தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு


2015 ஆம் ஆண்டில் இலங்கை இறுதியாக தனது வருடாந்த தேயிலை ஏற்றுமதியை 300 மில்லியன் கிலோ கிராம்களுக்கு அதிகமாக பதிவு செய்திருந்ததாகவும், அவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி 151 மில்லியன் கிலோகிராம்களாகவும் பதிவாகியிருந்தது.

அந்நியச் செலாவணி வருமானமீட்டல் 20 சதவீதத்தால் அதிகரித்து 127 பில்லியன் இலங்கை ரூபாயாக பதிவாகியிருந்தது. இது சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.8 சதவீத அதிகரிப்பாகும்.

துருக்கிக்கான தேயிலை ஏற்றுமதி உயர்வடைந்திருந்தது. 17 மில்லியன் கிலோகிராம் தேயிலை துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு 16 மில்லியனும், ரஷ்யாவுக்கு 13.3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஊடாக ஏற்றுமதி 3.3 மில்லியன் கிலோகிராம்களிலிருந்து 10.2 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரித்திருந்தது. சீனாவிற்கான ஏற்றுமதியும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதத்தால் உயர்ந்து 7.4 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரித்திருந்தது. ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 8.9 மில்லியன் கிலோகிராம்களிலிருந்து 6.3 மில்லியன் கிலோகிராம்களாகவும், அசர்பைஜான் 6.1 மில்லியன் கிலோகிராம், லிபியா 5.6 மில்லியன் கிலோகிராம் மற்றும் சிரியா 4.1 மில்லியன் கிலோகிராம்களையும் இறக்குமதி செய்திருந்தன. தென் அமெரிக்காவின் பாரிய சந்தையான சிலி 3.5 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இறக்குமதி செய்திருந்தது. ஜப்பானுக்கான ஏற்றுமதி 3.1 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தது.