அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தவிர்க்கவியலாதது

இந்நிலையில், ஏறத்தாள 65 நாள்களாக இன்றுவரை நாடு பூராகவும் தொடரும் போராட்டங்கள், வலுப்பெற்று இருக்கும் நிலையில், பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், கல்விச் சமூகம் ஆகியோர் மத்தியில், இரண்டு வகையான கருத்துருவாக்கங்கள் காணப்படுகின்றன. இவை, அவர்களது போராட்டத்துக்கு சார்பானவையாகவும் எதிரானவையாகவும் உள்ளன.

ஒன்று: அதிபர், ஆசிரியர்கள் செய்வது தவறு! ‘அதிபர், ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால், மாணவர்களது கல்வி நடவடிக்கைகள், சீர்குலைந்துள்ளன. பரீட்சைகள் இடம்பெறவேண்டிய காலப்பகுதியில் அவை இடம்பெறாமல் போவதால், மாணவர்களது கல்விக்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. மாணவர்கள் கல்வியில் பற்றில்லாமல், ஆர்வமிழந்து சென்றுகொண்டிருக்கின்றார்கள்’ என்ற ஆதங்கத்தில் ஒருசாராரும்,

தமது பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலம் பாழாகின்றது; மக்களையும் எதிர்கால சந்ததியினரான மாணவர்களையும் வழிநடத்தி அறிவுரை வழங்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த தொழில் நிலையில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் இவ்வாறான செயலைச் செய்வது கண்டிக்கத்தக்கது என மற்றுமொரு சாராரும்,

கொரோனா வைரஸ் பரவலால், மக்கள் தினமும் பொது இடங்களில் மரணிக்கும் சூழலில், சம்பளம் போதாது என்று கேட்டு போராட்டம் நடத்தும் நேரம் இதுவல்ல என்று இன்னொரு சாராரும் கருதுகின்றனர்.

இங்கு அவர்கள், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வி குறித்தும், மாணவர்கள் தமது கல்வி குறித்தும் சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகவும் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது: ஆசிரியர்கள் செய்வது சரி! போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும் என்றிருக்கும் ஒரு நாட்டில், போராடித்தான் ஆகவேண்டும். போராட்டம் என்று வந்துவிட்டால், அதனால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். போராட்டத்துக்கான காரணங்களை ஏற்படுத்தாது, பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை என்று, போராட்டத்தின் நியாயம் குறித்து ஆராயவேண்டியுள்ளது.

இலங்கையில், அரச துறையில் உள்ள பலதரப்பினரும் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளனர்! போராடிக்கொண்டும் இருக்கின்றனர். மருத்துவர்கள், தாதியர்கள் போன்ற மருத்துவத்துறை சார்ந்தோரின் போராட்டம் காரணமாக, மருத்துவமனைகள் இயங்காமல், நோயாளிகள் இறந்ததுடன், பலவித இன்னல்களுக்கும் ஆட்பட்டனர்.

அதேபோல், ரயில்வே, துறைமுகம், போக்குவரத்து, மின்சாரம், வங்கி, தபால் போன்ற துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. இந்தப் போராட்டங்களின்போது, பொதுமக்கள், இன்னல்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டனர்.

மறுக்கப்படும் தமது உரிமைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு பேச்சுவார்த்தை நடத்தி, எதுவும் சரிவராத நிலையிலேயே, தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை தமது கடைசி ஆயுதமாக பயன்படுத்துகின்றன; முன்னெடுக்கின்றன.

அரசாங்கம், தனது ஊழியர்களின் உரிமைகள், கோரிக்கைகள் தொடர்பாக செவிசாய்த்து, அவர்களும் வசதியாக, செழிப்பாக வாழ வழிசெய்யும் வகையில் சிந்திக்க வேண்டும்; அதுதான், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின், மக்களுக்கான தலையாய கடமையாகும்.

ஆனால், அரச தலைவர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரையில் பதவியில் இருப்பவர்களின் திட்டங்கள், சிந்தனைகள் யாவும், தமது கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு செல்வதாகும். இதற்காகவே சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்; அல்லது, சந்தர்ப்பம் சூழ்நிலைகளை உருவாக்குகின்றார்கள். இன்று போராடிக்கொண்டிருக்கும் அதிபர், ஆசிரியர்களின் நிலையும் இதுவேதான். தமக்கு நியாயபூர்வமாகக் கிடைக்கவேண்டியவற்றை மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள், பகற்கொள்ளைக்காரர்கள் போன்றோரிடம் பறிகொடுத்துவிட்டு, அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு, தமது கௌரவங்களை இழந்து போராட வேண்டியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். போராட்டங்கள் இல்லாமல் உரிமைகளைப் பெறவும் சாதிக்கவும் முடியாது, என்றொரு கொள்கையை, இலங்கை அரசு தனது நிரந்தரக் கொள்கையாக, சகல துறைகளிலும் விடயங்களிலும் பின்பற்றுகின்றது போல்தான் உள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடானது 24 வருடங்கள் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு, அவற்றை நிறைவேற்றாது கைவிட்டுவிடுகிறார்கள். இந்நாட்டின், அரசு ஊழியர்களின் குறைந்த சம்பளத்தை பெறுகின்றவர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள்.

இலங்கை ஆசிரியர் சேவையும் அதிபர் சேவையும் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த சூழலில், 1997ஆம் ஆண்டு பி.சி.பெரேரா சம்பள ஆணைக்குழுவின் சிபாரிசுகளால் சிக்கலுக்கு உள்ளானது. 1994ஆம் ஆண்டு ஆசிரியர், அதிபர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமை, பிழையான முறைமையாகுமென, பி.சி.பெரேரா சம்பள ஆணைக்குழு கூறியது.

ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை கல்வியியலாளர்களின் சம்பளத்தை பின்னர் தீர்மானிப்போமென பி.சி.பெரேரா குழுவின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1997ஆம் ஆண்டுமுதல் இன்றுவரையான 23 வருடங்களாக அந்த ‘பின்னர் தீர்மானிப்போம்’ என்ற பரிந்துரை, மீளாய்வு செய்யப்படவில்லை. இதுதான், ஆசிரிய, அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணமாகவுள்ளது.

1997ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாட்டின் காரணமாக, கல்வி நிர்வாக சேவைக்கு 914,100 ரூபாயாக அமையும் போது ஆசிரியர்களின் சம்பளம் 539,400 ரூபாயாக ஆக அமைந்தது. மேலும், 1997ஆம் ஆண்டு ஏனைய அரச ஊழியர்களுக்கு 60% சதவீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதும் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்படவில்லை.

2006ஆம் ஆண்டு சாலிய பெர்ணான்டோ, லயனல் பெர்ணான்டோ தமைமையிலான சம்பள ஆணைக்குழு, ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முடியாதென அறிவித்தது. 2007ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்துவதிலிருந்து விலகிய பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்ட தருணத்தில், போராட்டக்காரர்களை அரசாங்கம் உயர்நீதிமன்றில் நிறுத்தியது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை ஆசிரியர்கள் மீறியுள்ளார்கள் எனக் கூறி 50ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதித்து, போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அரசாங்கம் முற்பட்டது.

இதேவேளை, உயர்நீதிமன்றில் ஆசிரிய தொழிற்சங்கங்களை அரசாங்கம் நிறுத்திய தருணத்தில், ஆசிரியர் சேவையை பொதுச் சேவைகளிலிருந்து பிரித்தெடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. என்றாலும், அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2008ஆம் ஆண்டு சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவிருந்த காலப்பகுதியில், ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பளத்திட்டமொன்றை வழங்க பரிந்துரைத்தார். அத்தருணத்தில் ஆசிரியர் சேவை தரம் 1 இன் சம்பளம் 21,250 ரூபாயாகும். இச்சம்பளத்தை 25,515 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. 6,700 மில்லியன் ரூபாய் இதற்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிரகாரம், 3,000 மில்லியன் ரூபாய் 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தில் 45 சதவீதத்தை வழங்க தீர்மானித்திருந்தனர். ஆனால், ஒருசதம் கூட அரசாங்கத்தால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.1997ஆம் ஆண்டுமுதல் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும், எந்தவோர் அரசாங்கமும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை.

இதேவேளை, 2014.10.22 ஆசிரியர் சேவை யாப்பு மற்றும் அதிபர் சேவை யாப்பு ஆகியவற்றின் ஊடாக 30 மாத கால நிலுவை சம்பளம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, அதிபர், ஆசிரியர் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய சம்பள தொகையான 22,500 முதல் 90,000 ரூபாய் வரை என்ன நடந்தது என்பது மூடுமந்திரமாகவே உள்ளது.

ஆசிரியர், அதிபர்களை நசுக்கும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியாக, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி, இருந்தமை காரணமாக, கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தால், அதிபர், ஆசிரியர்களுக்கு தாமதமில்லாமல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பில் இருந்து விலக முடியாது.

அரசாங்கம், சாட்டுபோக்குகளைக் கூறிக்கொண்டு, அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை பிசுபிசுத்துப் போகச்செய்யும் முயற்சிகளிலேயே பெரிதும் ஈடுபாடும் கவனமும் செலுத்தி வருகின்றது என்பது, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

போராடுகின்ற அதிபர், ஆசிரியர்களின் இலட்சக்கணக்கான பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் பிள்ளைகள் என்று எவரும் பிரத்தியேகமாக வகுப்பெடுக்கவில்லை. அவர்களும் ஏனைய மாணவர்கள் போல்த்தான் கல்வியை இழந்து நிற்கின்றார்கள். ‘ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறவேண்டும்’ என்ற இயற்கையின் நியதிக்கு ஆசிரியர்கள் விதிவிலக்கல்ல.