மனசாட்சியை உலுக்கிய வார்த்தைகள்

மார்க்சின் மனைவி ஜென்னி சொல்லுகிறார்:

“உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது. துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது. எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன. வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை.

இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள். என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை. நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று. அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான். என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன.

கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள். பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம். பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று.

அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக்
காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி
வாங்கவும் காசு இல்லை.

மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த டாஸ் கேபிடல் மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்க்கை.