வலது தீவிரவாதத்தின் நிழலில் – 07: ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்

இரண்டாம் உலகப்போரையடுத்து நாசிசக் கோட்பாட்டை ஜேர்மனி தடைசெய்தது. அது மனிதாபிமானமற்றது என்பதை ஜேர்மனியர்கள் படிப்படியாக ஏற்றுக் கொண்டார்கள்.

இந்தப் பின்புலத்தில் இன்றைய நிலையில் செல்வாக்குள்ளதாக அதிவலது எவ்வாறு மாறியது? அதிவலது தீவிரவாதத்தின் மோசமான விளைவுகளை வேறெவரையும் விட நன்கறிந்தவர்கள் ஜேர்மனியர்கள். அவ்வாறு இருந்தபோதும் இன்று அதே சிந்தாந்தம் எவ்வாறு கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளது? இது ஆராயப்பட வேண்டியது. இதற்கான வரலாற்றுக் காரணங்களை தேடுவது பயனுள்ளது.  

கடந்தவாரக் கட்டுரையில் நாஜிகளுக்கும் அமெரிக்கப் புலனாய்வுக்குமான நெருக்கமான உறவும் ஐரோப்பாவில் கம்யூனிச அபாயத்தை எதிர்கொள்ள நாஜிகள் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் சுருக்கமாகப் பார்த்தோம். இன்று அதை விரிவாக நோக்கலாம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவின் பின்னர் நாஜிப் போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா பாதுகாத்தது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக வைக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதை சோவியத் ஒன்றியத்தின் பிரசாரம் என்றும் கம்யூனிச சதி என்றும் மேற்குலக ஊடகங்கள் எழுதி வந்தன. ஆனால் காலப்போக்கில் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா முன்னெடுத்த Operation Paperclip பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதில் இருந்து நாஜிகளுக்கும் அமெரிக்க உளவுத்துறைக்குமான உறவு முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. 

Operation Paperclip என்பது, நாஜி விஞ்ஞானிகளை அமெரிக்க உளவுத்துறை எவ்வாறு அமெரிக்காவுக்கு கடத்திவரும் நடவடிக்கையாகும். 

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், 1944ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘ஒபரேஷன் பேப்பர்கிளிப்’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட ஒரு இரகசிய பணியைத் தொடங்கின. உயிரியல் மற்றும் இரசாயனப் பொருட்கள் உட்பட ஜெர்மன் ஆயுதங்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

ஆனால் அமெரிக்க அறிவியல் புலனாய்வு அதிகாரிகள் ஆயுதங்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்பதை விரைவாக உணர்ந்தனர். நாஜி விஞ்ஞானிகளையே அமெரிக்காவிற்கு அழைத்து வர வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானித்தது. இதன்கீழ் ஹிட்லரின் கீழ் பணியாற்றிய 1,600 விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது குற்றங்கள் – பெரும்பாலானவை மனிதகுலத்திற்கு எதிரானவை – மன்னிக்கப்பட்டன.  அமெரிக்காவிற்கு கொண்டு வந்த விஞ்ஞானிகளின் கடந்த காலத்தை மறைக்க அமெரிக்க அரசாங்கம் மிகுந்த முயற்சி எடுத்தது. இவர்களில் மனிதனை நிலவுக்கு அழைத்துச் சென்ற ரொக்கெட்டுகளை வடிவமைத்த வெர்ன்ஹர் வான் பிரவுன், நாசாவின் தலைவராக வந்த கேர்ட் டிபொஸ் எனப் பலர் அடங்குகின்றனர். 

யூதர்களுக்கு எதிராக அதிபாதகங்களைச் நடைமுறைப்படுத்திய நாஜி வைத்தியரான பென்சிங்கர் இவ்வாறு அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டோரில் ஒருவர். அவரது குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்தபோது அவருக்கான பெருமைமிகு அஞ்சலியை ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை எழுதியது. அவரது குற்றங்களும் கடந்தகாலமும் மறைக்கப்பட்டு ear thermometer யைக் கண்டுபிடித்து மனிதகுலத்திற்கு மாபெரும் பணியாற்றினார் என்று புகழ்பாடியது. 

ஒபரேஷன் பேப்பர்கிளிப் பற்றித் தெரிந்துகொள்ள அனீ ஜேக்கப்சன் எழுதிய Operation Paperclip: The Secret Intelligence Program That Brought Nazi Scientists To America என்ற நூலை வாசிக்கலாம். 

இதற்கு மேலாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல நாஜி போர்க் குற்றவாளிகளை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எவ்வாறு பாதுகாத்தனர் என்பது பற்றிய புதிய விவரங்களை ஓர் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இவ்வறிக்கை கெடுபிடிப்போரை எதிர்கொண்டதால், 1946 ஆம் ஆண்டிலேயே நாஜி குற்றவாளிகளை தண்டிப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. 

நாஜிகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்கான சட்டமூலம் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்காவில் சிலகாலம் முன்பு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே குறித்த விடயங்கள் பொதுவெளிக்கு வந்தன. ‘ஹிட்லரின் நிழல்: நாஜி போர்க் குற்றவாளிகள், அமெரிக்க உளவுத்துறை மற்றும் கெடுபிடிப்போர்’  (Hitler’s Shadow: Nazi War Criminals, US Intelligence and the Cold War) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேச நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க் குற்றவாளிகள் பயனுள்ளவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்தால் அவர்களைப் பாதுகாத்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

‘சந்தேகத்திற்கு இடமின்றி, கெடுபிடிப்போரின் ஆரம்பம் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய செயல்பாடுகள், புதிய முன்னுரிமைகள் மற்றும் புதிய எதிரிகளை வழங்கியது. ஜேர்மனியர்கள் அல்லது ஜேர்மன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதோ தண்டிப்பதோ முக்கியமானதல்ல. மாறாக சில சமயங்களில், அவ்வாறு செய்வது எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்கும் போலவிருந்தது’ என்று அறிக்கை குறிப்பிடுகின்றது. 

இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்ற எண்ணற்ற உதாரணங்களில் ஒன்றை மட்டும் நோக்கலாம். ருடால்ஃப் மில்ட்னர், நாஜி அதிகாரியாகப் பணியாற்றியவர். இன்றும் யூதர்களின் மீதான கொடும்பாதகத்தின் சாட்சியாகக் கொள்ளப்படுகின்ற ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர். இதை அமெரிக்கா நன்கு அறிந்திருந்தது.  போருக்குப் பின்னர் வியன்னாவில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, அமெரிக்க அதிகாரிகள் அவரை ‘மிகவும் நம்பகமானவர் மற்றும் ஒத்துழைப்பவர்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தனர் என்று சொல்லும் அறிக்கை, ஆஷ்விட்ஸில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மில்ட்னர், ‘ஒழுங்கைப் பாதுகாக்க மற்றும் நாசவேலைகளைத் தடுக்க, போலந்து மற்றும் சிலேசியாவில் உள்ள ஜேர்மனியர்கள் அதைச் செய்ய வேண்டும்’ என்று கூறி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றதாகக் கூறுகிறது. இவ்வறிக்கை அமெரிக்க உளவுத்துறை அவர் நியூரேம்பேர்க் தீர்ப்பாயத்தில் இருந்து தப்பி தென்னமெரிக்கா செல்வதற்கு உதவியது என்று கூறுகிறது. இவ்வாறு பலரை அமெரிக்கா பாதுகாப்பாகத் தப்புவதற்கு உதவியது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அதேபோலவே பல நாஜிகள் அமெரிக்க உளவுத்துறையால் மன்னிக்கப்பட்டு ஜேர்மனியில் இயங்க அனுமதிக்கப்பட்டார்கள். வெளித்தோற்றத்திற்கு ‘நாசிச சிந்தனைகளுக்கு தடை’ இருந்தபோது நடைமுறையில் அது இருக்கவில்லை. மாறாக கம்யூனிச அபாயத்திற்கு எதிரான நல்ல கூட்டாளிகளாக நாஜிகள் கருதப்பட்டார்கள். எனவே அச்சித்தாந்தம் உயிர்ப்புடன் இருக்கவும் இயங்கவும் அமைப்பாகவும் அனுமதிக்கப்பட்டது.

1945க்குப் பிறகு சோவியத் கூட்டமைப்பு மேற்குலகின் பொது எதிரியாக இருந்ததால், கெடுபிடிப்போரின் புதிய முனைகளில் அவர்களின் திறமைகள் பயனுள்ளதாக இருந்தால், முன்னாள் நாஜிக்கள் நீதியிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை நேச நாட்டு அதிகாரிகள் பரவலாக ஏற்றுக்கொண்டதாக பல வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல 2010ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஸ்டாசி ஆவணக்காப்பகத்தின் அதிகாரிகள் மேற்கு ஜேர்மனியின் இரகசிய சேவை முன்னாள் நாஜிக் குற்றவாளிகளை பணியமர்த்துவதைக் காட்டும் சில தகவல்களை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் சில முக்கிய தகவல்கள் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.  வெளியிடப்பட்ட தகவல்கள், மேற்கு ஜேர்மன் உளவுத்துறை எவ்வாறு முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க் குற்றவாளிகளைப் பயன்படுத்தியது என்பதைக் காட்டுகிறது. ஜேர்மன் உளவுத்துறையின் கடந்த காலத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் ஸ்டாசி கோப்புகளில் நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளன.  முன்னாள் கம்யூனிஸ்ட் கிழக்கு ஜெர்மனியின் இரகசியப் பொலிஸாரான ஸ்டாசியால் உன்னிப்பாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான தகவல்களைக் கொண்ட தகவல்களின் பரந்த காப்பகமே இப்போது ஸ்டாசி ஆவணக் காப்பகமாகும்.  

வெளியாகியிருப்பவை, ஜேர்மனியின் மிக மோசமான இரகசியங்களில் ஒன்றாகும். ஆயினும்கூட, மேற்கு ஜேர்மனியின் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் அரசியலில் முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க்குற்றவாளிகள் இருப்பதை இன்னும் கேள்விகள் சூழ்ந்துள்ளன. அந்த மக்கள் யார், அவர்கள் நாஜி ஜெர்மனியிலும் பின்னர் போருக்குப் பிந்தைய மேற்கு ஜெர்மனியிலும் என்ன பதவிகளை வகித்தனர்? இவை இன்னமும் பதில் தெரியா வினாக்கள். ஆனால் இவை ஜேர்மனியில் நாசிசம் எவ்வாறு தப்பிப்பிழைத்தது என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.