வெற்றி பெறாதவர்ளையும் பாராட்டுவோம்

உலக அளவில் தகுதியான சகல நாடுகளும் ஒன்றாக இணைந்து உலகக் கோப்பை என்றாக ஆடும் ஆட்டமாகவும் ஒரு கொண்டாட்டமாகவும் ஏன் இந்திய உப கண்டத்தில் திருவிழாவைப் போலவும் இது கொண்டாடப்படுகின்றது.

பல நுணுகங்களை தன்னகத்தே கொண்ட ஆட்டமாக இது காணப்படுவதும் அதனால் பல சாமான்ய மக்களால் முழுமையாக இந்த ஆட்டத்துடன் இணைய முடியாமல் இருப்பதுவும்…. வசதி படைத்தவர்கள் அதிகம் இந்த விளையாட்டின் முன்னணி வீரர்களாக வருவதற்குரிய பயிற்சிகளை பெறமுடியும் அதன் மூலம் அதிகம் சர்வதேச அளவில் மிளிர முடியும் என்ற ஒரு விடயம் இதற்குள் உதை பந்தாட்டத்திற்கு அப்பால் இருப்பதையும் மறுக்க முடியாது.

அதுதான் இதில் விளையாடும் வீரர்கள் பலரும் விளிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து அதிகம் வருபவர்களாக இருப்பதில்லை…..? உதை பந்தாட்டம் கபடி போன்ற விளையாட்டுகள் போல்.

சரி இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 உலகக் கோப்பை ஆட்டத்திற்கு வருவோம்…

வெற்றியை தவறவிட்ட பல அணிகளில் எமது தேசத்து இலங்கை அணி இருந்தாலும் அதில் பந்து வீச்சில் தன்னை தனி ஆளாக நின்று 21 விக்கட்டுகளைச் சாய்த்து நிரூபித்துக் காட்டிய டில்ஸான் மதுசங்க(Dilshan Madushanka) ஐ நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

இலங்கை கிரிக்கட் தேர்வு அதிகாரத்தில் அரசியல் புகுந்ததினால் ஒரு காலத்தில் உலகக் கோப்பை, ஆசியாக் கோப்பை போன்றவற்றை வென்ற அணி இந்த உலகக் கோப்பையில் அதிகம் தன்னை நீரூபிக்க முடியவில்லை.

வீரர்களின் தெரிவில் இந்த அரசியலும் அணியில் அனுபவம் மிக்க மூத்த வீரர்களின் பங்களிப்பு என்ற கலவையான இளைஞர் பட்டாளம் இல்லாமையும் இலங்கை அணியின் வெற்றியை நழுவிவிட்டமையிற்கான காரணமாக என்னால் உணர முடிகின்றது.

அடுத்து அரை இறுதியில் தென் ஆபிரிக்கா வழமையாக பலரும் கூறுவதுபோல் அதிஷ்டம் அற்றவர்கள்… நாம் தோற்போம் என்ற பதட்டத்துடன் ஆடுபவர்கள் என்ற பார்வைகளுக்கு அப்பால்….

இம்முறை அரையிறுதி ஆட்டத்தில் மட்டை ஆட்டத்திலும் களத் தடுப்பாட்டத்திலும் தலமைத்துவம் விட்ட சில சில தவறுகள் அவர்களின் வாய்பிருந்த வெற்றியை சாத்தியப்படுத்தாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.

அதிலும் களத்தடுப்பில் முதல் 10 ஓவர்களில் மிகக் குறைந்து தமது ஓட்ட எண்ணிக்கை தற்காத்து வெல்வதற்கு ஏற்ப எதிரணியினர் எடுக்கும் ஓட்டங்களை எடுப்பதை மட்டுப்படுத்துவதில் பந்து வீச்சு, களத் தடுப்பு இரண்டிலும் கோட்டை விட்டது இந்தத் தோல்வியின் முக்கியகாரணம் ஆகும்.

இதற்கு அணித் தலைவரின் தவறான முடிவுகள் காரணமாக இருப்பதாக உணர்கின்றேன்.

இந்த வெற்றி பெறாமையிற்கு காரணம் போதியளவு எண்ணிகை ஓட்டங்கள் தென் ஆபிரிக்கா எடுக்கவில்லை என்பதை காரணமாக முன் வைப்பதை விட வாய்ப்புக்கள் இருந்தும் இந்த எண்ணிக்கையிற்குள் எதிரணியினரை மட்டுப்படுத்தவில்லை என்பதே இங்கு என் விமர்சனமாக முன்வைக்க விரும்புகின்றேன்.

இதற்கும் அப்பால் அவிட்டு விட்ட நெல்லிக் காய் மூட்டை போல் இருந்த தென் ஆபிரிக்க அணியை ஒரணியாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான தலைவனாக தன்னை எல்லோரும் ஏற்கும் வகையில் தனது பௌதிகத் தோற்றத்தை எள்ளி நகையாடி போதும் அவற்றை புறம் தள்ளி முன்நின்று உழைத்து அதில் வெற்றி கொண்டவராக தென் ஆபிரிக்க அணித் தலைவர் பாவுமா(Temba Bavuma) நான் பார்கின்றேன்.

அந்த வகையில் கறுப்பு வெள்ளை என்று இரு தரப்பினரையும் கையாளுவதில் அணியை முன்னகர்த்தி செல்வதில் அவர் கண்ட வெற்றி தென் ஆபிரிக்கா கோப்பையை வென்றுவிட்டதாக எனக்குள் உணர்வு ஆட்டங்கள் நடைபெறும் போதே ஏற்பட்டுவிட்டது.

பிரமிக்க வைக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் இருந்தது என்பதை ஏற்கனவே பதிவும் செய்திருந்தேன். எனவே அதுபற்றி இங்கு அதிகம் பேசாவிட்டாலும்…

இன்னும் சற்று கவனம் எடுத்திருந்தால் நேற்று முடிவுற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர் கொண்ட அணியாக ஆப்கானிஸ்தான் திகழ்ந்திருக்கலாம்…..?

அரை இறுதி வரையிலான வெற்றிக் கனியை அவர்கள் அடையாவிட்டாலும் மீண்டும் சிறப்பு வாழ்த்துகள்.

எமது உறவாக தோற்றம் அளிக்கும் நியூசிலாந்தின் இளம் புயல் இரவீந்திரா(Rachin Ravindra) எம்மையெல்லாம் சகல துறை ஆட்டக்காரராக பிரமிக்க வைத்தார்.

இந்திய அணி உலகின் அதிக சனத் தொகை கொண்ட தேசத்தில் இருந்து 11 பேரை தெரிவு செய்தல் என்பதில் மிகவும் கடினமான சூழல் நிலவினாலும் கடந்த கால ஆட்டக்காரர்கள் பலரினது நேரடி மறைமுக வழிகாட்டல்கள் அது சார்ந்த அணித் தெரிவு இறுதிப் போட்டி வரை அவர்களை அழைத்து வந்திருக்கின்றது.

ஆனாலும் இதற்குள் இருக்கும் ‘சமி’ யை ‘சாமி’ யாக மாற்றி அந்த இந்துத்துவாவின் வெறுக்கத் தக்க சமூக ஊடகங்களின் அவதூறுகளும் பொதுவாக எல்லா ஆட்டக்காரர்களுக்கும் ஏற்படும் சறுக்கல்கள் ஏற்படும் போது ‘….சமி பாகிஸ்தானுக்கு போ…’ என்பதுவும் அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதாக விக்கற்றுகளை சாய்க்கும் போது ‘முகமது சமி’ (முகமதுவை நீக்கிவிட்டு) சாமியாக காட்டும் அந்த சங்க பரிவார மேலாண்மை… வெறுப்பு.. வெறுக.கத்தக்கது.

இதனை பாகிஸ்தான் இந்திய ஆட்டத்தில் பாகிஸ்தானின் ஆட்டக்காரர் ரிஷ்வான் அவுட்டாகி திரும்புகையில் ‘ஜெய் சிறீராம்’ என்று குரஜராத் நரேந்திர மோடி ஆட்ட மைதானத்தில் சத்திமிட்ட இரசிகர்களின் கோசங்களும் அருவருக்கத்தக்கன.

முகமட் சமி மீதும் ரிஸ்வான் மீதும் உமிழப்பட்ட அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு வாதங்கள் இந்தியாவின் மாண்பை நிச்சயம் குறைக்கும்.

சமியின் தோல்விகள் ஏற்பட்ட ஆட்டத்தின் போது சங்க பரிவாரங்கள் ‘நீ பாகிஸ்தான் போ…’ என்ற பிதற்றிய போது இந்தியப் பிரதமர் சமியின் பக்கம் நிற்பதுதான் அவர் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து இன் 7 விக்கட்டை சாய்த்து இந்தியாவின் வெற்றியை உறுதி போது ‘வென்று கொடுத்த சாமி’ என்று சமி ஐ இந்தியப் பிரதமர் பராட்டுவதை விட முடியமானது. அதுதான் தேசத்தின் தலைவருக்கான பண்பும் கூட.

சகோதரத்துவத்தை நட்பை ஒருங்கிணைவை பரஸ்பரம் ஏற்படுத்தும் விழாவாகத்தான் எந்த விளையாட்டுப் போட்டிகளும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்….. இதில் யார் வென்றாலும் தோற்றாலும்

மாறாக ஒரு குறிப்பிட்ட மதம், மொழி நிறம், நாடு என்றாக பிரிந்து நின்று வன்மம் தீர்க்கும் செயற்பாட்டினை வளர்க்கும் அணுகுமுறை அது இரசிகர் மத்தியில் இருந்து வந்தாலும் நாட்டுத் தலைவர்கள் இதனை கண்டும் காணமால் வன்மத்தை அனுமதிக்கும் செயற்பாடுகள் ஒரு நாகரீகமான சமூகத்திற்கு உரியது அல்ல.