சாதிப் பிரச்சனையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்.

இந்திய சமுதாயத்தின் சிக்கலான எதார்த்த நிலைமைகளையும், சுதந்திரத்திற்கு முந்திய, பிந்திய பல பத்தாண்டு காலக்கட்டங்களில் அதன் பரிணாம வளர்ச்சியையும் புரிந்து கொண்டு, அலசி ஆராய்வதற்கு ஏற்ற அறிவியல் சித்தாந்தமான ,மார்க்சிய – லெனினியத்தை அக்கட்சி ஆயுதமாக தரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த எதார்த்த நிலையை போராட்டங்கள் மூலமாக மாற்றும் செயலுக்கு , ஜனநாயக புரட்சி மற்றும் அதிலிருந்து சோசலிசத்திற்கு மாறும் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, இந்த அறிவியல் சித்தாந்தம் வழிகாட்டியாகும்” என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய நோக்கம் குறித்து, 2015 மார்ச் 25 முதல் 29 வரை புதுச்சேரியில் நடைபெற்ற ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட,
” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் ” தனது முதல் பத்தியிலேயே பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் , இதே திட்டம் , “இந்தியாவின் சோசலிச எதிர்காலம்” என்ற தலைப்பில் உள்ள 10 வது அத்தியாயத்தில் முதல் பத்தியில் ” ஜனநாயகப் புரட்சி முழுமை அடைவதை தொடர்ந்து , இந்திய சமூக வளர்ச்சி பாதையானது அதன் சோசலிச எதிர் காலத்தை நோக்கி முன்னேற வேண்டும். இதன் ஆக்கக் கூறுகள் , ஜனநாயகப் புரட்சியின் கருப்பையிலேயே, குறிப்பாக அதன் பிற்பகுதியில் வளரும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நியாயமான சோசலிச சமுதாயத்திற்காக உறுதியாக நிற்கிறது. அந்த சமுதாயம் அனைத்து வகை சுரண்டல்களையும் வர்க்கம் சாதி பாலின வேறுபாடுகள் ஆகியவற்றிலிருந்து எழும் சமூக ஒடுக்கு முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர வழிவகுக்கும் . அந்த சமுதாயத்தில் மனிதனை மனிதன் சுரண்டுவது முடிவிற்கு வரும்” எனக் கூறுகிறது.

ஆக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம், அனைத்து வகை சுரண்டல்களையும்,ஒடுக்கு முறைகளையும் ஒழித்து சோசலிச சமுதாயத்தை படைப்பதாகும்.

சோசலிசம் என்பது கம்யூனிச சமூக அமைப்பிற்கு முந்தைய கட்டமாகும். நன்கு வளர்ச்சிபெற்ற சோசலிச சமூகப் பொருளாதார அமைப்பு ,கம்யூனிச சமூகப் பொருளாதார அமைப்பிற்கு வழிவிடும்.

கம்யூனிச சமூக அமைப்பை படைப்பதை இறுதி லட்சியமாக கொண்டுள்ளதால் தான் ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என பெயர் சூட்டப்பட்டது.

1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கான்பூரில் நடைபெற்ற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அமைப்பு மாநாட்டில் இப்பெயர் சூட்டப்பட்டது.

எனவே,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாதி, மத ,இன ,மொழி ,பாலின,நிற மற்றும் பொருளாதார அடிப்படையிலான, அனைத்து வகை சுரண்டல்களையும் ஒழித்து , மனிதர்கள் அனைவரும் சம வாய்ப்புகளுடன், சம உரிமைகளுடன், சமத்துவமாக,வர்க்கங்கள் அற்ற, சாதிகளற்ற,பாலின பாகுபாடுகளற்ற, சமுதாயத்தில் வாழும் நிலையை படைக்க உறுதி பூண்டுள்ளது.லட்சிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

கட்சி தொடங்கப்பட்ட 1925 டிசம்பர் 26 முதல் இந்த லட்சியத்தை ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கங்களாக அறிவித்து செயல்படுகிறது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் குறைகளைச் சொல்வதையே நோக்கமாகக் கொண்டு பல சீர்திருத்தவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன.

தாங்கள்தான் சமத்துவத்திற்காகப்,பொதுவுடைமைக்காக இந்தியத் தன்மைக்கு ஏற்ப செயல்படுகிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அவ்வாறு செயல்படவில்லை. அவர்களிடம் வர்க்கப்பார்வை மட்டுமே உள்ளது. சாதியை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்தியாவில் ,வர்க்கத்தோடு சாதியும் உள்ளது. எனவே, சாதியை ஒழிக்க, அதற்குக் காரணமான , புராணங்களை,இதிகாசங்களை, இந்துமதத்தை, கடவுளை ஒழித்த பிறகே, சமூக சமத்துவத்தை அடைந்த பிறகே , வர்க்கப் போராட்டம் மூலம் சோசலிசத்தை படைக்க முடியும் என வாதிடுகின்றனர். இதை கம்யூனிஸ்ட்டுகள் புரித்து கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

சாதி,மதம், கடவுள் போன்றவற்றின் தோற்றம் மற்றும் இருப்பு அதன் இயங்கியல் குறித்த அவர்களின் கருத்து முதல்வாதப் பார்வை ,அவர்களின் இந்த தவறான நிலைபாட்டிற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
சாதி,மதம், கடவுள் பாற்றிய மார்க்சிய அணுகுமுறை,வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை அவர்களிடம் இல்லை.

அவர்களின் இந்த நிலைபாடு, எதார்த்தத்தில் சாதி ஒழிப்பிற்கான வர்க்கப் போராட்டத்திலிருந்து உழைக்கும் மக்களை விலகி நிற்கச் செய்கிறது.
சாதி என்பது கருத்தியலாக ,” சாதி உணர்வாக” சமூகப் பொருளாதார அமைப்பின் மேல் கட்டுமானத்தில் மட்டும் இல்லை. அது உற்பத்தி உறவாக அடித்தலத்திலும் உள்ளது.

“சமூக வாழ்நிலையே சமூக உணர்வை தீர்மானிக்கிறது (Social being determines Social Consciouness)” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில், அடித்தளம் தான் அதாவது உற்பத்தி உறவுகள்தான் , மேற்கட்டுமானத்தில் மனிதர்களின் சித்தனைகளில் சாதிய உணர்வை உருவாக்குகிறது.

எனவே, சாதியத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை,பண்பாட்டுப் போராட்டத்தை முன்னெடுப்பதோடு, நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவை மாற்றுவதற்கான,சோசலிச உற்பத்தி உறவை உருவாக்குவதற்கான ,அடித்தளத்தை மாற்றுவதற்கான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பண்பாட்டுப் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் ஓர் பகுதிதான்.ஓர் கூறுதான். வர்க்கப் போராட்டத்தை வெறும் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே என சுருக்கிப் பார்க்கும் பார்வை தவறானது. வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதார,அரசியல் மற்றும் சித்தாந்த தளங்களில் நடத்தப்படும் மும்முனை போராட்டமாகும்.

இதை சில சீர்திருத்தவாத தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
எந்தவிதமான அறிவியல் அடிப்படையிலான சித்தாந்தமும் இல்லாமல், கற்பனாவாத சோசலிஷ்ட்டுகள் போல் செயல்படும், இந்த சீர்திருத்தவாத அமைப்புகளின் இத்தகைய கருத்துக்களுக்கு ,
பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் இரையாகிறார்கள். இது சாதி நிலவுவதற்கு, சாதியம்,தீண்டாமை கோலோச்சுவதற்குக் காரணமான உற்பத்தி உறவுகளை,பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து உழைக்கும் மக்களின் பரந்து பட்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பின்னடைவுகளை ,தடங்கல்களை உருவாக்குகிறது.

சாதி ஒழிப்பிற்கு ,மத ஒழிப்பு,புராண இதிகாச ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு போன்றவற்றை முன்நிபந்தனையாக்குவது, இவற்றின் மீது நம்பிக்கை உள்ள மக்களை வர்க்கப் போராட்டத்திலிருத்து அந்நியப் படுத்திவிடும். அது வர்க்கப் போராட்டத்தை பலமிழக்கச் செய்வதோடு, உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டுவதில் தடைகளை உருவாக்கும். இது சமூகப் பொருளாதார மாற்றத்தை காலதாமதப்படுத்தும்.

அதே சமயம்,சாதி ,மத ,மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தோடு இணைத்து செய்திட வேண்டும்.
சீர்திருத்தவாதிகளின் இத்தகைய அணுகுமுறை, நிலவும் சமூகப் பொருளாதார அமைப்பின் உற்பத்தி உறவுகளை காக்கவும், ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடரவுமே மறைமுகமாக உதவுகிறது.

ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய ஒடுக்குமுறை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒழித்திட, சுரண்டலை ஒழிக்க வேண்டும். சுரண்டலுக்குக் காரணமான உற்பத்திச் சாதனங்களில் உள்ள தனி உடைமையை ஒழிக்க வேண்டும்.அவற்றை சமூகமயமாக்க வேண்டும். அதற்கு பரந்த அளவிலான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வதின் மூலம் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியை சோசலித்தை கட்டி எழுப்புவதை நோக்கி நகர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்ய பல்வேறு முற்போக்காளர்கள், சீர்திருத்த இயங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இன்று இறுக்கமான சாதிக் கட்டமைப்பில் தளர்வு ஏற்பட்டு வருவதும் , வர்ணாசிரம முறை சரிந்து வருவதும் , தீண்டாமை குறைந்து வருவதும், வெறும் கருத்துப் பிரச்சாரங்களால், பண்பாட்டுப் போராட்டங்களால் மட்டுமே ஏற்பட்டதல்ல.

மாறாக, உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட முன்னேற்றம், அது உற்பத்தி உறவுகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் , உழைக்கும் மக்களை வர்க்க உணர்வூட்டி வர்க்க ரீதியாக அணி திரட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ,போன்றவை முக்கியப் பங்கை வகித்துள்ளது என்பதை இன்றைய எதார்த்த நிலை ,சமூக வளர்ச்சிப் போக்கு உணர்த்துகிறது.
எனவே, மார்க்சிய – லெனினியம் என்ற மாபெரும் அறிவியல் ரீதியான சித்தாந்த ஆயுதத்தை, இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கு, சோசலிசத்தை கட்டி எழுப்புவதற்கு இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப பயன்படுத்திட வேண்டும்.

இத்நோக்கில் தான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க மாநாட்டிற்கான தலைமை உரையில் , சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் அவர்கள், ” தீண்டாமைப் பிரச்சனை என்பது ஓர் சுத்தமான பொருளாதாரப் பிரச்சனை….தீண்டாமை பிரச்சனை என்பது, முக்கியமாக , இந்த இந்திய வெகுமக்களின் பொருளாதாரச் சார்புநிலையுடன் தொடர்புடையது ( ..The question of Untouchability is essentially associated with economic dependence of the vast mass of these Indians) ” என்றார்.

அதே போன்று,” தீண்டாமை என்பது அடிப்படையில் ஒரு விவசாயப் பிரச்சனையாகும்” என்றார்.

அதே சிங்கார வேலர், சாதி,தீண்டாமை ஒழிப்பிற்கு சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றினால் மட்டும் போதாது எனவும் கூறியுள்ளார் .
சாதி ஒழிப்பிற்கு அரசியல்,பொருளாதார ,சித்தாந்த போராட்டம் அவசியம் எனக் கருதினார்.

இதே அணுகுமுறையை, மார்க்சிய பேராசன் தோழர் ஜீவானந்தம் மற்றும் மார்க்சிய அறிஞர் பேராசிரியர்.நா.வானமாமலை போன்றோரும் வலியுறுத்தினர்.

தோழர் சிங்கார வேலரின் தலைமை உரை என்பது இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு, எதிர்காலத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள உதவியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கையாக அமைந்தது.

ஏகாதிபத்தியம் ,முதலாளித்துவம் , நில பிரபுத்துவம் இவை மூன்றும் வர்க்கப் போராட்டத்தின் மூலம் எதிக்கப்பட வேண்டும் என்றார்.
எனவே, கம்யூனிஸ்ட்கள் சாதியப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை என்ற வாதம் தவறானதாகும்.

மேம்போக்கானதாகும்.அறிவியல் அடிப்படை இல்லாததாகும்.
மார்க்சியம் தான்,சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொர்புடையது. சாதி என்பது பொருளாதாரச் சுரண்டலுக்கான ஏற்பாடு என்ற சரியான பார்வை உள்ளது.

காரல் மார்க்ஸ் அவர்கள் சாதி என்பது உழைப்புப் பிரிவினையோடு தொடர்புடையது என்பதை தெளிவாகக் கூறினார்.

மார்க்ஸ், ஏங்கல்சுடன் இணைந்து எழுதிய “ஜெர்மன் சித்தாந்தம் ” என்ற நூலில் சாதியை பற்றி முதன் முறையாக பேசியிருக்கிறார்.
மூலதனம் நூலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் சாதிபற்றிய கருத்துக்களை கூறியுள்ளார்.

உழைப்புப்பிரிவினை சாதியைத்தை உருவாக்கியதா? அல்லது சாதி உழைப்புப் பிரிவினையை உருவாக்கியதா என்ற கேள்விக்கு, மார்க்சை பொறுத்தவரை உழைப்புப்பிரிவினையே முதன்மையானது.காலப்போக்கில் அதுவே சாதித் தொழில்களாக மாறியது என்பதேயாகும்.

” சாதிய விதிமுறை கூட ஒருவகையான உழைப்புப்பிரிவினைதான்” என ” தத்துவத்தின் வறுமை” என்ற நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
” சட்டம் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் நில உரிமையை நிலைத்திருக்கச் செய்யலாம் அல்லது பாரம்பரிய உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம். இவ்வாறு சாதி அமைப்பாக வலுப்படுத்தலில் அது முடிவடைகிறது” என அரசியல் பொருளாதர விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலில் 1859 இல் மார்க்ஸ் கூறியுள்ளார்.

” தந்தை வழி சமூக அமைப்பின் கீழ், சாதி அமைப்பின் கீழ் ,நிலப் பிரபுத்துவத்தின் கீழ், கூட்டு ஸ்தான அமைப்பின் கீழ் , நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்தது . சட்டம் இற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாரா! இல்லை. அவை பொருளாயாத உற்பத்திச் சூழலிருந்து பிறப்பவை; பின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்த வகையில் உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகின்றன” என “தத்துவத்தில் வறுமை” என்ற நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினைக்கும் பொறுந்தும்.

எனவே, சாதியை பற்றிய மார்க்சின் பார்வை பொருளாயாத அடிப்படையை கொண்டது.

சீர்திருத்த வாதிகளின் கருத்தோ ,கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது.
எனவே தான் சாதி ஒழிப்பு பிரச்சனையில், அணுகுமுறைகளில் ,
போராட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே, சாதிய ஒடுக்குமுறை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்ட, மார்க்சிய வழியில் நின்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை மனதில் ஏந்தி,பின்பற்றி செயல்படுவோம். போராடுவோம்.
கம்யூனிஸ்ட் கட்சி சாதிப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை என்பது தவறு. இந்தியக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து சாதி பிரச்சனையில் அக்கறை செலுத்தியே வந்துள்ளது. மாமேதை மாக்சும் இப்பிரச்சனையில் சரியான அணுகுமுறையை மேற்கொண்டார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

( டிசம்பர் 25 – டிசம்பர் 31 ,ஜன சக்தியில் வெளிவந்துள்ள ,டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அவர்களின் கட்டுரை ,திருத்தப்பட்டது)