இதற்கு முக்கிய காரணம் தேர்தலுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஏராளமானவர்களோடு உரையாடி இருந்தாலும் இதை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.
தேர்தல் பரப்புரையிலிருந்த மருத்துவர் எழிலன் அவர்களை சூளைமேடு பகுதியில் சந்தித்து விட்டு வாடகை காரில் திரும்பி வரும்போது ஓட்டுநர் தம்பியுடனான உரையாடல்.
நான் வேட்பாளரைச் சந்தித்து விட்டு வருகிறேன் என்பதை நன்கு அறிவார். அதனால் அவரும் என்னிடத்தில் தேர்தல் குறித்துப் பேசிக் கொண்டே வந்தார்.
அவர் புதுக்கோட்டைப் பகுதியைச் சார்ந்தவர். அவர்கள் வீடு, அவர்கள் சித்தப்பா வீடு சேர்த்து மொத்தம் 11 பேர். மூன்று தலைமுறைக்கு மேலாகத் திராவிடக் குடும்பத்தினர்.
திராவிட இயக்கம் நமது மண்ணில் ஏற்படுத்திய தாக்கம் அதன் காரணமாக எப்படிக் கல்வி பரவலாகியது, சமூக நீதி ஓங்கியது என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டே வந்தோம்.
இம்முறை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், அமைக்க வேண்டும் என உறுதியாகச் சொன்னேன். அந்தத் தம்பியும் ஆமோதித்தார்.
பாதித் தூரம் கூட கடந்து இருக்க மாட்டோம்; திடீரென என்னிடம் ‘அண்ணா உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கட்டுமா?’ என்றார்.
‘சொல்லுங்க தம்பி’ என்றேன்.
‘இந்தத் தடவை மட்டும் தயவுசெய்து டிவிகேக்கு ஓட்டு போடுங்க’ என்றார். என் காதில் சரியாக விழவில்லையோ என்னவோ தெரியவில்லை, ‘டிஎம்கே தானே நிச்சயமாக’ என்றேன். ‘இல்லை அண்ணா விஜய்க்கு ஓட்டு போடுங்க’ என்றார்.
திடுக்கிட்டேன்.
‘என்னப்பா சொல்றே, இவ்வளவு நேரம் நம்ம பேசினதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே’ என்றேன்.
அதற்குப் பிறகு அந்தத் தம்பி பேசியது நான் சற்றும் எதிர்பார்க்காதது.
அவன் சென்னைக்கு அருகிலுள்ள அந்தப் பிரம்மாண்டமான பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவன். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய அப்பா சிங்கப்பூரில் பணி செய்து கொண்டிருக்கிறார். புதுக்கோட்டையிலுள்ள குடும்பத்திற்கும் இவன் படிப்பதற்கும் சிங்கப்பூரில் அல்லும் பகலும் உழைத்து பணம் அனுப்புகிறார். இவன் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘கால் டாக்ஸி’ ஓட்டி அதில் வரும் பணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதுவரை எந்த ‘அரியர்ஸ்’ இல்லாமல், இப்போது இறுதி ஆண்டு வெற்றிகரமாக முடிப்பதில் (அதுவும் ‘டிஸ்டிங்க்ஷன்’ என்று பெருமிதமாகச் சொன்னான்) தீவிரமாக உள்ளான்.
என்னுடைய படிப்பு முடிந்து நான் ஒரு பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்று என்னுடைய குடும்பம் கனவு கண்டு கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் நான் படித்து வெளியே வந்தால் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும், எப்படிப்பட்ட வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை. நிச்சயமாக ஏதோ ஒரு வேலை கிடைத்துவிடும். சம்பளம்? அதை வைத்துக்கொண்டு இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ள வசதிகளைப் பெருக்கிக் கொள்ளக் குறைந்தது 10-15 ஆண்டுகளாவது ஆகும்.
இந்த இடத்தில் நான் குறுக்கிட்டு ‘எங்களுக்கு 25 ஆண்டுகள் ஆகியது’ என்றேன்.
‘அண்ணா, சார் நான் அதைக் குறைவாகச் சொல்லவில்லை;
அதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன். நான் சொல்ல வருவது வேறு. ஒரு பக்கம் நாங்கள் இப்படிப் போராடிக் கொண்டிருக்க எந்தப் படிப்பும் சரியா படிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவன், ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து ஏதாவது ஒரு பொறுப்பை வைத்துக்கொண்டு அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்றால் அய்ந்து ஆண்டுகளில், அரசாங்க சார்பாக ஏதாவது காண்ட்ராக்ட் , இல்லையென்றால் உதவி எனக் கேட்டு வருபவர்களிடம் ‘உட்கார்ந்தால் காசு நின்றால் காசு’ என வாங்கிக்கொண்டு, கண் முன்னாலேயே கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறான்; ஒரு பெரிய கார் வாங்கி நிறுத்தறான். அப்படி என்றால் நான் படித்த படிப்பு ஓடும் உழைப்புக்கு என்ன மரியாதை? நான் மட்டும் சிரமப்பட வேண்டும் இவர்கள் மட்டும் கட்சிக்காரன் என்ற போர்வையில் எல்லாம் அனுபவிக்க வேண்டுமா?’
‘தம்பி நீ சொல்வது போல அரசியல் வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல; அவர்களுக்கும் பலவிதமான சிக்கல்கள் மன உளைச்சல்கள் உண்டு. நீ யாரோ ஒன்று இரண்டு பேரைப் பார்த்து முடிவு செய்யாதே என்றேன்’.
‘அண்ணா நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாது எங்களைப் போன்ற கிராமத்துப் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். கண் முன்னாலே நாங்கள் பார்க்கிறோம்.’
‘நீ வாக்களிக்கச் சொல்லும் அந்தக் கட்சியினரோ அதன் தலைவரோ எந்தவிதமான திட்டத்தையோ கொள்கையோ நம்பிக்கையோ தரவில்லையே எதைக் கொண்டு நீங்கள் அவரை தேர்ந்தெடுப்பீர்கள்’ என்றேன்.
எங்களுக்கு வேண்டியது மாற்றம்; மாற்றம் என்றால் இப்போதிருக்கும் சிஸ்டம் (சில காலங்களுக்கு முன்பு ஒருவர் சிஷ்டம் சரி இல்லை என்று சொன்னார்) உடைத்தெறிக்கப்பட வேண்டும்.
இறங்கும்போது ‘தம்பி தயவு செய்து உங்கள் முடிவைப் பரிசீலனை செய்யுங்கள்’ என்றேன். அதற்கு அவர் ‘அண்ணா எங்கள் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம்; எங்கள் 11 ஓட்டும் இந்த முறை திமுகவுக்கு இல்லை என்றான். தயவு செய்து நீங்களும் விஜய்கே ஓட்டு போடுங்கள்’ என்றார்
இது தேர்தலுக்கு முன்பு.
தேர்தல் முடிந்த அன்று எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள காவல், துப்புரவு, தோட்டம் பணிகள் செய்பவர்களும் மற்றும் ஓட்டுநர்களோடும் பேசினேன். 25 பேர் இருப்பார்கள். குடும்பமாக நூறு பேர். இவர்களெல்லாம் அருகில் ஆயிரம் விளக்கு பகுதியில் வசிப்பவர்கள்.
‘எல்லாம் நம்ம டாக்டருக்கு தானே என்று கேட்டபோது’, ‘இல்ல சார் எங்க இடத்துல எல்லாருமே இந்தத் தடவை விஜய்க்கு சார்’ என்றார்கள்.
அன்று தொடங்கி நேற்று வரை சந்தித்த ஏராளமானவர்கள் குறிப்பாகக் கோடைக்காலப் பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்கள், இடையில் மருத்துவமனையில் சந்தித்த மருத்துவர்கள், சமீபத்தில் மதுரைக்குப் பக்கத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு கண்ணில் கண்ட விடுதி மாணவர்களோடு உரையாடிய போது ‘எங்கும் எதிலும் விஜய்’ குரல்தான் கேட்க முடிந்தது.
இவர்கள் எல்லாம் நன்கு விவரம் அறிந்தவர்கள். ஆனால் தம் எதிர்காலம் குறித்து அச்சத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களிடையே ஒரு பதற்றம் தெரிந்தது.
முதலமைச்சர் அவர்களை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்தது. உச்சக்கட்ட எதிர்ப்பு மனநிலை. அவரது தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமது தொகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அண்ணன் மாசு மருத்துவர் எழிலன் இவர்களெல்லாம் தோற்கடிக்கப்பட்டார்கள் என்றால் அதுவும் கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றியும், நீண்ட காலத் திட்டங்கள் வகுத்தபோதும், ஒரு கட்சி தோல்வி அடைகிறது என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக விஜய் மீதோ மக்கள் மீதோ பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ள முடியாது.
மக்களின் நாடித்துடிப்பைச் சரியாகக் கணித்துச் சொல்லக்கூடியவர்களை ஆட்சியாளர்கள் வைத்துக் கொள்ளவில்லை என்பது தான் பரிதாபம்.
நேற்று வேறு ஒரு நண்பர் அவருக்கும் என்னைப் போல அய்யப்பாடு இருந்திருக்கும் போல. மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் (கட்சியில் அல்ல, அரசாங்கத்தில் – ஆனால் அரசு ஊழியர் அல்ல) கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே அசால்டாக 130 தொகுதிகளுக்குக் குறைவில்லாமல் நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னாராம்.
என்ன காரணம் என்றால் இவர்களைப் போன்றவர்கள்தான் மக்களுடைய ‘பல்ஸ்’ ஆட்சியாளர்களுக்குச் செல்ல விடாமல் தடுத்து விடுகிறார்கள்.
என்னுடைய ஆதங்கம் என்னைப் போன்ற எளியவர்களுக்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை கொஞ்சம் முயற்சி செய்கிறபோதே கிடைக்கும் போது அரசின் இன்டெலிஜென்ஸ் துறைகள் என்ன செய்தார்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது
தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களின் தேவை வேறு. மாநிலங்களுக்கு மாநிலம் அது வேறுபடும். தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் தேவை வேறு.
கஞ்சி மட்டுமே குடித்து குடிசையிலே வாழும் குழந்தைக்குச் சோறு சொர்க்கம். அது கிடைக்கவில்லை என்றால் அந்தக் குழந்தை அழும்.
அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சினை இல்லாத வீட்டுக் குழந்தை ‘இந்த பிராண்ட் ஷூ இல்லை என்றால் பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என அழும். அதனுடைய அடிப்படைத் தேவை அந்த ஷூ.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டாவது நிலையில்தான் உள்ளார்கள். அவர்களது தேவை நமக்கு வேடிக்கையாக இருக்கும்; ஆனால் அவர்களுக்கு அது அடிப்படை.
பொது வாகனங்கள் பயன்படுத்திய முந்தைய தலைமுறையினர் வேறு. முதன் முதலாக வீட்டிற்குச் சைக்கிள் வந்தபோது அதைச் சுற்றிச் சுற்றி வந்து மகிழ்ச்சி அடைந்து வரவேற்பறையிலேயே இடம் கொடுத்து வைத்திருந்தது ஒரு தலைமுறை. மோட்டார் சைக்கிள் கனவு நிறைவேறும் போது உற்சாகத்தில் துள்ளிய தலைமுறை ஒன்று. கார் வாங்கி ஓட்ட முடியுமா நம் தலைமுறையில் என்பது நனவாகிப் பரவலாக கார்கள் வந்த தலைமுறை இது.
ஆகவே இன்று படித்து வருபவன் எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கும். சைக்கிளிலிருந்து அவன் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
இன்னொரு விஷயம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தாக்கத்தால் பல்வேறு ஐடி கம்பெனிகள் ஆட்குறைப்பு, மூடு விழா நடத்தி வருகின்றன. ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகள் பறிபோய்விட்டன. உள்ளே இருப்பவர்களும் இன்று நீ நாளை நான் என்ற அச்சத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இத்துறைநரும் தமது இயலாமை ஆற்றாமை இவற்றை எங்கே வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஒரு நல்ல அரசாங்கத்திற்கு மூடு விழா நடத்தி விட்டார்கள்.
எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுக்குப் பல்வேறு அருமையான திட்டங்கள் செயற்படுத்திய போதும் கூட பல பதிப்பாளர் எழுத்தாளர்கள் திமுக எதிர்ப்பு நிலையிலேயே இருந்ததைக் கவனித்தேன். எப்போதுமே திமுகவை எதிர்ப்பவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. காலங்காலமாக ஆதரவு தெரிவித்தவர்கள் ஏதோ ஒரு வெறுப்பு நிலைக்குச் சென்று விட்டார்கள். என் மீது கூட கோபப்பட்டார்கள்; ஏதோ நான் மட்டும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுச் சம்பாதித்துவிட்டேன் என.
நான் எந்தக் காலத்திலும் எப்போதும் திமுகவோ அண்ணா திமுகவோ நண்பர்கள் பொறுப்பிற்கு வரும்போது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு அதற்குப் பிறகு எப்போதும் அவர்களிடத்தில் உதவி என்று சென்றதே இல்லை. காரணம் என்னுடைய சமூக செயற்பாட்டுடன் வியாபாரத்தை என்றும் கலந்ததில்லை அதனால் எனக்கு எந்த மன உளைச்சலும் இருந்ததில்லை.
எந்தக் கட்சியும் சாராமல் திராவிட இயக்கப் பற்றுதல் மட்டுமே மூச்சாகக் கொண்டு தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரே நம்பிக்கையாக உள்ள கட்சி திமுக.
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் சமூக நீதி, பெண் உரிமை அனைவருக்கும் கல்வி என்பதை நோக்கியே பயணித்தவர்கள்; அதற்காக அதிகமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள். அதைக் குறித்துக் கூட நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். வரும் நாட்களில் அதைப் பதிவிடுகிறேன்.
இன்று காலை நன்கறிந்த பெண்மணி ஒருவர் ஈரோட்டிலிருந்து அழைத்து ‘என்ன சென்னையில் சொதப்பி விட்டீர்களே’ என்றார்.
சென்னையில் நன்கறிந்த சில வேட்பாளர்கள் 2021ஆம் ஆண்டு தேர்தல் போல் அல்லாமல் இம்முறை எளிதாக வெற்றி பெற்று விடுவோம் எனக் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார்களோ எனத் தோன்றுகிறது.
பதிவு நீண்டு கொண்டே போகிறது. ஆனால் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
ஒரு நண்பர் தொடர்ந்து நெய்வேலிக்குப் பேருந்தில் சென்று விட்டு வருபவர். விஜய் தேர்தல் காலத்திற்கு முன்பாக எங்கேயாவது உரை நிகழ்த்தும்போது நேரலை வந்தால் பேருந்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் தங்கள் கைப்பேசியில் லைவாக உரை கேட்டார்கள் என்று சொல்லுவார். நான் சிரித்துக் கொண்டே விஜய்யின் சினிமா பார்ப்பது போல, இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னேன்.
மக்களின் நாடித் துடிப்பைச் சரியான பாதைகள் வழியாக ஆளுபவர்களுக்குச் செல்ல வேண்டும்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிக்கு வெற்றி தோல்வி என்பது இரண்டுமே ஒன்று.
திமுகவுக்குத் தோல்வி புதியதல்ல
இதுவும் கடந்து போகும்.
வெற்றி பெற்றால் அண்ணா வழி.
மற்ற எல்லா நேரங்களிலும் பெரியார் வழி.