‘அல்லாஹு அக்பர்’

‘அல்லாஹூ அக்பர் ‘

இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது

அது தன் முந்தைய அர்த்தத்தின் கிளையிலிருந்து

தன்னை விடுவித்துக்கொண்டு

ஒரு பறவையைப்போல

பறந்து செல்கிறது

ஒரு சிறு பெண்

தனது சிறிய கீச்சுக்குரலால்

நாடு முழுக்க

ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்

‘அல்லாஹு அக்பர்’ என்றால் என்ன? என்று

பல்லாயிரம் கைகள் கூகுளில் தேடுகின்றன

அது ஒரு மத உணர்வின் வாக்கியம் என

சிலர் பொருள்கொள்ள விழைகின்றனர்

இல்லை

எல்லாவற்றின் அர்த்தமும் மாறுகின்றன

‘ அல்லாஹு அக்பர்’ என்பதன் பொருளும்

ஓரிரவில் மாறிவிட்டது

அல்லாஹு அக்பர் என்றால்

நீதி வேண்டும் என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

இது எனது நாடு என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

ஒருவர் அடையாளத்தை

மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

தேச பக்தி என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

கோழைத்தனத்தின்மேல்

காறி உமிழ்தல் என்று பொருள்

அல்லாஹு அக்பர் என்றால்

அது ‘அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே’

என்று பொருள்

இன்று ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்ல

ஒருவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்பதில்லை

அவன் அல்லாவை வணங்குபவனாக

இருக்கவேண்டும் என்று கூட

அவசியமில்லை

நீதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற

எவரும் சொல்லலாம்

‘அல்லாஹு அக்பர் ‘

சமாதானம் வேண்டும் என்று சொல்கிற

எவரும் முழங்கலாம்

‘அல்லாஹு அக்பர்’

அநீதிக்கு தலைவணங்கமாட்டோம்

என்று சொல்கிற எவருக்கும் உரியதுதான்

‘அல்லாஹு அக்பர்’

அதை ஒரு சிறுபெண்

நூறு அர்த்தங்கள் கொண்ட

ஒரு வரலாற்றுப் பிரகடனமாக்கிவிட்டாள்

8 2.2022

இரவு 11.01

மனுஷ்ய புத்திரன்