அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் தவிர கல்வியாளர்களுடனும் அவன் தொடர்பைப் பேணி வந்திருக்கிறான். இசை, தத்துவம், உலக அரசியல், கோட்பாடு என்றெல்லாம் அவன் உரையாடியிருக்கிறான்.
அவனது பாலுறவு நடத்தைகள், அரசியல் செயல்பாடுகளை பிரித்து அணுகவில்லையானால் அவனது கோப்புகளில் பெயர் உதிர்க்கப்படும் அனைவரையும் பீடபைல்களாக, கிரமினல்களாக மதிப்பிடும் தவறுக்கு எவரையும் இட்டுச் செல்லும். இத்தகைய பார்வை வணிகமயமான ஊடகச் சென்சேஷனலிசத்திற்குப் பயன்படும், உண்மை காணப் பயன்படாது.
அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட், இங்கிலாந்தின் த டெய்லி மெயில், த சன், த டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளில் சொல்லி வைத்தாற்போல ஒரே விஷயம் தலைப்புச் செய்தி :
புடின் ரஸ்யப் பெண்களை அமெரிக்காவிற்கு அனுப்பி எப்ஸ்டீன் மூலம் அமெரிக்க கனவான்களை மோசமான செக்ஸ் போசுகளில் உலக அளவில் கொச்சைப்படுத்த செயல்பாட்டாரா(?) எனும் ‘சந்தேகம்’ எழுகிறது.
கூடுதலாக இவர்கள் சொல்லும் செய்தி: எப்ஸ்டீன் ரஸ்ய உளவாளி.
இந்த பத்திரிக்கைகள் எவரால் நடத்தப்படுகின்றன, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் இவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பாருங்கள்.
ஏன் இப்படிப் பார்க்க வேண்டும்?
இதுவரையிலும் எப்ஸ்டீன் தொடர்பாக வெளியான திடடவட்டமான ஆதாரங்கள் அவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக லாபி செய்தார். இஸ்ரேல் ஜனாதிபதிகளை சந்திக்க வைக்க பிறரை ஏற்கச் செய்தார். அரபுநாடுகளின் விவகாரங்களில் தலையீட்டுக்கு ஏற்பாடு செய்தார் என்பதுதான்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் இந்த ஏடுகள் முழுமையாக இஸ்ரேலை ஆதரித்து வரும் யூத மூலதனத்தின் வலதுசாரி இதழ்கள்.
இஸ்ரேலை அரசியல் ரீதீயிலும், அமெரிக்க அதிகாரக் கும்பலை ஒழுக்க அளவிலும் விடுவிக்க முயலும் வலதுசாரிகளின் பிரச்சாரமே எப்ஸ்டீன் ரஸ்ய உளவாளி எனும் ‘சந்தேகம்.’
உலக அளவில் பிரபலமான சினிமா இயக்குனர் மீரா நாயர் எப்ஸ்டின் நிகழ்வு ஒன்றில் அவரது செயலாளரின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார். அவர் நியூயார்க் நகர இடதுசாரி மேயர் மம்தானியின் தாய். மம்தானியின் தகப்பனார் பெரும் புகழ்பெற்ற ஒரு காலனிய எதிர்ப்புப் பேராசிரியர். எனவே இவர்கள் பீடபைல் நடத்தையில் ஈடுபட்டவர்களா என விசாரிக்க வேண்டும் என எல்லாம் எழுதுகிறார்கள். கொடுமை.
வேறு வேறு துறைகளில் பிரபலமானவர்களை நிகழ்வுக்கு அழைப்பது என்பது பணக்காரர்களிடம் வழமையாக இருக்கிறது. அம்பானி மகன் திருமணத்திற்குச் செல்லாத சினிமா நட்சத்திரங்கள் எவராவது உண்டா? இதனால் அம்பானியின் ஊழல்களில் அவர்களை நேரடியாக உறவுபடுத்திவிட முடியுமா?
அமெரிக்க ஐரோப்பிய பெருந்தனக்காரர்கள் தமது லைபவங்களுக்கு வேறு வேறு துறைசார்ந்த, பல்லினங்களைச் சேர்ந்த பிரபலங்களை அழைப்பது வழமை. இப்படி அழைப்பவர்களின் பாலுறவு நடத்தைகளை அழைப்புப் பெற்றவர்கள் அறிந்து அதனை ஏற்றார்கள் என்பது பொருளல்ல.
ஒருவரது பாலுறவு நடத்தைகளின் கிரிமினல் தன்மை அவ்வளவு விரைவில் வெளிப்பட்டு விடுவதில்லை. இவை அந்தரங்கமாகவே நிகழ்த்தப்படுகின்றன. பிரச்சினைகளை ரசாபாசமாக மட்டுமே அணுகுவது போர்னோகிராபி தரும் உணர்ச்சிவசத்தை மட்டுமே உருவாக்கும்.
எப்ஸ்டீன் கோப்புகளின் எண்ணிக்கை அறுபது இலட்சம் எனவும், அவை இப்போது முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டன எனவும் அமெரிக்க நீதித்துறை அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீதான பழியினின்று தான் விடுவிக்கப்பட்டிருப்பதாக(absolved) அறிவித்துவிட்டார். அவர் பழி என்று குறிப்பிடுவது, தான் ஒரு பீடபைல் அல்ல, அதனோடு தான் எந்தத் தகவலையும் மறைக்க முயலவில்லை எனும் விஷயங்களை.
இது தொடர்பாக நேற்றைய பிரெஞசு இடதுசாரி இதழான லெமான்டே டிப்ளமெடிக்கில் ஒரு செய்தி வாசித்தேன். இத்தகைய பிரச்சினைகளைக் குறித்த செய்தி வெளியிடப்படும்போது செய்திகளைத் திருத்தத்துடன்(Redact) வெளியிட வேண்டும் என்பது அமெக்கச் சட்ட ஷரத்துகளில் ஒன்று.
30 புகைப்படங்கள் இவ்வாறில்லாமல் பாதிக்கப்பட்ட அன்றைய பதின்ம வயது சிறுமிகளின் உடல்-முக அடையாளங்கள் தெரியும் வகையில் வெளியிடப்பட்டது தவறு என டிப்ளமெடிக் எழுதியிருந்தது.
புகைப் படங்களில் அமெரிக்கத் தலைவர்கள் பலர் சிறுமியரைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டிருக்கும், மடியில் அமர்த்திக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூகதளங்களில் பகிரப்பட்டிருந்தன.
இன்னும் பலகாலத்துக்கு இப்பிரச்சினை விவாதத்திற்கு உரியதாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் இப்புகைப்படங்கள்.
அமெரிக்க அரசு, அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்தைகள், பாதுகாப்பு எனும் பெயரிலான ஆட்சிக் கவிழ்ப்புகள், அமெரிக்க உளவுத்துறை ரகசியங்கள் எனச் சொல்லப்பட்டு, அமெரிக்க நிர்வாகம் மறைத்த உண்மைகளைத்தான் ஊடகவியல் சார்ந்து உலகை மாற்றிய நோம் சோம்ஸ்க்கி, ஆரோன் ஸ்வார்ட்ஸ், எட்வர்ட் ஸ்நோடவுன், ஜூலியன் அசாஞ்சே, செய்மோர் ஹெர்ஸ் போன்றவர்கள் வெளியிட்டார்கள்.
இத்தகையது அல்ல எப்ஸ்டீன் பைல்ஸ் பிரச்சினை. எப்ஸ்டீன் பைல்சை இதுவரை முடக்கி வைத்திருந்ததும், இப்போது வெளியிடுவதும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.
எப்ஸ்டீன் பைல்ஸ் பிரச்சினை அமெரிக்கர்களைப் பொறுத்து முதலும் முடிவுமாக அமெரிக்கச் செல்வந்தர்கள், அரசியல்வாதிகளைக் கொண்ட கும்பல்(Oligarch) எப்ஸ்டீனது பாலியல், பீடபைல், பெண்கடத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதா என்பதை அறிவது மட்டும்தான். நெருங்கி நின்று இப்பிரச்சினையைப் பார்ப்பவர்கள் இதனை உணரமுடியும்.
டெமாக்ரடிக் கடசியைச் சேர்ந்த பில்கிளின்டன்-மோனிகா லெவின்ஸ்க்கி பாலுறவுப் பிரச்சினையை டிரம்ப்பின் ரிபப்ளிக்கன் கட்சியினர் கையாண்டது போன்றதுதான் இன்று டிரம்ப் சம்பந்தபட்ட எப்ஸ்டீன் பிரச்சினையை டெமாக்ரட்டுகள் கையாளும் முறை. இருவரில் எவர் அதிகமும் எப்ஸ்டீனின் பாலியல் வக்கிரக் கூட்டாளிகளாக இருந்தார்கள் என அறிவதும் நிரூபிப்பதும்தான் இவர்களது பிரச்சினை.
இதில் உலகின் பிரச்சினை வேறு. அதிகாரமும் செல்வமும் கொண்ட ஒரு அமெரிக்கக் கும்பல் எவ்வாறு உலகளாவிய குழுந்தைகளைக் கடத்தி பாலியல் ரீதியில் எவ்வாறு குழந்தைகளைச் சீரழிப்பதைத் தமது வாழ்முறையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது தொடர்பான சீற்றம் அது.
எப்ஸ்டீன் பிரச்சினையில் உள்ள இஸரேலிய ஆதரவு அரசியல் பரிமாணத்துடன் எவ்வாறு அவரது செல்வந்தர்- அரசியல்வாதிகள்- அறிவாளிகள் தொடர்பு பிரிவுபடாமல் இருந்திருக்கிறது என்பதை முன்வைப்பவர்கள் இன்று இடதுசாரிகள்தான்.
எப்ஸ்டீன் குறித்த சித்திரம் எவ்வாறானது?
முதலாவதாக அவன் குழந்தைகளைப் பாலுறவு ரீதியில் சுரண்டியவன். வறுமையான சிறுமியரை உலகெங்கிலும் இருந்து கடத்தி அவர்களை பெரும் அரசியல்வாதிகளிடமும் செல்வந்தர்களிடமும் பாலுறவு கொள்ள அனுப்பியவன். குழந்தைகளின் பாலான வல்லுறவுச் சித்திரவதைகளில் ஈடுபட்டவன். இந்த நடத்தைகளை ஒளிப்பதிவுகளாக, புகைப்படங்களாக, கடிதங்களாக, உரையாடல்களாக ஆவணப்படுத்தியவன்.
குழந்தைகள் மீதான பாலுறவுச் சுரண்டலுக்காகத் தண்டிக்கப்பட்டவன். தன்டணைக் காலத்தில் சிறையில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டவன்.
எப்ஸ்டீனின் பிறிதொரு அடையாளம் இஸ்ரேலுக்காக, அதனது நடவடிக்கைகளைப் பாதுகாக்க அரசியல் தரகு வேலைகளில் ஈடுபட்ட யூத வம்சா வழியில் பிறந்தவன். இதன் அங்கமாக உலகின் கல்வியாளர்கள். அரசியல்வாதிகள், செல்வந்தர்களை இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட உந்தியவன். இதன் பகுதியாக பாலஸ்தீனம், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளைக் குலைத்துவிட உதவியவன்.
இப்போது உலகின் பல அரசியல் தலைவர்கள் சிறுமியரைக் கட்டிப் பிடித்தபடி, மடியில் அமர்த்தியபடி இருக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. இங்கிலாந்து அரசு வம்சத்து நபரான ஆந்த்ரூ என்பார் அரச வம்சத்திலிருந்து வெளியேற்றப்ட்டுள்ளார். பல பிரித்தானிய அரசியல்வாதிகள் தாம் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
எப்ஸ்டீன் பிரச்சினையில் உலகின் இடதுசாரிகளை அதிர்ச்சியூட்டிய ஒரு விஷயம் மொழியியலாளரும் மனித உரிமையாளரும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கடும் விமர்சகரும், மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் எனும் நாட்டின் இருத்தலுக்குக்குக் காரணம் இல்லை என்றவருமான நோம் சாம்ஸ்க்கி எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்தார் எனும் செய்தி.
சோம்ஸ்க்கி எப்ஸ்டீனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். எப்ஸ்டீன் ஏற்பாட்டில் இஸ்ரேலிய ஜனாதிபதி எகுத் பராக்குடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார். எப்ஸ்டீன் தொடர்பான ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அவருக்குப் பணம் செலுத்தப்பட்டது போன்ற கோப்புகள் வெளியானபோது இடதுசாரிகள் அதிர்ந்தனர்.
2008 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் மீதான குழந்தைப் பாலுறவுச்சுரண்டல் குற்றச்சாட்டு வெளியான பின்னும் அதனைக் கண்டிக்காது சோம்ஸ்க்கி தொடர்ந்து எப்ஸ்டீனுடன் தொடர்பைப் பேணினார் என்பதற்கான கடிதங்களும் இப்போது வெளியாகியுள்ளன.
இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது?
நோம் சாம்ஸ்க்கி உள்ளும் வெளியிலும் என அரசியல் ரீதியில் இரண்டு முகங்கள் கொண்டிருந்தார் எனவா? அல்லது எப்ஸ்டீனின் பாலுறவு நடத்தைகளில் அவரும் ஈடுபட்டார் எனவா? அல்லது எப்ஸ்டீனின் அவநடத்தையை அவரும் ஆதரித்து வந்தார் எனவா? அல்லது எப்ஸ்டீன் சோம்ஸ்க்கிக்குப் நிதி செய்தார், எனவே சோம்ஸ்க்கி ஊழலுக்கு ஆட்பட்டவர் எனவா?
இப்பிரச்சினையில் நோம் சோம்ஸ்க்கியின் ஆளுமையை முன்னிறுத்தி அமெரிக்க இடதுசாரி இதழான ‘நேஷன்’ மாத சஞ்சிகையில் கிரெக் கேன்டின் என்பார் ஒரு பகுப்பாய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை இன்றைய சோம்ஸ்க்கி குறித்த ஒரு பின்னணித் தகவலுடன் வாசிப்பது நல்லது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோம்ஸ்க்கி பக்கவாதத்திற்கு(stroke) ஆளாகிறார். பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஆன ஆற்றலை இழக்கிறார். நேர்காணல்கள், மின்னஞ்சல் தொடர்புகள் இல்லை. பொதுவான உரையாடல்களில் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்றாலும், அவர் பிரக்ஞையுடன் இருப்பதாகவும், அன்றாடச் செய்திகளைத் தொடர்வதாகவும், தற்போதைய நிகழ்வுகள் குறித்து, குறிப்பாக காசாவில் நடந்துவரும் போர் குறித்து அவர் அறிந்திருப்பதாகவும், இதற்கு உணர்ச்சிபூர்வமான சைகைகளால் எதிர்வினையாற்றியுள்ளார் எனவும் செய்திகள் சொல்கின்றன.
எப்ஸ்டீன்-சோம்ஸ்க்கி பிரச்சினையில் கடைசியாக சோம்ஸ்க்கி-எப்ஸ்டீன் இடையிலான மின்னஞ்சல்கள் வெளியானதையடுத்து சோம்ஸ்க்கி, 2008 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் மீதான சிறுமியர் கடத்தல்-பீடபைல் வழக்கின் பின், எப்ஸ்டீனுக்குத் தண்டனையளிக்கப்பட்ட சூழலில், சோம்ஸ்க்கி எப்ஸ்டீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் மிகவும் கேவலமானவை, அவமானகரமானவை.
பெண்கள் உரிமைப் பிரச்சினை, வல்லுறவு, சிறுமியர்கள் நடத்தப்பட்ட முறை குறித்த எந்தலிதமான விமர்சன உணர்வோ, குற்றவுணர்வோ இல்லாத அளவு சோம்ஸ்க்கி எப்ஸ்டீனை ஆதரித்து எழுதுகிறார் என்பது தெளிவாகப் புலபபடுகிறது.
தனிப்பட்ட முறையில் தனது முன்னாள் மனைவியர், அவரது வாரிசுகள் தொடர்பான குடும்ப விவகாரங்கள், நிதி விவகாரங்கள் போன்றவற்றில் சோம்ஸ்க்;கி எப்ஸ்டீனுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்திருக்கிறார் என்பது மின்னஞ்சல் செய்திகளில் தெளிவாகப் புலப்படுகிறது.
‘உன் மீதான குற்றச்சாட்டுக்களை நீ புறக்கணித்து விடு, காலப்போக்கில் இது பொதுமக்களுக்கு மறந்துபோய்விடும்’ என்றெல்லாம் எப்ஸ்டீனுக்கு எழுதும் சோம்ஸ்க்கி, எப்ஸ்டீன் நடத்தப்படும் விதத்திற்காகத் தனது வருத்தத்தையும் எப்ஸ்டீனுக்குத் தெரிவித்து எழுதுகிறார்.
இந்த மின்னஞ்சல் தொடர்புகளிருந்து நாம் முடிவுக்கு வரமுடியாத ஒரே விஷயம் சோம்ஸ்க்கி பீடபைல் கிரிமினல் நடத்தைகளில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மட்டும்தான். மற்றபடி, பீடபைல் நடத்தையில் எப்ஸ்டீனை சோம்ஸ்க்கி ஆதரித்து எழுதியிருப்பது அறுவறுப்பானது. எந்த வகையிலும் மன்னிக்கப்பட முடியாதது.
ஒரு தார்மீகப் பண்பு கொண்ட மனிதராகச் சோம்ஸ்க்கியை நமது மதிப்பிலிருந்து அவரது மின்னஞ்சல் செய்திகள் வீழ்ந்துவிடச் செய்கிறது.
இன்னும் ஒரே பிரச்சினைதான் இருக்கிறது. இஸ்ரேல் ஜனாதிபதியை அவர் சந்தித்துப் பேசுகிறார். டிரம்ப் ஆலோசகரோடு பேச முன்வருகிறார்.
சோம்ஸ்க்கி பாலஸ்தீனம் தொடர்பாக எழுதிக் குவித்திருக்கிறார். இந்தச் சந்திப்புகள் அவரது பாலஸ்தீன ஆதரவை, இஸரேல் மீதான விமர்சனத்தை ஏதேனும் திசைமாற்றியருக்கிறதா? ஏனெனில், இது பற்றிய அவரது கருத்துக்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் உள்ளவை.
இதனைப் புரிந்துகொள்ள கருத்துச் சுதந்திரம் என்பதாக சோம்ஸ்க்கி எதனைக் கருதுகிறார் என்பது குறித்த பிரச்சினையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
சோம்ஸ்க்கி தான் எதிரி எனக் கருதுபவர்களுக்கும் எல்லையற்ற கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கருதியவர்.
கருத்துச் சுதந்திரம் தொடர்பான நோம் சாம்ஸ்க்கியின் பார்வை இது :
‘கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் இரண்டு நிலைப்பாடுகள் தான் உண்டு: நீங்கள் வெறுக்கும் கருத்துக்களுக்காகவும் அந்த உரிமையைப் தீவிரமாகப் பாதுகாத்தும் நிற்கவேண்டும் அல்லது அதை நிராகரித்து ஸ்டாலினிச-பாசிச தரநிலைகளை நீங்கள் விரும்பவேண்டும்.’
சோம்ஸ்க்கி நிலவிய சோசலிசத்தை ஏற்றவர் இல்லை. அவரது அரசியல் முக்கியத்துவம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேசத் தலையீட்டுக்கு எதிரான நிலைபாடு கொண்டிருப்பதில்தான் உள்ளது. இந்த நிலைபாட்டில் இருந்து அவர் தனது கருத்துச் சுதந்திர நிலைபாட்டினைத் தருணங்களில் எப்படிக் கடைப்பிடித்தார் என்று பார்ப்போம்.
சோம்ஸ்க்கி பாசிசத்தை ஏற்பவர் இல்லை. யூதப் படுகொலையை மறுப்பவரும் இல்லை. ரோபர்ட் பரீசன் எனும் பிரெஞ்சுப் பேராசிரியர் யூதப் படுகொலை நிகழவேயில்லை எனும் நூலை எழுதியபோது அதனைத் தடைசெய்ய வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தபோது சோம்ஸ்க்கி அதனை மறுத்து எழுதினார். இப்படி நூல் எழுதுவதும் கருத்துச் சுதந்திரம் என்று எழுதினார்.
சோம்ஸ்க்கி எழுதியதைப் பரீசன் தனது நூலுக்கான முன்னுரையாகப் பாவித்தபோது சோம்ஸ்க்கி அதைக் கண்டித்தார். உங்களது கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் பரீசனுக்கு அவர் சொன்னார்.
சோம்ஸ்க்கி இலத்தீனமெரிகக நாடுகளின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை எதிர்த்து எழுதினார். அரபு நாடுகளில் தலையிடுவதையும் எதிர்த்து எழுதினார். வெனிசுலாவிலும் எகிப்திலும் இந்த அரசுகளை காந்திய அகிம்சை வழியில் கவிழ்ப்பது குறித்துப் பேசிய ஜீனே ஷார்ப் என்பவரை அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளர் என்றபோது, சோம்ஸ்க்கி ஜீனே ஷார்ப்பை ஆதரித்து எழுதினார்.
கேன்சல் கல்ச்சர், மீ-டு போன்ற பெரும் இயக்கங்கள் அமெரிக்காவில் எழுந்தபோது, தனது கருத்துச் சுதந்திர நோக்கில் இருந்து சோம்ஸ்க்கி தன்னைத் தூரப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலைபாட்டில் இருந்த கறாராகச் சார்புநிலை எடுக்காத சோம்ஸ்க்கிய உளவியல், எப்ஸ்டீன் தனது நெருங்கிய நட்பிலிருந்து ஏற்பாடு செய்த இஸ்ரேலிய ஜனாதிபதி எகுத் பராக் உடனான சந்திப்பிற்கான மனநிலையைத்; தந்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு குறித்து சோம்ஸ்க்கி எபபோதும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. எப்ஸ்டீன் பைல்கள் மூலம் மட்டுமே தெரியவந்த உணமை இது.
இனக்கொலையைக் கொள்கையாகக் கொண்ட ஒரு நாட்டின் தலைவனை எவ்வாறு இனக்கொலை பற்றிக் கண்டிக்கும் ஒரு அறிவாளி சநதிக்க முடியும்? இது பெரும் அறிவுசார் தார்மீக வீழ்ச்சி என்று அவதானித்தாலும், இந்தச் சந்திப்பினால் பாலஸ்தீனம் குறித்த தனது ஆதரவு நிலைபாட்டை சோம்ஸ்க்கி மாற்றிக் கொண்டாரா என்பதைத்தான் நாம் அறுதியாகப் பார்க்க வேண்டும்.
இல்லை என்பதுதான் இதற்கான வெளிப்படையான பதில். 2023 ஆம் ஜூன் மாதம் ஆண்டு பக்கவாதத்தில் வீழ்ந்து சோம்ஸ்க்;கி பேசும், எழுதும் ஆற்றலை இழக்கும் முன்பு, பாலஸ்தீனக் கோட்பாட்டாளர் ராம்சி பரூத்துக்கும், அல்ஜஜீரா செய்தியாளருக்கும் தந்த இரு நேர்காணல்களிலும் சோம்ஸ்க்கி தனது இஸ்ரேலிய எதிர்ப்பை, பாலஸ்தீன ஆதரவைத் தளும்பலின்றித் தெளிவாக முன்வைத்திருக்கிறார்.
எனில், நாம் சாம்ஸ்க்கியை எவ்வாறு அணுகுவது? ஒரு மொழியியல், ஊடகவியல், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோட்பாட்டாளராக அவரைப் புறக்கணிக்கவோ, நிராகரிக்கவோ முடியாது.
பெண்களது உரிமை, பாலியல் வல்லுறவு, பீடபைல் மனநிலை தொடர்பான அவரது நிலைபாடு அவர் மீது படிந்த நீங்காத கறை என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த உணர்விலிருந்தே நம்மை நாமே தார்மீக மனிதர்களாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
வரலாறு நெடுகிலும் பார்த்தால் இத்தகைய கொடுமையான கறைகள் கொண்ட கலைஞர்கள், அறிவாளிகள், கோட்பாட்டாளர்களின் இடையில்தான் நாம் வாழ விதிக்கப்பட்டிருக்கிறோம்.
- பதிவு – யமுனா ராஜேந்திரன்