினர், அதை எதிர்த்தனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், மஹிந்த அணியினர் மிக மோசமாக இனவாதத்தைத் தூண்டியிருந்த நிலையில், மங்கள அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். 

உள்நாட்டுப் பிரச்சினைகளை, உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறும் போது, போர்க் கால மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். அதற்காகவே, உள்நாட்டுப் பொறிமுறையா, சர்வதேச பொறிமுறையா என்ற சர்ச்சை, இது காலவரையும் நடைபெற்று வருகிறது. அவர், அதனை நேரடியாகவே குறிப்பிடாதது ஏன் என்ற கேள்வி இங்கே எழுகிறது. 

அதேவேளை, ‘பொறுப்புக் கூறல்’ என்ற உள்நாட்டுப் பிரச்சினையை, உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே ஐ.நாவும் ஆரம்பத்தில் கூறியது. அதனால், இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே, 2012ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இன்னமும் அதனை வலியுறுத்துகிறது. அரசாங்கம் அதற்கு இணங்காததாலேயே, 2012ஆம் ஆண்டு முதல், வருடாந்தம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாகப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிலரை விடுதலை செய்ததாக, குட்டரைஸிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். அதேவேளை, தண்டனைக் காலம் முடிவடையும் தருவாயில் இருந்த 16 கைதிகளை அரசாங்கம், அண்மையில் விடுதலை செய்ததாக, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர், தமது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அது, குட்டரெஸூக்குத் தெரியுமோ தெரியாது. அவருக்குத் தெரியாதிருந்தாலும், ஜனாதிபதி கூறுபவற்றில் ஏதாவது முக்கியத்துவத்தை உணர்ந்தால், அதனை அவர் மனித உரிமைகள் பேரவைக்குத் தான் தெரிவிக்க வேண்டும்.

ஐ.நா செயலாளரும் ஜனாதிபதி குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்திய முதலாவது முறை இதுவல்ல. இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், குட்டரெஸ், அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராக 2006ஆம் ஆண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார். அவர், 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். எனவே, இந்தக் காணிப் பிரச்சிணை, அகதிகள் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை, காணாமற்போனோர்களின் பிரச்சினை, பயங்கரவாத் தடைச் சட்டம் போன்ற விடயங்களைப் பற்றி, இதற்கு முன்னர் அவர் கவனம் செலுத்தியிருப்பார் என்றே ஊகிக்க வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையில், ஏதாவது நெகிழ்வுத் தன்மையை எதிர்ப்பார்த்தே, கைதிகளை விடுதலை செய்தேன், காணிகளை விடுவித்தேன், புலம் பெயர்ந்தோருடன் பேசப் போகிறேன் என்றெல்லாம் ஜனாதிபதி கூறுகிறார் போலும். அதனை, குட்டரெஸ் உண்மை என ஏற்றுக் கொண்டாலும், அவர் அதனை, மனித உரிமைகள் பேரவைக்குத் தான் தெரிவிக்க வேண்டும். அங்குள்ளவர்களுக்கு நிலைமையை புதிதாக விளக்கத் தேவையில்லை. 

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்தை, தமிழ் அரசியல்வாதிகள் நம்புவதாக இல்லை. அது அடித்தளமற்ற சந்தேகம் அல்ல. 

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி ஏற்றவுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. 

அதன் பின்னர், இவ்வருடம் ஜூன் மாதம் மீண்டும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்ததை நடத்த சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அது, காரணம் கூறாமலே பிற்போடப்பட்டது. அப்பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடைபெறவில்லை.

கூட்டமைப்பினர், இப்போது தனித் தமிழ் நாட்டை கோருவதில்லை. ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழ் ஈழத்தையே வலியுறுத்தி வருகின்றன. அவ்வாறு இருக்க, கூட்டமைப்புடன் பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் பேசப் போவதாக ஜனாதிபதி கூறுகிறார்.   

2021 மார்ச் மாதம், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றை அரசாங்கம் தடை செய்தது. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி அவ்வமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகக் கூறுகிறார். நியூயோர்க்கில் கூறியவற்றை அவர் இலங்கை மக்களிடம் கூறுவாரா?

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இப்போது தாம், குட்டரெஸிடம் கூறியவற்றை, ஜனாதிபதி செய்ய முயல்வதாகத் தெரிந்தால், பழைய கதைகளை மறந்து, சகலரும் அதற்காக அவரை ஊக்கப்படுத்துவதும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதும் கட்டாய கடமையாகும்.