செல்வி ஃபாத்திமா ஷேக்

எத்தனை பேருக்கு குறிப்பாக முஸ்லீம் சமுதாய பெண்மணிகளுக்கும் சமூக சீர்திருத்த வாதிகளுக்கும் இவரைப் பற்றி தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவரைப்பற்றி முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் கல்வி மறுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமும் கூட.

மஹாராஷ்டிர மாநிலம் புனே யில் பிறந்த இவருக்கு ஒரு சகோதரர் உண்டு. உஸ்மான் ஷேக் என்ற அவரும் கல்வி மறுக்கப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வி கற்பிக்க தனது சகோதரி யான ஃபாத்திமா ஷேக்கிற்கு உதவியாகவே கடைசிவரை வாழ்ந்துள்ளார்.

செல்வி ஃபாத்திமா ஷேக் கடைசிவரை திருமணமே செய்யாமல் பெண்களின் மறுமலர்ச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லீம் பெண்களுக்காகவும் உயர்சாதி ஆதிக்க வாதிகளால் கல்வி மறுக்கப்பட்ட அத்தனை மக்களுக்காகவும் தன் வாழ்க்கையை அற்பணித்தார்.

மகாத்மா ஜோதிபாய் புலேயும் மாயி சாவித்திரிபாய் புலேயும் பட்டியல் இன மக்களுக்கு கல்வி கற்பித்தமைக்காக ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைக்கு ஆளாகி விரட்டப்பட்ட போது அவர்கள் இருவருக்கும் ஃபாத்திமா ஷேக்கும், உஸ்மான் ஷேக்கும் அவர்கள் இருவரையும் நேரில் சென்று அழைத்து வந்து தங்கள் வீட்டில் தங்க வைத்ததோடல்லாமல் கடைசிவரையில் அடைக்கலமும் கொடுத்தனர்.

மாயி சாவித்திரி பாய் புலேயின் கல்வி இயக்கம் இவரது இல்லத்திலேயே இயங்கியதும், மகாத்மா ஜோதிபாய் புலேயும், மாயி சாவித்திரி பாய் புலேயும் செல்வி ஃபாத்திமா ஷேக்கும், உஸ்மான் ஷேக்கும் இணைந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லீம் பெண் களுக்காகவும் தங்களது வீட்டிலேயே கல்வி இயக்கமும் ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கான முதல் நூலகமும் நடத்தினார்கள் என்பது மறைக்கப்பட்ட, மறந்துவிட்ட விடயமும் கூட.

இன்று செல்வி ஃபாத்திமா ஷேக் கின் 191 வது பிறந்த நாள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, கல்வி மறுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கான கல்வி வழங்கியதிலும், தனது மாலி சமுதாய மக்களினாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட மகாத்மா புலே தம்பதியினரின் கல்விப் பணி தொய்வின்றி நடந்திட தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அவரது பணியை என்றும் நினைவு கூர்வோம்.