கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’

மக்கள் ஆங்காங்கே, முகக்கவசங்களுடன் ஓரிடத்திலிருந்து, வேறோர் இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ‘மதுக் கடைகள்’ திறக்கலாம் என்று, அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், பல மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் இன்னும் முழு வீச்சில், இயங்க ஆரம்பிக்கவில்லை. முக்கியமாக, போக்குவரத்து வசதிகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்கள், போன்ற போக்குவரத்துகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக ஆரம்பிக்கவில்லை.
கொவிட்-19 நோய்த் தடுப்பைப் பொறுத்தமட்டில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள் பலவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளிக் காட்சி கலந்துரையாடலின்போது, மே 31ஆம் திகதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ‘ஊரடங்கு பற்றி, மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்’ என்று, மத்திய அரசு அறிவித்திருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தைத் தாண்டி விட்ட நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறது.

ஊரடங்கு, கட்டுப்பாட்டுப் பகுதிகள், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தேவைகள், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுச் சிகிச்சையின் போதான கூட்டு முயற்சி என்பவை போன்ற விடயங்களில், கேரள மாநிலத்தைத் தவிர, வேறு எந்த மாநிலங்களும் சிறப்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத்தான், கட்டுக்கடங்காமல் நோய்த் தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் நிலைமை தெரிவிக்கிறது. கேரளா தவிர, இன்னொரு மாநிலம் சிறப்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றால் அது, தற்போதைக்கு ஓடிசா மாநிலமாக மட்டுமே இருக்கிறது. கொரோனா வைரஸ், பொருளாதாரம் இரண்டும், வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டைப் பிள்ளைகளாகத் தற்போது இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
மாநில அரசுகள் பல, தங்களின் நிதி நிலைமையில், மிகப்பெரிய சறுக்கலை மட்டுமல்ல, மூச்சுத் திணறுவது போன்ற நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், ஒவ்வொரு மாநிலமும், ‘எங்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வேண்டும்’ என்ற கோரிக்கையை, மத்திய அரசிடம் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரதமர் நரேந்திர மோடி 20 இலட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார். கடைசியாக வெளிவந்த இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையில், 103 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயற்படுத்தப் போகிறோம் என்று, நிதியமைச்சர் அறிவித்திருந்தார். அது, ஓர் ஐந்தாண்டுத் திட்டம். அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்போது ஒரு வருடத்தில் செலவு செய்ய வேண்டிய 20 இலட்சம் கோடியைக் கண்ணுக்குத் தெரியாத வைரஸான கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், பிரதமர் அறிவித்த 20 இலட்சம் கோடி, சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சுய சார்பு இந்தியா என்பதாகும். அதாவது, முதன் முதலில் பிரதமரானவுடன், 2014 செப்டெம்பர் மாதத்தில் நரேந்திர மோடி அறிவித்த ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் அடுத்தகட்டம்தான், இந்தச் ‘சுய சார்பு இந்தியா’ கொள்கை அறிவிப்பு ஆகும்.
இதைப் பல அரசியல் கட்சிகள், ”வெற்று அறிவிப்புகள்” என்று விமர்சித்தாலும், பொதுவாக, ஏழைஎளிய மக்களுக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வழிமுறைகள், மத்திய அரசின் திட்டத்திலும் பெரிதாக இல்லை; மாநில அரசுகளின் திட்டத்திலும் அறவே இல்லை என்பதாக, அனைவரும் கருதுகிறார்கள். ஏனென்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் இருந்து, ரயில் தண்டவாளத்தில் ஊடாக நடந்து புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஓரிடத்தில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியிருக்கிறார்கள். அவர்கள், மத்திய பிரதேசம் மாநிலம் செல்லும் முன்பே, மே எட்டாம் திகதி, சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, மும்பையில் இருந்து, தங்கள் மாநிலங்களுக்குப் புறப்பட்ட தொழிலாளர்களில், ஐந்து குழந்தைகள் உள்பட, 17 பேர் மரணமடைந்தார்கள். மும்பையிலிருந்து உத்தர பிரதேசத்துக்கு 1,600 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தமது எஞ்சியிருந்த 30 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியாமல் உயிரிழந்தார்கள்.
இதேபோல், 1,640 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட தொழிலாளர் ஒருவர், தனது உத்தர பிரதேச மாநிலத்தை அடையும் முன்பே உயிரிழந்தார். எல்லாவற்றையும் விடக் கொடூரமான நிகழ்வு, சமீபத்தில் இடம்பெற்றது. உத்தர பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்த டிரக்கர்கள், நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 25 பேர் உயிரிழந்தார்கள்.

தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகப் மாநிலங்கள் பலவற்றுக்குச் சென்று, வேலை பார்த்த வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு நேரத்தில் அநாவசியமாக இறப்பது, இந்திய அரசியலில், பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இது, தேர்தல் காலத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு அலையை, இப்போது மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்தத் தொழிலாளர்களைக் காப்பாற்றத் தவறிய மாநில அரசுகளுக்கும் உருவாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆகவேதான், ”புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கட்டணமின்றி, அவரவர் ஊர்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7,500 ரூபாய் நிதியுதவி கொடுங்கள்” என்று காங்கிரஸ் கட்சி உட்பட, எதிர்க்கட்சிகள் எல்லாம், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 20 இலட்சம் கோடி, சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தில், இந்தப் புலம்பெயர்ந்த எட்டு இலட்சம் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள், தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை, என்பவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பிரதமரின் சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தைத் தொடர்ந்து, இன்றுடன் ஐந்து கட்டங்களாகப் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். விவசாயிகள், சிறிய-குறுகிய நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு நிற்கும் ஏழை எளியவர்களுக்கும் 7,500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரத்தில், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தின், சிறப்புப் பொருளாதார உதவித் திட்டத்தின் கீழ், தனியார் முதலீடுகளைப் பெறுவது போன்ற தொழில் வளர்ச்சி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். இன்றுடன், அவரது அறிவிப்புகள் நிறைவு பெற்று விட்டன. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை நீடிக்கிறது. அவர்கள், தங்களது மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வதில் உள்ள சிரமங்களும் தொடருகின்றன. ஏன், அவர்கள் தங்கள் விருப்பப்படி, நடந்து செல்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

”கொரோனா வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற மத்திய, மாநில அரசுகளின் பிரச்சாரத்தை, மக்கள் ஒரு வழியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்; அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். பொருளாதாரத்தை மீட்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை, மாநில அரசுகள் தொடக்கி விட்டன. ஆய்வுக் குழுக்களை அமைத்து, நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றன.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்தப் பொருளாதார சிறப்புத் திட்டத்தால் என்ன இலாபம்? அவர்களுக்கு ஏன் உடனடியாக நிதியுதவித் திட்டங்கள் எதையும் மத்திய அரசும் அறிவிக்கவில்லை; புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மாநிலங்களும் ஏன் அந்தத் தொழிலாளர்களிடம் வேலை வாங்கிய மாநிலங்களும் செய்யத் தவறி விட்டன என்பது பரிதாபம்மிக்க கேள்வியாக-விவாதமாக இன்றைக்கு உலவி வருகிறது; எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. ஆனால், அதைச் செய்ய வேண்டிய மத்திய-மாநில அரசுகளோ, அமைதி காக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகமே ஏறக்குறைய 4.16 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள் என்று, இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பிறகு, இவர்களைக் காப்பாற்ற என்ன தயக்கம்? எதிர்பாராத விபத்துகளால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ‘மரணஓலம்’ ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறது? இதுதான் இன்றைய கேள்வி.