கடலம்மா….! வஞ்சிக்கலாமா..? கடலம்மா……!!

கடல் வற்றுது என்று

சொன்னாங்கோ

புதினம் பார்க்க

ஓடினோம்

கடலம்மாவை

புதினமாய்

பார்த்தவங்க நாங்க

காற்றாடப்

போனவங்க நாங்க

காலாற

நடந்தவங்க நாங்க

கடற்தொழில்

செய்தவங்க நாங்க

எரிமலையென்று மலையில்

கேள்விப்பட்டோம்

நில அதிர்வென்று தரையில்

கேள்விபட்டோம்

தரை பிளக்கும்

கட்டங்கள் விழும்

என்றுதானே

எமக்குத் தெரியும்

தண்ணீர் வற்றி

உம்மை நோக்கி

எம்மை

ஓடவைத்து

மீண்டும்

நீ பொங்கியெழுந்த

அலையாய்

எம்மை நோக்கி

வந்த கோலம்

என்னவோ…?

நீ திரும்பி

செல்லும் போது

எம்மை அள்ளிச்

சென்றதென்னவோ…?

மரம் உயரத்திற்கு

அலை எழுந்தது

என்ன சீற்றமோ…?

எம்மையும்

அந்த உயரத்திற்கு

கொண்டு சென்றதென்னவோ…?

கொண்டு சென்று

எம் மூச்சை

அடக்கி வைத்து

முளையை

நிறுத்தியது என்னவோ…?

மரத்தின்

கிளையில் தொங்க

எங்கள்

கூந்தல்தான் காரணமோ..?

நீண்ட கூந்தல் காரணமோ…?

மண் சரிந்தால்

மனை சரிந்தால்

நான் அணைத்து

என் பிள்ளையை

என்னவளை

காத்தேன்

நீர் அணைத்தால்

நீர் அள்ளிச் சென்றால்

நான் அணைத்தும்

என்னவளின்

என் பிள்ளையின்

காலன்

போனதென்னவோ…?

கடலம்மா

நாம் உன்னை

அம்மா என்றுதானே

விழிப்போம்

அம்மா உயிர்தான்

கொடுப்பாள்

தன் உயிர்

கொடுத்தாவது

எமக்கு

உயிர் கொடுப்பாள்

ஏனம்மா…?

கடலம்மா

எங்கள் உயிர்களை

எடுத்தாய்

உயிர் எடுப்பதில்

நீ பாகுபாடு காட்டாது

இனம் மதம் மொழி தேசம்

காட்டாது

உன் சமத்துவத்தை காட்டினாய்

அதனால்தான் நாமும்

உதவிக்கரம்

காட்டும் போது

இனம் மதம் மொழி தேசம்

கடந்து உதவினோம்

தொழில் நுட்பங்கள்

தோற்றுப் போனதே

இயற்கையின்

சீற்றத்திற்கு

இயற்கை

சமநிலையை

குழப்பிய

மானிடத்திற்கு

நீ கொடுத்தது

தண்டனை

அதிகம் அம்மா

அம்மா நீ

எங்களை

வஞ்சித்தாலும்

நாம் உன்னை

அம்மா என்றுதான்

அழைப்போம் தாயே

மீண்டும்

ஒரு வஞ்சித்தலை

எமக்குச்

செய்ய மாட்டாய்

என்பதினால் கடலம்மா

நீ பசித்து

எம்மை

உன்னுடன்

அணைக்கவில்லை

அழைக்கவில்லை

கடலின் நில நடுக்கம்

கால நிலை மாற்றம்

மனித குலம் செய்த

தவறுகளுக்காக

நீ சீண்டப்பட்டாய்

உணர்கின்றோம்

வல்லரசுகளும்.. இலாபங்களும்…

மூலதனச் குவிப்புகளும்

ஒரு சிலரே செய்கின்றனர்

அதற்கு உன்னை

நம்பி வாழும்

உழைக்கும் மக்களை

வஞ்சிக்காதே அம்மா

நாம் இன்னமும்

இனிமேலும்

அம்மா என்றுதான்

அழைப்போம்

கடலம்மா

நீதான் பொறுத்து

எமக்கு அருள

வேண்டும் அம்மா

கடலம்மா தாயே