துணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்

கன்னட சினிமாவான த்வீபா (2002) அப்படியொரு படம். அணை உயர்த்தப்படுவதால் மூழ்கும் அபாயத்தில் உள்ள காட்டின் ஒரு சிறு தீவில் வசிக்கும் கிராம மக்களைப் பற்றியது. குஜராத்தின் சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் உயர உயர காணாமல் போய்க்கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச கிராமம் பற்றிய செய்தியொன்றை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் படித்தபோது மனதைப் பிசைந்தது. வெளியேறும் மக்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் வாழ்விடத்தைவிட்டுச் செல்ல முடியாமல் பழைய நினைவலைகளில் தவிப்பதாகவும் தற்போது எங்கே செல்வது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர். இன்றுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நர்மதை நதிக்கரைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2007-08 காலகட்டங்களில் இப்படம் சென்னையில் உள்ள சத்யம் திரையங்கில் சிறப்புத் திரையிடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லைட்ஸ் ஆன் அமைப்பு நடத்திய இந்நிகழ்ச்சியில் த்வீபா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படம் பேசிய அணை மூழ்கடிக்கும் கிராமத்தைப் பற்றி யோசிக்கும்போது தவிர்க்க முடியாமல் மேதா பட்கர் நினைவுக்கு வருகிறார்.

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் உயரத்தை மேலும் மேலும் அதிகரிக்கும் பணிகள் 1997லிருந்தே நடைபெறத் தொடங்கியதிலிருந்தே மேதா பட்கர் போராட்டம் நடத்தி வருகிறார். இன்றுவரை அவரது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய பத்தாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் அவருடையது. நாடு தழுவிய போராட்டத்தை சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர் ஈடுபட்டுவந்தபோது பல்வேறு சூழலியல் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் அவருக்குத் துணை நின்றன.

தமிழகத்திலும் பல்வேறு கூட்டங்களில் மேதா பட்கர் கலந்துகொண்டார். அணை உயர்த்தப்படுவதால் இடம்பெயரும் மக்களின் அவலநிலைகள் குறித்த அவரது போராட்டடம் சார்ந்த ஆவணப்படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. சென்னையில் நடந்த கூட்டத்தில் மேதா பட்கர் பேசினார்.

அப்போது இந்தக் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். அவரது எழுச்சிமிக்க பேச்சுகளைக் கேட்ட கூட்டம் ஆர்ப்பரித்ததைக் காண முடிந்தது. என்னோடு வந்த நண்பன், ”நானும் அவர்களோடு தேசம் முழுக்கச் செல்லப் போகிறேன்” என்று கூறிவிட்டு மேதா பட்கரின் யாத்திரையில் கலந்துவிட்டான். ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியெல்லாம் சமூக வாழ்வே தங்களது வாழ்வு என்று எண்ணும் மனிதர்களை நினைக்கும்போது.

இதே நேரம், ஜார்க்கண்ட் கிராமத்து சந்தால் பழங்குடியினரை வெளியேற்றி அவர்களது நாட்டுப்புற நடனத்தைக்கொண்டே அனல்மின் திட்டத் தொடக்க விழாவில் நடனமாட அழைக்கப்படும் ஜார்க்கண்ட் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஜனாதிபதி தலைமை தாங்கி அமர்ந்திருக்கும் அந்த மாபெரும் கூட்டத்தில், ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையிலும் அவர்களை விழாவுக்காக நடனமாட கட்டாயப்படுத்தப்பட்டு மேடைக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.

அப்போது மேடையில் தோன்றும் ஆதிவாசிகளின் பிரதிநிதி இளைஞன் ஜனாதிபதியைப் பார்த்து ஒலிவாங்கியில் ”ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்… எங்கள் வாழ்க்கையின் மூடுவிழாவுக்கு நாங்களே ஆடவேண்டுமா” என்று தொடங்கி விரிவாக பேசத் தொடங்குகிறான். ஆனால் அவனை சிஆர்பிஎப் போலீஸார் அடித்துத் துவைக்கும் ஹஸ்தாசெவேந்திர சேகரின் சிறுகதையொன்று தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது. நான் என்ன அப்படி தப்பாக சொல்லிவிட்டேன் என்று நம்மிடம் பேசுவதுபோல தொடங்கும் இச்சிறுகதை சந்தால் பழங்குடி மக்கள் படும் அனைத்துச் சிக்கல்களையும் பேசிச் செல்கிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கிரீஷ் காசரவள்ளி இயக்கிய த்வீபா திரைப்படம் சென்னை சத்யம் திரையரங்கில் 2007 அல்லது 2008-ல் திரையிடப்பட்டதாக நினைவு.

பிரசன்னா ராமசாமி

சென்னை சத்யம் திரையரங்கம் தங்கள் வணிகச் செயல்களுக்கு அப்பால் லைட்ஸ் ஆன் போன்ற நிறைய கலாச்சார நிகழ்வுகளையும் ஊக்கப்படுத்தி வந்தது. வாரந்தோறும் உலக சினிமா வரலாற்றுத் திரைப்படங்கள் என ஒரு தொடரையே இரண்டாண்டுகள் நடத்த இடமளித்தது. பின்னர் பியூர் சினிமா என்றொரு பிரிவைத் தொடங்கி சில முக்கியப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் திரையிட்டது. இத்தகைய நிகழ்வுகளில் இயக்குநர் ஹரிஹரன், அண்மையில் மறைந்த இயக்குநர் அருண்மொழி போன்றவர்கள் கலந்துரையாடலில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். பல மூத்த இயக்குநர்களுடனும் வளரும் பல புதிய திரை ஆர்வலர்களையும் அங்கு சந்தித்து அன்போடு நலம் விசாரிக்க முடியும்.

பிரபல நாடகவியலாளர் பிரசன்னா ராமசாமி நடத்தி வந்த இந்த ‘லைட்ஸ் ஆன்’ நிகழ்வுகள் பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில் காலைக் காட்சி வேளைகளில் நடைபெறும். பிரசன்னா ராமசாமி நவீன நாடக அரங்கியல் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருவபவர். தற்போது தமிழகத்தின் முக்கியமான நிகழ்த்துக் கலையான கணியான் கூத்து தொடர்பான ஆவணப்படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கும் நாடகங்களில் போர், போருக்குப் பின்னர் பெண்களின் நிலை போன்றவை முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும்.

சத்யம் திரையரங்கில் பரதநாட்டியம், கதக்களி, கூடியாட்டம், யக்ஷகானம் போன்ற தென்னிந்திய நிகழ்த்துக் கலைகள் சார்பான ஆவணப்படங்களை தொடர்ந்து ‘லைட்ஸ் ஆன்’ திரையிட்டது. அவ்வகையிலான நிகழ்த்துக் கலை பிரதிகளின் வரிசையில்தான் யக்‌ஷகானத்தின் சாயல்கொண்ட ‘நேமா’ கிராமிய நடனக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட த்வீபா திரையிடப்பட்டதாக நாம் கருத வேண்டியுள்ளது. இப்படத்தில் வனப்பகுதியில் நேமா சடங்கு நடத்தி வாழும் ஒரு பாரம்பரியக் குடும்பத்தைப் பற்றி பேசுகிறது. அதிலும் அக்குடும்பத்தின் மருமகளான நாகியின் (நடிகை சௌந்தர்யாவின்) ஆடை அலங்காரமே அவர் ஒரு துளு பழங்குடி இனப் பெண் என்பதை நமக்கு நிரூபணம் செய்கிறது.

த்வீபா திரைப்படம், சாகித்ய அகடாமி விருது பெற்ற நா டிசெளசா கன்னடத்தில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. த்வீபா என்றால் தீவு. சீதா பர்வதம் என்று அழைக்கப்படும் மலையும் அதனையொட்டிய காடும் பசுமையான நிலமும் ஆற்றின் இடையே அமைந்துள்ளது. சீதா பர்வதம், ராமரும் சீதையும் அயோத்தியிலிருந்து வனவாசம் வந்தபோது தங்கியிருந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் மலை. இதனையொட்டி அருகில் வசிக்கும் மக்களைப் பற்றிய கதை இது. இயற்கையோடு சுதந்திரமாக வாழும் மக்களின் வாழ்வில் விழுந்த பேரிடியாக அணை கட்டப்பட்டு வருவதால் அம்மக்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படுகிறது.

மக்கள் வெளியேற நிவாரண அதிகாரிகள் சொல்லும் காரணம், அணை முழுமையாகக் கட்டப்பட்டு பருவமழையின்போது அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டால் சீதா பர்வம் மூழ்கிவிடக்கூடும் என்பதுதான். சீதா பர்வத மலைக் கிராம மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நேரடியாக வந்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த ஊரின் குடும்பங்கள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்குகின்றன.

ஊரை விட்டுப் போக முடிவு செய்ததையொட்டி கடைசியாக ஒரு நேமா சடங்கில் ஈடுபடுகின்றனர். நேமா சடங்கை நடத்திக்கொடுப்பவர் உள்ளூர் பாரம்பரிய பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த துக்கப்பா. துக்கப்பா மட்டும் ஊரைவிட்டுச் செல்லாமல் பிடிவாதமாக இருக்கிறார். நேமா யக்‌ஷகான நடமாடும் பெரியவர் துக்கப்பா. அவரின் மூத்த மகன் கணப்பயா. கணப்பய்யாவின் மனைவி நாகி.

வனப்பகுதியில் வாழும் துளு இன மக்கள் கிராம அவ்வூரின் தெய்வத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள். எனவே அணைப் பணிகள் தொடங்கும்போது நேமா பூஜை நடத்திக் கொடுத்தவர் இந்த வயதான துக்கப்பாதான். துக்கப்பா மீது அதிகாரிகள் மிகவும் மரியாதை வைத்துள்ளனர். துக்கப்பா குடும்பத்தை வெளியேற்ற அதிகாரிகள் மலைப்பகுதி வரும்போது துக்கப்பா அங்குள்ள வனக்கோயிலின் கதையைச் சொல்கிறார்.

ராமரும் சீதையும் வனவாசத்தின்போது தங்கியிருந்து சென்ற இடம் இது. பின்னர் இங்கு ஆண்ட கொடுங்கோல் அரசன் விவசாய மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். ஒரு விவசாயி அந்த அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய, அரசன் அவனைக் கொன்றுவிட உத்தரவிட்டான். உயிரிழந்த கிளர்ச்சி விவசாயி ஆவியாக வந்து அந்த கொடுங்கோல் அரசனைக் கொன்று மக்களுக்கு நிம்மதியை அளிக்கிறான். சீதா பர்வதத்தில் அந்த விவசாயி இன்று கடவுகளாக வழிபடப்படுகிறான். துக்கப்பாவின் மூதாதையர்கள் தொடங்கி இன்று வரை அவர்கள்தான் அக்கோயிலை நிர்வகித்து வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். இதெல்லாம் கட்டுக்கதை. இதற்கு எந்தவிதமான தொல்லியல் ஆதாரங்களும் இல்லை என்று. மேலும் இந்தக் கோயில் உங்களுக்குச் சொந்தமானதில்லை என்றும் கூறி நீங்கள் வெளியேறித்தான் ஆகவேண்டுமென்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.

”இந்தக் காடு, இந்த மரங்கள், இந்த மலை, இந்த நதி, இந்தக் கோயில் அனைத்தும் எங்களுக்குச் சொந்தமானது. பாரம்பரியமாக இங்கு வாழ்ந்து வரும் எங்களை அரசாங்கம் இது உங்களுடையது இல்லை, அரசாங்கத்தின் உடையது என்கிறது. ஆயிரம் ரூபாய் அல்ல லட்ச ரூபாய் கொடுத்தாலும் இந்தக் கிராமத்தைவிட்டு நான் வெளியேற மாட்டேன்” என்கிறார் துக்கப்பா.

போலீஸார் வந்து துக்கப்பாவை தூக்கிச்சென்று அருகில் உள்ள நகரத்தில் அவரது ஓர் உறவினர் வீட்டில் விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஆனால், அவர் அங்கிருக்க முடியாமல் மீண்டும் நதியோர வனப்பகுதி வீட்டுக்கே வந்துவிடுகிறார். பருவங்கள் மாறத் தொடங்குகின்றன. அடுத்தடுத்த மழைக்காலங்கள் வருகின்றன. ஐப்பசி மழையின்போது வெள்ளம் பெருகி வர சீதா பர்வதம் மூழ்காமல் இருக்க துக்கப்பா நேமா சடங்கு நடத்தத் தீர்மானிக்கிறார்.

யக்ஷகான நடனத்தில் அலங்கரிக்கப்படும் விரிந்த மயில் தோகை போன்ற பின்புற பிரபையுடன் கடவுளுக்கான தோற்றத்துடன் தன் மூத்த மகனை அழைத்துக்கொண்டு படகில் சீதா பர்வத மலை உச்சிக்குச் செல்கிறார். அங்கே இரவு முழுக்க நேமா நடனச் சடங்கு செய்ய வேண்டியுள்ளது என்று கூறி மகனை அனுப்பிவிடுகிறார். மழை வெள்ளம் பெருகப்பெருக அதைப் பற்றி கவலையின்றி அவரது நேமா நடனம் இரவு முழுக்க ஒருவித வேள்வியாக நடக்கிறது.

மறுநாள் வெள்ளத்தில் நாகி, துக்கப்பாவைத் தேடி படகில் வருகிறாள். மூழ்கடிக்கப்பட்ட மலைக்கோயிலில் நீரில் அவரது அலங்காரப் பொருட்கள் மட்டுமே மிதந்து காணப்படுகிறது. அனைத்து நேமா சடங்குகளிலும் அவர் மக்களுக்கு அருள்பாலித்துக் கூறும் ”என்னை நம்பு. உன்னை நான் காப்பாற்றுவேன்” என்ற வாசகம் ஏனோ அப்போது நம் நினைவுக்கு வந்து நம்மை அலைக்கழிக்கிறது.

‘சோமன துடி’ (1975) கன்னடப் படத்தில் பண்ணை அடிமையாக நடித்து இந்தியாவின் மிகச்சிறந்த நடிகருக்கான விருதுபெற்ற எம்.வி.வாசுதேவ ராவ் தனது 75-வது வயதிலும் த்வீபாவில் ‘துக்கப்பா’ கதாபாத்திரத்தில் உயிரோட்டத்தை முன்னிறுத்தி படத்தை வேறொரு உயரத்திற்குக் கொண்டுசென்றுவிட்டார். மிகச்சிறந்த உடல்மொழிக் கலைஞரான கணவனாக நடித்த அவினாஷ் மற்றும் துடிப்புமிக்க இளம் நடிகர் ஹரீஷ் ராஜுவையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

த்வீபாவில் வெவ்வேறு பருவகாலங்களுக்கான பொழுதுகள், மாறுபட்ட வானியல் மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. மாறும் பருவ காலங்கள் அனைத்தும் 12 நட்சத்திரங்களின் குணங்களுக்கேற்பவே அமைந்துள்ளதாக அத்தியாயங்கள்போல பிரிக்கப்பட்டுள்ளன.

இயக்குநரின் படைப்புச் சிந்தனையை உள்வாங்கி பணியாற்றும் செயல்திறன் ஒரு ஒளிப்பதிவாளருக்கு மிக முக்கியமான ஒன்று. அந்தச் செயல்திறன் கூட எப்படிப்பட்டதென்றால் எனக்கு வேலை தெரியும் என்பதைவிட எனக்கு இயக்குநர் விரும்பும் திரைக்கதையின் ஆன்மா தெரியும் என்பதுதான் முக்கியம் என்பதை ராமச்சந்திரா ஹால்கெரே இப்படத்தில் நிரூபித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஆற்றில் பெய்யும் மழை, மலையை மூழ்கடிக்கும் வெள்ளம் என உச்சபட்ச ஆபத்தான சவால் மிகுந்த ஒளிப்பதிவுக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

மேலும் மிகச் சிறந்த படத்திற்கான இந்திய அரசின் தங்கத் தாமரை விருதும் இப்படம் பெற்றது. இவ்விருது இயக்குநர் கிரீஷ் காசரவள்ளி மற்றும் நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்ட சௌந்தர்யா உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது என்பதாகவே நாம் கருதலாம். அணை விளிம்பில் மூழ்கிய கிராமங்களைப் பற்றி பேசத்துணிந்த கிரீஷ் காசரவள்ளி அதன்வழியே மூழ்காத விழுமியங்களை நம் முன் படைத்துவிட்டார்.

அதேபோல இத்திரைப்படத்தில் தாமஸ் இசாக் கோட்டுக்காபள்ளியின் இசை ஒரு முக்கியமான படைப்புக்கான தகுந்த லயத்தோடு சேர்ந்திருக்கிறது. இயக்குநர் ஜி.அரவிந்தனிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் இவர். அதிகாரத்தின் சுமையை எதிர்கொள்ளமுடியாமல் தாழ்ந்து அழுந்தும் வாழ்க்கையை வருடிச்செல்லும் பொருத்தமான மெல்லிய பின்னணி இசைக்கோர்வையை ஆர்ப்பாட்டமின்றி உறுத்தலின்றி மனதோடு பேசும் இசையாக த்வீபாவின் படம் முழுவதும் தவழவிட்டுள்ளார்.

சௌந்தர்யா

சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் போல சிறந்த இயக்குநரையும் தன்னுடைய படத்திற்குத் தேர்ந்தெடுத்த சிறந்த தயாரிப்பாளரைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் நடிகை சௌந்தர்யா.

இக்கரைக்கும் அக்கரைக்குமாக படகிலேயே படம் முழுவதும் சென்று காரியங்களைச் சாதிக்கும் துக்கப்பாவின் மருமகள் நாகியின் போராட்டங்கள் துக்கப்பாவின் போராட்டங்களை விடக் கடுமையானது.

”நாகியக்கா இந்த நீர்மட்ட அளவை நான் ஏன் எடுக்கிறேன் தெரியுமா? புதுசா கட்டற அணையோட உயரத்துக்கு நம்ம ஊர் ஆறோட நீர்மட்டம் அளவு சரிபார்க்கத்தான். நீர்மட்டம் உயரத்துக்குள்ள அதிகாரிங்க நம்மளையெல்லாம் ஊரைவிட்டு கூடிய சீக்கிரம் காலி பண்ணத் திட்டம் போட்டிருக்காங்க என்று சொல்லும் உள்ளூர் பொதுப்பணித்துறை ஊழியன் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடையும் நாகியாக முதல் காட்சியில் அறிமுகமாகிறார் சௌந்தர்யா.

படம் முழுவதும் உள்ளூர் மக்கள், கணவனின் மாறுபட்ட குணங்கள், மும்பையில் தற்கொலைக்கு முயன்று கிராமத்திற்கு ஆறுதல் தேடவந்த கொழுந்தன், வயதான துக்கப்பா என அனைவரிடம் மாறாத அன்பு செலுத்தும் நாகியின் கதாபாத்திரத்தில் தோன்றும் சௌந்தர்யா வெள்ளத்தின்போது எதிர்கொள்ளும் புத்திசாலித்தனமும் உணர்ச்சியும் மிக்க நடிப்பு துடிப்பும் வேகமும் மிக்க வெளிப்பாடுகள் படத்தின் பின்பாதியைத் தாங்கிப் பிடிக்கிறது. கொழுந்தனிடம் நடந்துகொள்ளும் சில கருணைமிக்க தருணங்களை கணவன் தவறுதலாகப் புரிந்துகொண்டதிலிருந்து கணவனை எதிர்கொள்ளத் துடிக்கும் அவரது வெளிப்பாடுகள் உளவியலின் மாறுபட்ட வண்ணங்கள்.

எவ்வளவு வலிகளையும் இழப்புகளையும் பொறுத்துக்கொள்ளும் கதாபாத்திரம் அவருடையது. மேலும் எவ்வளவு உழைப்பானாலும் ஒன்றைச் சாதிக்க வேண்டுமெனில் அதில் உறுதியாக நிற்க வேண்டுமென்ற அவரது பாங்கு மிகச்சரியாக வெளிப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பசு மாடு அடித்துச்சென்றுவிட அதனைப் பிடித்துவருவதாகக் கூறிச்சென்று வெள்ளநீரில் சிக்கிய கொழுந்தனைப் படகில் மீட்டுக்கொண்டு வரும் அதே நாகி, பின்னர் இறுதியாக கணவனின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு தனது கொழுந்தனை பர்வதத்தை விட்டுப் புறப்படுமாறு கேட்டுக்கொள்கிறாள். வெள்ளம் பெருகிவரும் நேரத்தில் இருந்த ஒரே படகில் அவன் சென்றுகொண்டிருக்கும்போது அனைத்துக் கரைகளிலும் ஓடிச் சென்று தூரத்தில் படகில் செல்பவனைப் பார்த்து அவள் ”படகைக் கொண்டுவா. நான் உன்னைக் கரையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறேன்” என்று கத்தி ஆர்ப்பரிக்கும் காட்சியில் வனமே ஸ்தம்பித்து நிற்கிறது. ”அவன் ஒரு சுயநலக்காரன் என்பதை நிரூபிச்சிட்டான்” என்று கணவனிடம் வந்து சொல்கிறாள்.

இறுதியில் மழை வெள்ளத்தின்போது தங்கள் வசிப்பிடத்தின் அருகே புலி உறுமும் சத்தம்கேட்டு நேமா சடங்குக்குப் பயன்படுத்தப்படும் உறுமி மேளத்தை எடுத்து நாகி அடிக்கத் தொடங்குகிறாள். ஏற்கெனவே பசு மாட்டை அடித்து சாப்பிட்ட புலி இப்போது கன்றுக்குட்டியையும் பதம் பார்க்க வருவதைத் தடுக்க நாலு பக்கமும் தீ மூட்டி இரவெல்லாம் விழித்திருக்கிறாள்.

உறக்கமின்றி இரவெல்லாம் கண்விழித்து அவள் இசைக்கும் உறுமி மேள சத்தத்திற்கு புலி வருவது தடுத்து நிறுத்தப்பட கன்றுக்குட்டி உயிர் பிழைக்கிறது. ஆனால் இதைக்கூட அவனது கணவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் அவனது அங்கீகாரத்துக்காக ஏங்குகிறாள். ஆனால் கணவனோ, ”இது உன்னுடைய செயல், அல்ல கடவுள் செயல்” என்கிறான். தன்னை அங்கீகரிக்காத கணவன் செல்வதைப் பார்த்து சீதா பர்வதம் அருகே அவள் விக்கித்து நிற்கிறாள்.

காலமெல்லாம் பெண்கள் சந்தேகத்திற்கும் அடிமைப்படுத்தவுமே உரியவர்கள். அங்கீகாரத்திற்கு அல்ல என்பதன் சாட்சியாக நாகியே ஒரு சீதா பர்வதமாக உயர்ந்து நிற்க, அங்கு நாம் காண்பது சௌந்தர்யா என்ற திரைக்கலைஞரிடம் இதுவரை நாம் கண்டிராத திறமைகளின் சங்கமத்தை.

இந்த ஒரே ஒரு படத்திற்காக, காதலனிடம் முத்தம் கேட்டு அலைய நேரிடவும் நான்கு பாடல்களில் மரத்தை டூயட் பாடிவிட்டுச் செல்ல நேரிடவுமாக செய்து அவரது சீரிய கலை ஆர்வத்தை வீணடித்த சினிமாக்களைப் போகட்டும் என்று மன்னித்துவிடலாம்.

தனது 32 வயதுக்குள் 109 படங்களில் நடித்து இளம் சாவித்ரியாக வலம் வந்த நடிகை சௌந்தர்யா 2004-ல் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அவர் சார்ந்த அரசியல் கட்சிக்கு எத்தகைய இழப்பு என்பதை நாம் அறியோம். நல்ல படங்களுக்கான ஒரு மிகச் சிறந்த தயாரிப்பாளரை இழந்தது நவீன சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயரம் என்பது மட்டும் உண்மை.

பால்நிலவன், தொடர்புக்கு: