காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும்

‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை’யாய், நொந்தழிந்து போயுள்ள விவசாயிகளை, உணவின்றித் தவிக்கும் ஏழைகளை, கொரோனாவால் கதியிழந்தவர்களை என, அனைவரையும் பாரபட்சமின்றிச் சோதிக்கிறது இப்பெருமழை.

கடந்த பல ஆண்டுகளாக இச்சோதனை, தொடர் நிகழ்வாயுள்ளது. அந்த நேரத்துக்கு அது செய்தி; பின்னர், வசதியாக மறக்கப்பட்டு விடுவதே எங்களின் கதையாகும். பதில்களைத் தேடாத சில பெருங்கேள்விகள் இங்குண்டு. அக்கேள்விகளும் கேட்கப்படுவதில்லை; அதற்கான பதில்களும் தரப்படுவதில்லை. ஆனால், அவை அவசியமான கேள்விகள், அவசரமாகப் பதில்களை வேண்டுபவை!

இலங்கையின் மழைவீழ்ச்சியின் தன்மையில், கடந்த ஒரு தசாப்தகாலமாக, முக்கியமான மாற்றம் நடைபெற்றுள்ளது. முன்னர், ஒரு மாதத்தில் பெய்கின்ற மழை, இப்போது ஒரு சில நாள்களிலும் நாள்கணக்கில் பெய்கிற மழை, சில மணித்தியாலங்களிலும் பெய்துகொட்டுகின்றது.

இவ்வாறு, கொடுமழை பெருமளவில் கொட்டித்தீர்க்கையில், வெள்ளம் இயல்பாகவே ஏற்படும். இங்கு இரண்டு கேள்விகள். முதலாவது, இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது? இரண்டாவது, இவ்வாறு ஏற்படும் வெள்ளத்தைத் தவிர்க்கவியலாதா?

குறுகிய காலப்பகுதியில், அதிகளவான மழைவீழ்ச்சி என்பது, இப்போது உலகப் பொதுவாக மாறிவிட்டது. இது காலநிலை மாற்றத்தின் விளைவு. மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல் மாற்றத்தின் காரணமாக, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி நீரால் சூழப்பட்டது.

புவியின் வெப்பநிலை அதிகரிக்க, மேற்பரப்பில் உள்ள நீர் ஆவியாகும் அளவும் அதிகரிக்கும். அவ்வாறு ஆவியாகும் நீர், பெருமழையாகக் கொட்டித் தீர்க்கிறது. இது ஒருபுறம் வெள்ளத்தையும் மறுபுறம்; வரட்சியையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. சில காலம், முன்பு இலங்கையின் தென்பகுதியில் பெருமழையும் வெள்ளமும் பாடாய்ப்படுத்துகையில் மன்னாரில் கிணறுகள் வற்றியிருந்தன. ஒரு 300 கிலோ மீட்டர் இடைவெளியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ஆனால், அவைதான் யதார்த்தமாக உள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து, பல ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. ஆனால், அரசுகள் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, உளப்பூர்வமாக எடுப்பதில்லை.

வருடாவருடம் மாநாடுகள் கூட்டப்படுகின்றன; பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் செயற்பாடுகள் குறைவாகவே உள்ளன. காலநிலை மாற்றம், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ளவர்களையே மோசமாகத் தாக்குகிறது. குறிப்பாக, வறுமையில் தவிக்கின்ற மக்களுக்கு, அதிர்ச்சி அளிக்கத்தக்க கோரமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவால், மில்லியன் கணக்கான மக்கள் உணவின்மையாலும் நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது கட்டாய இடப்பெயர்வையும் உணவுக்கான போர்களையும் நீர் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை சரியாகச் சொல்வதானால், காலநிலை மாற்றத்தால், கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் முன்னேற்றம் கண்ட அபிவிருத்தி, உலகளாவிய சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை, இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. இன்று, நாம் எதிர்நோக்கியிருக்கும் காலநிலை மாற்றத்தின் நெருக்கடியின் தீவிரத்தை, இது காட்டி நிற்கின்றது.

அதேவேளை, காலநிலை மாற்றத்தின் விளைவுகள், ‘மனித உரிமைகள்’ என்ற ஒன்றை, பொருத்தமற்றதாக மாற்றும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போதைய நிலை தொடருமாயின், உலகப் பொருளாதாரம், காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாகப் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களை, தொடர்ந்தும் வறுமைக்குள் தள்ளிய வண்ணமே இருக்கும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு, உலகப் பொருளாதார செயல்முறை மீதான அடிப்படையான மாற்றம் அவசியமாகிறது. நிதி மூலதனத்தை மையப்படுத்திய உலகப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம் பெறாமல், காலநிலை மாற்றத்தை வேண்டி, நின்று நிலைக்கக் கூடிய நீண்டகால நோக்குடைய தீர்வொன்றைக் காண இயலாது.

‘உலகக் காலநிலைச் சுவர்: உலகின் செல்வந்த நாடுகள் எவ்வாறு காலநிலையை விட, எல்லைகளை முக்கியப்படுத்துகின்றன’ என்ற தலைப்பில் அமைந்த அறிக்கையொன்று, அண்மையில் வெளியாகியிருக்கிறது.

அவ்வறிக்கை, உலகின் செல்வந்த நாடுகள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் செலவிடும் தொகையை விடப் பலமடங்கு அதிகளவான தொகையை, தங்கள் எல்லைகளைப் பாதுகாக்கச் செலவிடுகின்றன என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.

காலநிலை மாற்றத்துக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும், என்ன தொடர்பு என நீங்கள் யோசிக்கக் கூடும்.

காலநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் திடீர் வெள்ளம், வரட்சி, சூறாவளி, கடல்மட்ட உயர்வு என்பன, மக்களை இடம்பெயர வைக்கிறது. இந்த இடப்பெயர்ச்சி வளப்பற்றாக்குறை, இடநெருக்கடி, போர் போன்ற பலவற்றை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இடம்பெயரும் மக்களில் பெரும்பாலானோர், நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தாலும் சிலர் வேறுநாடுகளுக்கு இடம்பெயருகிறார்கள்.

இவ்வாறு இடம்பெயருவோர், செல்வந்த நாடுகளை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களைத் தடுப்பதற்காகவே, எல்லைப்பாதுகாப்பை இந்நாடுகள் வலுப்படுத்துகின்றன. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், காலநிலை மாற்றத்துக்குக் காரணமான, வாயுக்களை அதிகளவில் உமிழ்வது இந்தச் செல்வந்த நாடுகள் ஆகும். அவ்வாறு பேரிடர்கள் ஏற்பட்டாலும் அதைக் கையாள்வதற்கு, போதிய பொருளாதார வலிமை அவற்றுக்கு உண்டு.

ஆனால், மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்நோக்கும் நாடுகள், காலநிலை மாற்றத்துக்குக் காரணமான மிகக்குறைவாக வாயுக்களை உமிழும் நாடுகள் ஆகும். ‘யாரோ செய்யும் செயலுக்கு யாரோ விலை கொடுக்கிறார்கள்’. இதற்கு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்.

சோமாலியாவின் மொத்த உமிழ்வு, (1850ஆம் ஆண்டுமுதல் 2020ஆம் ஆண்டுவரை) வெறும் 0.00027% மட்டுமே. ஆனால், 2020ஆம் ஆண்டு, காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளால் ஒரு மில்லியன் மக்கள் (மொத்த சனத்தொகையில் 6%) இடம்பெயர்ந்துள்ளனர்.

‘உலகக் காலநிலைச் சுவர்’ அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்துக்குக் காரணமான வாயுக்களை அதிகளவில் உமிழும் பிரதான ஏழு நாடுகளும் (அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா) காலநிலை மாற்றத்துக்குச் செலவிடும் தொகையை விடப் பலமடங்கு அதிகளவான தொகையை எல்லைப்பாதுகாப்புக்குச் செலவிடுகின்றன. உதாரணமாக, கனடா 15 மடங்கு, அவுஸ்திரேலியா 13 மடங்கு, அமெரிக்கா 11 மடங்கு ஆகும்.

இதேவேளை, எல்லைப்பாதுகாப்புக்காக ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனத்திற்கு 2021ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, 2006ஆம் ஆண்டு (நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு) ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடுகையில் 2,763 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதிகளவான காலநிலை மாற்றத்துக்குக் காரணமான, வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாவது, சுவட்டு எரிபொருட்களின் பாவனை ஆகும். சுவட்டு எரிபொருட்களை நிறுத்தாமல், பயனுள்ள தீர்வுகளை நோக்கி நகரவியலாது.

எல்லைப்பாதுகாப்பு என்பது, வளங்கொழிக்கும் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களே, எண்ணெய்த் தொழிற்றுறையின் பாதுகாப்புக்கும் சேவைகளை வழங்குகின்றன. இரண்டு துறைகளிலும், ஒரே நபர்களே கோலோச்சுகிறார்கள். எனவே, உலகின் பலமுள்ள தொழிற்றுறையாக எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. இத்தொழிற்றுறையை மூடாமல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது கடினம்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளங்களை, எவ்வாறு கையாள்வது என்ற வினாவுக்கு வருவோம். மழையால் மட்டும் வெள்ளங்கள் வருவதில்லை. மழைநீர் தேங்கும் இடங்களை, நாம் தொலைத்துவிட்டோம். அவ்விடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டு கட்டடங்களாக உள்ளன. இயற்கையாகவே அமைந்த மழைநீரைச் சேகரிக்கும் இடங்களை, நாம் இல்லாமல் செய்துவிட்டோம்.

இது, இரண்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒன்று, பெய்யும் மழை தேங்குவதற்கு வழியில்லாமல், வெள்ளம் ஏற்படுகிறது. இரண்டு, நன்னீர் நிலத்தடி நீராகச் சேராமல், கடலில் கலந்து வீணாகிறது. உலகெங்கும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இயற்கையை, மழையின் வடிவில் நமக்குக் கொடுக்கும் கொடையை, நாம் நிலத்தடி நீராகச் சேகரிக்காமல் விடுவது கொடுமை.

வளர்ச்சி என்பது, உயர்ந்த கட்டங்களிலும் தொழில்நுட்பத்திலும் இல்லை. இயற்கையை வென்றுவிடுவது என்ற இறுமாப்பில், மனிதன் மேற்கொண்டுள்ள பிரயத்தனங்கள், மேலும் இன்னல்களையும் பேரிடர்களையும் தந்து கொண்டே இருக்கிறது.

உண்மையில், பூமி, மனிதனுக்குப் பேரிடர்களை ஏற்படுத்தவில்லை. மாறாக, மனிதன் தன்செயல்களால் பூமிக்குப் பேரிடர்களைக் கொடுத்த வண்ணமே உள்ளான். எஞ்சியுள்ளது ஒரே கேள்விதான்; நாம் இயற்கையைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறோமா?