‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது

ஜூன் மாதம் எட்டாம் திகதி, நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. காலை முதல் பல ஆறுகள் பெருக்கெடுத்தும் காணப்பட்டன. பாண்டி ஆறிலும் வௌ்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அன்று, நாடு முழுவதும் பயனத்தடை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாலை எட்டு மணியளவில், 31 வயதுடைய சாந்த என்ற இளைஞன், பம்பரலகந்த தோட்டத்தில் உள்ள கடைக்கு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகக் சென்றுள்ளான்.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கடைக்கு சென்ற மகன், ஒரு மணித்தியாலம் கடந்தும் வீட்டுக்கு வரவில்லை, அதிர்ச்சியடைந்த தாயார், தனது மகனின் நண்பனை என்னவென்று பார்த்து வருமாறு அனுப்பியுள்ளார்.

ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்ற சாந்த, அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு வருவதைக் சான்தையின் நண்பன் கண்டான். “சாந்த ஆறு பெருக்கெடுத்து காணப்படுகின்றதே; எப்படி நீ ஆற்றைக் கடந்து வருவாய்” என்று சாந்தையின் நண்பன் சாந்தையிடம் கேட்டான்.

“என்ன செய்வது, நான் எப்படியாவது ஆற்றைக் கடக்க வேண்டுமே; இல்லை என்றால், நான் எப்படி வீட்டுக்கு வருவது? வீட்டிலும் அம்மாவுக்கும் பாட்டிக்கும் சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்கள் இல்லையே” என்று நண்பனுக்குப் பதில் அளித்த சாந்த, ஆற்றைக் கடந்து வருவதற்கு முயன்ற போது, இரண்டு, மூன்று அடிகள் ஆற்றில் கால்வைத்த பொழுதில், நண்பனின் கண் எதிரே, பாண்டி ஆற்றில் சாந்த அடித்துச் செல்லப்பட்டான்.

ஆற்றில் சாந்த அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவனது நண்பன், ஓட்டமாய் ஓடி, சாந்தவின் அம்மாவிடம் நடந்தவற்றைப் பதட்டத்துடன் கூறினான். மகன், பாண்டி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தகவலைக் கேட்ட தாயார், அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்தார். உடனடியாக, அயலவர்களை அழைத்துக்கொண்டு, ஆற்றை நோக்கிச் சென்றான் சாந்தையின் நண்பன். சாந்தையைத் தேடினார்கள்.

அன்றைய இரவு நிலவிய மழையுடனான வானிலையிலும், இரவு முழுவதும் அப்பிரதேச மக்கள், சாந்தையை தேடினார்கள்; சாந்த கிடைக்கவில்லை. சாந்தையின் உறவினர்களால் வெவள்வத்த பொலிஸ் நிலையத்துக்கும் அப்பிரதேசத்தின் கிராம சேவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் ஒன்பதாம் திகதி, பம்பரலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள், வெவள்வத்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் ஆகியோர் இணைந்து சாந்தையைத் தேடினார்கள். சாந்த கிடைக்கவில்லை; மூன்று நாள்கள் தொடர்ந்து தேடியுள்ளார்கள்; சாந்த கிடைக்க வில்லை.

நான்காவது நாள், சாந்த அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து, சுமார் 500 மீ‌ற்றர் தூரத்தில் இருக்கும் ஒரு பாரிய குழியில் இருந்து, சாந்த சடலமாக மீட்கப்பட்டான்.

இவ்வாறு பாண்டி ஆற்றின் அந்தப் பிரதேசத்தில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பல மரணங்கள் சம்பவித்துள்ளன. குறிப்பாக, சிவனொளிபாத மலைப் பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமாக மழை பெய்தால், பாண்டி ஆறு பெருக்கெடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், இந்த ஆற்றை கடந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஜூன் மாதம் எட்டாம் திகதி உயிரிழந்த 31 வயதுடைய சாந்தையும் 2013 ஆண்டு, அவருடைய தாத்தாவாகிய எஸ். எம் தர்மஸ்ரீயும்(வயது 60) 2005ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் நான்காம் திகதி சாந்தவின் மாமாவாகிய கே. ஜி. அஜித்தும் (வயது 29) என பாண்டி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்னர்.

ஒவ்வொரு மரணங்களின் போதும் அப்பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்குப் பல தடவைகள் தெரிவித்துள்ளார்கள். “தமக்கு வாகனங்கள் ஓட்டிச் செல்லும் அளவில் பெரிய பாலம் தேவையில்லை; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பாதங்களைக் கவனமாக வைத்துச் செல்வதற்கு, ஒரு கம்பிப் பாலத்தையாவது அமைத்துத் தாருங்கள்” என்பதாகவே இவர்களுடைய கோரிக்கை அமைந்திருந்தது. ஆனால், இதுவரையிலும் உரிய அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சுமார் 10 குடும்பங்களை சேர்ந்த அப்பிரதேச மக்களும் நாளாந்தம் ஆற்றை கடந்து பயணிக்கின்றார்கள். சுமார் 25 ஏக்கர் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஆற்றை கடந்து செல்வதாக, அத்தோட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.

பாண்டி ஆற்றை கடந்து செல்ல முடியாவிட்டால், பம்பரலகந்த பிரதேசத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் சென்று, வேறு வழிகளின் ஊடாகவே வர வேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தார்கள்.

நாளாந்தம் கூலிவேலை செய்யும் பம்பரலகந்த தோட்ட மக்கள், பாண்டி ஆற்றை நாளாந்தம் கடந்தே வேலைக்குச் செல்கின்றார்கள். காலையில் வேலைக்குச் செல்லும் போது, அமைதியாக இருக்கும் பாண்டி ஆறு, அவர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, பல தடவைகளில் பெருக்கெடுத்து காணப்படும். இதன்போது, வீட்டுக்குச் செல்லமுடியாமல் பல இன்னல்களை இவர்கள் சந்திப்பது பெரும் துன்பகரமானது எனவும் வெறுப்புடன் தெரிவித்தார்கள்.

அத்தோடு, தேயிலை தோட்டங்களுக்கு சென்று, தேயிலை பறித்து கொண்டுவரும் தொழிலாளர்களில் பலர், தேயிலை மூட்டைகளுடன் பாண்டி ஆற்றில் அடித்து சென்று விபத்துக்குள்ளான சம்பவங்களும் இடம்பெற்றள்ளன என பிரதேச தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.