ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது கேரளம்!

சீனாவில் கரோனா பெருந்தொற்றின் கேந்திரமாக இருந்த வூஹானிலிருந்து வந்த மருத்துவ மாணவிதான் முதல் கரோனா தொற்றாளர். கரோனா தொற்று கண்டறியப்பட்டு மே 8-ம் தேதியோடு 100 நாட்களைக் கடந்தது கேரளம். இதுவரை அங்கே 666 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதில் 502 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள். 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மிச்சம் 160 பேர் மட்டுமே இப்போது தொற்றுடன் இருக்கிறார்கள்.

500 தொற்றுகளுக்கு மேல் கொண்ட மாநிலங்களில் மிகக் குறைவான தொற்று வேகம் (0.1%) கொண்டிருப்பது கேரளம்தான். தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலமாக இருந்து, இப்போது கரோனாவைக் கட்டுக்குள் அது எப்படிக் கொண்டுவந்தது? இதற்குப் பல காரணிகள் உள்ளன. நாட்டிலேயே கிட்டத்தட்ட முழுமையான கல்வியறிவு கொண்ட மாநிலம், குறிப்பாகப் பெண்களின் கல்வியறிவு நாட்டிலேயே இங்கு அதிகம். இதனால், கரோனா குறித்த விழிப்புணர்வை எல்லோரிடமும் எளிதாகக் கொண்டுசேர்க்க முடிந்தது.

அடுத்ததாக, தமிழ்நாட்டைப் போன்றே கேரளத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவானது. இதில் ஆரம்ப சுகாதார மையங்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும், காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இவற்றை வலுப்படுத்தியதில் இரண்டுக்குமே முக்கியப் பங்கு உண்டு. கேரளத்தில் அதிகாரப்பரவலாக்கம் அதிகம். உள்ளாட்சி அமைப்பை கேரளம் உயிர்ப்புடன் வைத்திருப்பதால், மேலிருந்து கீழ்வரை கிளை கிளையாகப் பிரிந்து, மக்களிடம் சென்று தகவல்களையும் உதவிகளையும் கொண்டுசேர்ப்பது முதல் உள்ளூரில் தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்களை இனங்காண்பது வரை எளிதாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலிருந்து வரும் உத்தரவை எதிர்பாராமல் கீழ்நிலை சுகாதாரப் பணியாளர்கள் இறங்கி வேலைசெய்தார்கள்.

கேரளம் கையாண்ட உத்தி

கேரளம் தொடக்கத்திலேயே ‘தொற்றாளர் தொடர்பு’களை (கான்டாக்ட் ட்ரேஸிங்) கண்டறிவதில் முழு மூச்சில் இறங்கியது. மற்ற இந்திய மாநிலங்கள் தவறவிட்ட இடம் இது. ஒவ்வொரு தொற்றாளருக்கும் 550-750 பேர் என்ற விகிதத்தில் நோய் அறிகுறியோ, பயண வரலாறோ, தொற்றாளருடன் தொடர்போ கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது, வெறும் 160 பேர்தான் தொற்றுடன் இருக்கும் நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மிக முக்கியமாக, தன் மருத்துவக் கட்டமைப்பை கேரளம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், எந்தக் கட்டத்திலும் கேரள அரசு மருத்துவமனைகள் தொற்றாளர்களாலும் நோய் அறிகுறி கொண்டவர்களாலும் நிரம்பி வழியவில்லை.

நோய்த் தொற்று உச்சத்தில் இருந்தபோதுகூட, அங்கு மொத்தம் 816 பேர்தான் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனர். பரிசோதனைகளில்கூட கேரளம் சாமர்த்தியமாகச் செயல்பட்டது. அதிகமானோருக்குச் செய்வதைவிட குறிப்பாகத் திட்டமிட்டு, யாருக்கெல்லாம் தொற்று வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்குப் பரிசோதனை செய்தால் போதும் என்று செயல்பட்டது. ஒரு நாளைக்குச் சராசரியாக 687 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. சில நாட்களில் மட்டுமே இந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.

கேரளத்தைப் போன்ற மக்கள்தொகை கொண்ட நாடுகளுடனும் அதைவிடக் குறைவாக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுடனும் கேரளத்தை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். கனடாவின் மக்கள்தொகை 3.76 கோடி. அங்கே இதுவரை 80,142 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருவின் மக்கள்தொகை 3.25 கோடி, கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,04,020; மலேசியாவின் மக்கள்தொகை 3.2 கோடி, கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 7,059; ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 2.5 கோடி, கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,081; ஈக்குவடாரின் மக்கள்தொகை 1.71 கோடி, கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,854; நெதர்லாந்தின் மக்கள்தொகை 1.71 கோடி; தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,700. கேரளத்தின் மக்கள்தொகை 3.45 கோடி. ஆனால், மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666-தான். கரோனா நெருக்கடியை கேரளம் எதிர்கொண்ட விதத்தை இந்த எண்ணிக்கையே சொல்லிவிடும்.

வடக்கே ராஜஸ்தானுடனோ, தெற்கே கர்நாடகத்துடனோ ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் மிகக் குறைவானது கேரளம்; அதேபோல, கேரளத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் அடர்த்தி குறைவு என்பதும் காரணம் போன்ற பார்வைகளையெல்லாம் புறக்கணித்துவிட முடியாது. ஆயினும், கேரளத்தின் முன்னெடுப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மனிதத்தைக் கலந்த கேரளம்

மருத்துவக் கட்டமைப்பையும் நிர்வாகக் கட்டமைப்பையும் பயன்படுத்திய விதம் மட்டுமல்லாமல், தனது செயல்பாடுகளில் மனித முகத்தையும் கலந்தது கேரள அரசின் மீதான மதிப்பை உயர்த்துகிறது. நிவாரணம் வழங்கியதிலேயும் சரி, நிவாரணத்தைக் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுசேர்த்ததிலும் சரி… கேரளம் மிகுந்த அக்கறை காட்டியது. வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒரு மாவட்ட ஆட்சியர் கொண்டுசென்றது ஒரு உதாரணம்தான். கூடவே, கேரளத்தில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களைப் புலம்பெயர் தொழிலாளர்களாகக் கருதாமல் ‘விருந்தினர் தொழிலாளர்’ என்று கருதியே அம்மாநிலம் நடத்தியது.

பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுகளை எதிர்கொண்டிருந்தாலும் கேரள அரசு இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கிறது. இதுவரை இரண்டு தடவை தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மூன்றாவது தடவை அது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஆகவே, அவசரப்பட்டுக் கொண்டாட்ட மனநிலைக்குச் செல்ல வேண்டாம் என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுடனும் கர்நாடகத்துடனும் நெகிழ்வான எல்லைகளை கேரளம் கொண்டிருப்பதால், பினராயி விஜயன் கூறியதுபோல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமே.

கேரள மழைவெள்ளம், நிபா வைரஸ் போன்ற நெருக்கடிகளைத் திறம்படக் கையாண்டதில் கிடைத்த அனுபவம், கேரளத்துக்குத் தற்போது உதவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் மட்டுமல்ல; மத்திய அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள முன்மாதிரியைப் பின்பற்றினால் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்!

  • ஆசை,