கேரளத்தின் கம்யூனிச ஆட்சி அதிகாரம்

1957 ல் மக்களின் வாக்குகள் வழி இந்திய கம்யூனிஸ்டுகள் கேரள சட்டமன்றத்துக்குள் பெரும்பான்மையாக தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாடு தலைமையில்பிரவேசித்தபோது, உலகமே வியந்து நின்றது. கம்யூனிஸ்டுகள் என்றாலே வன்முறை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த உலகிற்கு, இதோ கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தின் வழியிலும் வெற்றி பெறத் தெரிந்தவர்கள் என்பதை மொத்த உலகத்திற்கும் அறிவித்த ஒரு வரலாற்றுப் பெரும் நிகழ்வு அது. ஆனால் ஜனநாயகத்துக்கு நாங்களே குத்தகைதாரர்கள் என்று நின்றவர்களே, இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அநியாயமாக டிஸ்மிஸ் செய்து, ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பது வேறு கதை.

அப்படி அவர்கள் செய்யும் போது இந்தியாவில் இனி கம்யூனிஸ்டுகள் தலை தூக்க முடியாது என்ற நப்பாசையில் தான் அதை செய்தார்கள். ஆனால் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய கம்யூனிஸ்டுகளை கேரள மக்கள் அள்ளி வாரி அணைத்துக் கொண்டார்கள். 1964 கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுண்ட போதிலும், மக்களின் ஆதரவும் செல்வாக்கும் கம்யூனிஸ்டுகளுக்குப் பசுமையாகவே இருந்துவந்தது. 1967 மீண்டும் தோழர் ஈ எம் எஸ் தலைமையில் கம்யூனிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தார்கள்.

கூட்டணி அரசியலுக்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது கேரள மாநிலம். இரண்டு முறைகள் அமைந்த ஆட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

என்றாலும் தோழர் சி அச்சுத மேனன் தலைமையில் 1969இல் அமைந்த கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் வெற்றிகரமான கூட்டணி அரசாங்கமாக அமைந்தது. முழு ஆட்சிக் காலத்தையும் அந்த கூட்டணி சிறப்பாக ஆண்டது. பல்லாண்டுகளாக பதற்றங்களையும் பரபரப்புகளையுமே கண்டுகொண்டிருந்த கேரள அரசியலை நிலைப்படுத்தி நிதானப்படுத்தித் திசைப்படுத்தியவர் தோழர் சி அச்சுத மேனன்.

அச்சுத மேனன் காலத்தில் ஒரு முதலாளித்துவ நாடான இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் கொண்டுவந்த நில சீர்திருத்த சட்டமும் அதன் அமுலாக்கமும் பிற இந்திய மாநில அரசுகளை மட்டுமல்லாமல், சோசலிச நாடுகளையே பிரமிக்க வைத்தன. தோழர் அச்சுத மேனனின் நிர்வாகத்திறன் என்பது ஒரு அபாரமான ஆற்றலாக இருந்தது. அவரின் அடிச்சுவட்டில் அடுத்த காலத்தில் முதன் மந்திரியாக வந்த தோழர் பி கே வாசுதேவன் நாயரும் அப்பழுக்கற்ற ஆற்றல்மிக்க ஒரு ஆட்சியை கேரள மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். கட்சி இந்தியாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணியைக் கட்டும் திட்டத்தை தன்னுடைய செயல்திட்டமாக ஆக்கியபோது முதலமைச்சர் பதவியைத் திறந்து வெளியே வந்தார்.

இந்த அரசியல் வரலாற்று வளர்ச்சி கட்டம் கேரள அரசியலில் ஒரு முறையான போக்கைச் சிருஷ்டித்தது. கேரள அரசியல் வானில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணியும், காங்கிரஸ் கட்சி தலைமையில் ஜனநாயக முன்னணியும் என்ற அரசியல் வழிவகை கேரளத்தில் ஆழமாக வேரூன்றியது. தோழர்கள்
இ கே நாயனார் மற்றும் அச்சுதானந்தன் ஆகியோர் கேரள முதலமைச்சர்களாக இருந்து கேரளத்தின் புரட்சிகர வரலாற்றையும் பண்பாட்டையும் பேணி வளர்த்தார்கள். மதசார்பற்ற இந்தியாவின் மறுக்கமுடியாத ஒரு மாநிலமாக கேரளத்தைக் கம்யூனிஸ்டுகள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் ஆர் எஸ் எஸ் பாஜக கூட்டணி தலைகீழாக நின்ற போதிலும், இன்னமும் கேரள மண்ணில் கால் பதிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்த மிகச்சிறந்த இடதுசாரிப் பாரம்பரியத்தின் ஒரு புதல்வராய், இன்றைய கேரளத்தின் முதல்வராய் தோழர் பினராயி விஜயன் இருக்கிறார்.

1945 இல் அன்றைய மலபார் மாவட்டத்தில் கோரன் கல்யாணி தம்பதியருக்கு பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். படிக்கின்ற காலத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின்னர் இளைஞர் பெருமன்றத்தில் தீவிரமாகி, 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் ஆனார். கேரள சமூகத்தின் வர்ணாசிரம கட்டமைப்பில் அடித்தட்டிலும் அடித்தட்டில் இருந்து தோன்றிய தோழர் பினராயி விஜயன் முழுக்க முழுக்க வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே தத்தம் செய்து கொண்டார்.

ஐந்தாறு முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றிருக்கிறார். 1996 முதல் 1998 வரை தோழர்
இ கே நாயனார் மந்திரிசபையில் மின்சாரத் துறை கூட்டுறவுத் துறை மந்திரியாக செயல்பட்டார். 1998 முதல் 2015 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராகத் திறம்பட செயலாற்றினார்.

இடதுசாரிப் போராட்டப் பாரம்பரியத்தில் புடம் போட்டு எடுக்கப்பட்ட தோழர் பினராயி விஜயன் 2016 ல் கேரளாவின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கேரள அரசியலைப் பற்றி அறிந்தவர்கள் கேரளாவில் முதலமைச்சராக இருப்பது என்பது கத்திக்கு மேல் நடப்பது போன்றது என்பதை நன்கு அறிவர். சமூக உணர்வும், அரசியல் விழிப்புணர்வும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ததும்பி நிற்கிற அந்த மாநிலத்தில் அரசியல் செய்வது என்பது சற்று கடினமான ஒன்றுதான். வார்டு உறுப்பினர் முதல் மாநில முதலமைச்சர் வரை கடுமையாக உழைத்தால் மட்டுமே அரசியலில் பயணிக்க முடியும். எல்லா முதலமைச்சர்களுமே, அது காங்கிரஸ் ஆனாலும் இல்லை கம்யூனிஸ்ட் ஆனாலும், மிகப்பெரிய நெருக்கடிகளில் சிக்கித் தவித்தவர்கள்தாம். என்றாலும் சில பல நேரங்களில் அவர்கள் ஒரு கை தேர்ந்த மாலுமியைப் போல கேரள அரசியல் படகைத் திறம்படச் செலுத்தினார்கள் என்பதும் உண்மை.

ஆனால் தோழர் பினராயி விஜயன் சந்தித்த நெருக்கடிகள் என்பது சொல்லி மாளாது. ஏனெனில் அவரின் நெருக்கடிகள் அரசியல் சூழலால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை அத்தனையும் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. எந்த அரசியல் ஆணைக்கும் கட்டுப்படாத பேரிடர் நெருக்கடிகள் அவை. 2018 கேரளம் சந்தித்த வெள்ளப்பெருக்கு என்பது வரலாறு காணாத சேதாரங்களைக் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் பினராயி விஜயன் என்ற இனிய தோழரின் அற்புதமான ஆற்றல்கள் வெளிப்பட்டதை உலகமே கண்டு வியந்தது. மத்திய அரசாங்கம் போதிய நிவாரண நிதியைக் கொடுக்காத போதிலும், அந்த இயற்கைப் பேரிடரை நேருக்கு நேர் சந்தித்து சமாளித்தவர். அந்தப் பெரும் நெருக்கடியைச் சமாளித்து நின்ற தோழர் பினராயி விஜயனுக்கு மூச்சு விடுவதற்கு கூட இடம் கொடுக்கவில்லை. வந்துவிட்டது நிபா வைரஸ்! ஏற்கனவே போராட்டங்களிலும் சர்ச்சைகளிலும் புடம் போட்டு எடுக்கப்பட்ட தோழர் பினராயி விஜயன் நிபா வைரஸையும் எதிர்த்துப் போராடினார். வெற்றியும் கண்டார்.

2018 வெள்ளப்பெருக்கும், அதன் பின்னர் வந்த நிபா வைரஸும் கேரளத்துப் பிரச்சனைகள். ஆனால் 2020 இல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கிய நிலையில், இந்தியாவையும் தாக்கத் தொடங்கியிருந்த போது, எல்லா மாநிலங்களும் உறங்கிக் கொண்டிருந்தபோது, விழித்துக்கொண்ட ஒரே மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் மட்டுமே. மத்திய அரசும் மாநில அரசுகளும் வேறு வேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த போது, கேரள மாநில முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை மும்முரமாக துவக்கி நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய ஒவ்வொரு அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் பத்திரிகை செய்திகளாக வந்தபோது அது ஏதோ கேரளத்து பிரச்சனை என்பது போலத்தான் இருந்தது. ஆனால் கொரோனா மற்ற மாநிலங்களை வந்து தாக்கிய போது தான், அது தன்னுடைய கைங்கரியங்களை காட்ட தொடங்கியபோது தான், எல்லோரும் உணர்ந்தார்கள் ஏன் பினராயி விஜயன் ஒரு போர்ப்படை தளபதி போல் களமாடிக் கொண்டிருந்தார் என்பதை. அதை உணர்ந்த போது பிற மாநிலங்கள் தாமதித்து விட்டன; அதனால் கொரோனாவின் கொடிய பிடிக்குள் மாட்டிக் கொண்டன.

இப்படி அடுத்தடுத்து இயற்கையின் பெரும் சீற்றங்கள். எல்லாவற்றையும் தோழர் பினராயி விஜயன் வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறார். பெரிய தொழில் வளர்ச்சி உள்ள மாநிலம் அல்ல கேரளம். ஆனால் சமூகக் காரணி என்ற அளவீடாகட்டும் இல்லை கல்விக் காரணி என்ற அளவீடாகட்டும் அகில இந்தியாவிலேயே முதன்மையான பாத்திரத்தில் கேரளம் எப்போதும் நிற்கிறது. அங்கே மக்களின் சமூக உணர்வும் அரசியல் உணர்வும் மிகவும் விழிப்புற்ற நிலையில் ஒருங்கே பயணிக்கக் கூடியவை. இந்த இடதுசாரிப் பாரம்பரியம் தான் கேரளத்தை இன்று ஒரு முன்னணி மாநிலமாக ஆக்கியிருக்கிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் தோழர் பினராயி விஜயன் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஆற்றல்மிக்க ஒரு அரசியல் தலைவராக எடுத்துக்காட்டியுள்ளன. கொரோனா வரலாற்றை எழுதும்போது உலகளவில் கியூபாவுக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினால், இந்தியாவுக்குள்ளேயே அந்த வரலாற்றுப் பாத்திரத்தை கேரளம் பெற்றிருக்கும். அதன் முன்னணியில் தோழர் பினராயி விஜயன் புன்னகையோடு நம் முன்னே தோன்றுவார்.

இன்று இந்த அருமையான தோழருக்குப் பிறந்தநாள். 76 வது பிறந்தநாள். கேரளத்தில் முதல்வர் என்பதை எல்லாம் கடந்து அகில இந்தியா முழுவதும் மக்களின் அபிமானத்தை வென்றிருக்கும் ஒரு இந்தியத் திருமகனின் பிறந்தநாள் என்ற வகையில் நம் எல்லோருக்குமே ஒரு பெருமையான நாள்.

லால் சலாம் காம்ரேட் பினராயி விஜயன்!