லாட்டரிச் சீட்டு போதை.

நாலாயிரம் சம்பளத்தில் ரெண்டாயிரம் ரூபாய்
லாட்டரி வாங்கியே விடுவார்.
வாங்க முடியாமல் இருக்கமுடியாது அவருக்கு.
அவர் அதன் அடிமை.
பத்திரிகைகளில் விழுந்து விழுந்து செய்திகளை வாசிக்கிறார் என்று நினைப்போம்.
எட்டிப்பார்த்தால், இடுப்பு வேட்டியிலிருந்து
உருவிய லாட்டரிச்சீட்டுகளின் முடிவுகளைத் துழாவிக்கொண்டிருப்பார்.
அவர் வீட்டின் ஏழைமை அந்த ரெண்டாயிரம் ரூபாய் பரிசுச்சீட்டில் தீர்ந்ததேயில்லை. மாறாக, அந்த ரெண்டாயிரம் இழப்பினால் பலநாள் உலை கொதிக்கிற நேரம் குறைந்ததுதான் பலன்.
எண்களை உரசிப் பார்க்கிற லாட்டரி சீட்டு ஒன்று வந்தது தெரியுமா? அவர் நாணயத்தை வைத்து சீட்டை உரசும்போதெல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால், அவர் குடும்பம் கண்ணீர் உகுத்தது.
மனைவியின் பொருமல்…சர்ச்சை…சங்கடங்கள்…சண்டைகள்….
நாமெல்லாம் சொல்வதை கேட்பது மட்டுமல்லாமல், அவருக்கே புத்தியும் இருந்தது. ஆனால் மீளவோ, விடுபடவோ, விட்டுத் தொலைக்கவோ அவரால் முடியவில்லை.
சம்பளத் தேதி வரை காத்திருக்கமாட்டார். கணக்கரிடம் அட்வான்ஸ் வாங்கியே பாதி சம்பளம் தீர்ந்துவிடும்.
சனியனை விட்டுத் தொலைத்தாலென்ன என்று கேட்டால், நேரடியாக பதில் சொல்லமாட்டார். “கிடைத்தால் வீட்டுக்கு. கிடைக்காவிட்டால் நாட்டுக்கு! என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார் !” என்பார்.
எல்லாம் குற்றவுணர்விலிருந்து வரும் பதில்கள்தாம்.
மேற்கண்ட வாசகத்தை சொல்லித்தான் முதல்வராயிருந்த அண்ணாத்துரை அவர்கள் லாட்டரிச்சீட்டு முறையை தமிழகத்தில் கொண்டுவந்தார்.
சரி, நம் அண்ணன் பிறகு எப்படி மீண்டார்?
தமிழக அரசு லாட்டரிச்சீட்டு முறையை
தடை செய்துவிட்டது.
வாங்க வழியே இல்லை.
‘ஆஹா….மீண்டுவிட்டோம்!’ என்பதே
அண்ணனின் கண்ணீர்… ஆனந்தக்கண்ணீர்!
ஜெயலலிதா ஆட்சி
அந்தப் புண்ணியத்தைச் செய்தது.
இப்போது எதற்கு இந்த ஃபிளாஷ்பேக்?
மறுபடியும் தமிழ்நாட்டில் லாட்டரிச்சீட்டு
வரப்போகிறது
என்கிற சேதி ஊடகங்களில் றெக்கை கட்டுகிறது.
இந்தக் கோரிக்கையுடன் நிதியமைச்சரை
லாட்டரி அதிபர்களும், இன்ன பலரும் சந்திக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் உலவுகின்றன.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் “லாட்டரிச்சீட்டை கொண்டுவருவதன்மூலம் கோடி கோடியாக பணம் கொட்டும்! தமிழக அரசின் வருவாயைப் பெருக்கி, பொருளாதாரத்தை சீர் செய்துவிடலாம்! ” என்று அரசாங்கத்துக்கு ‘அரிய’ இலவச ஆலோசனை ஒன்றையும் சொல்லியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.
அரசு வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம், ஆனால், எளிய மக்களின் வாழ்வு சீரழியும் என்பது ஏன் இவர் கண்ணுக்குத் தென்படவில்லை? தென்படாது என்பதுதான் ‘சிதம்பர’ ரகஸ்யம்!
கார்த்தி சிதம்பரம் போன்ற லாட்டரி பொருளாதார வல்லுநர்களை கேளாததுபோல் கடந்துவிடுவது
தமிழக அரசுக்கு நல்லது. அதேபோல்,
லாட்டரி மூலம் சம்பாதித்துச் சமாளித்துவிடலாம்
என்ற சிந்தனையையும்!