நவீன விவசாயச் செய்முறை , விளைவித்தல் என்ற சொல்லிற்கு அப்பால் ‘உற்பத்தி’ என்ற பதத்திலேயே வந்து நிற்கிறது. உற்பத்தியானது எப்போதும் நுகர்வு கலாச்சாரத்திற்காக சந்தையை நோக்கிச் செல்லும் . அல்லது, உற்பத்தியானது சந்தையின் ஊடாக நுகர்ச்சியை நோக்கி செல்லும்.
பண்டைய விவசாயத்தில் உணவு பொருட்கள் விளைவிக்கப்பட்டன. ‘உற்பத்தி’செய்யப்படவில்லை. விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அந்தந்தக் குடும்பங்களாலும் , அவர்களின் கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளாலும் உண்ணப்பட்டு, அவற்றின் கழிவுப் பொருட்கள் அந்தச் சூழலிலேயே சேர்க்கப்பட்டன.
இந்த நடைமுறையே காடுகளில் காணப்படுவதால் காடுகளின் கனிப்பொருள் வட்டம் சீர்குலையாமல் காடு எப்போதும் செழிப்பாகவே காணப்படுகின்றது.எப்போது எமது எமது விளைப்பொருட்கள் சந்தையை நோக்கிச் செல்லத் தொடங்கியதோ, அன்று தொடக்கம் எமது மண்ணின் கனிப்பொருள் வட்டம் சீர் குலையத் தொடங்கி , மண்ணில் கனிப்பொருள் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.
நான் முன்னர் எழுதிய தென்னைப் பயிர்ச்செய்கை பற்றிய கட்டுரையொன்றில் பகிர்ந்த கீழ்வரும் கணக்கீட்டை ஒரு முறை அவதானியுங்கள்.
ஒரு ஏக்கர் தென்னந்தோட்டத்த்தில் 64 தென்னை மரங்கள் இருக்கும். அந்த 64 தென்னை மரங்களில் இருந்தும்
● ஓலை
● பாளை
● பொச்சு
● சிரட்டை
● பருப்பு
● இளநீர்
ஆகியவற்றின் மூலம்
● 46kg நைதரசன் (Nitrogen)
● 8.4kg பொஸ்பரஸ் (Phosphorus)
● 52.8kg பொட்டாஸ் (Potassium )
● 13.2kg மகினீசியம்
ஆகிய கனியுப்புக்கள் அந்த ஒரு ஏக்கர் தென்னம் தோப்பில் இருந்து ஒரு வருடத்தில் அகற்றப்படுகின்றன.
இவை முறையே
● 100kg யூரியா
● 30.5kg சுப்பர் பொஸ்பேட்
● 88kg மியூரிடேட் ஒப் பொட்டாஸ்
● 55kg டொலமைட் என்பவற்றிற்குச் சமனாகும்.
இவ்வாறு அகற்றப்பட்ட கனியுப்புக்கள் மீண்டும் அந்த தென்னம் தோப்பில் மீழ்சுழற்சியாக சேர்க்கப்படுகின்றதா என்றால்? சேர்க்கப்படுவதில்லை.
அவை கொழும்புச் சந்தையை நோக்கி கொண்டு செல்லப்பட்டு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இவ்வாறு விளைபொருட்கள் தொடர்ந்து அந்த தென்னந்தோப்பிலிருந்து அகற்றப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதியானால்; அந்த தோப்பில் கனிப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த மண் வளம் குன்றுகின்றது.
இயற்க்கை உரங்கள் இந்தக் கனிப்பொருள் வளத்தை ஈடுசெய்யுமா?
இந்த தென்னந்தோப்பிற்கு செயற்கைப் பசளை எதுவும் போடாமல் தனியே மாட்டெருவை மாத்திரம் இடுகின்றோம் என வைத்துக்கொள்வோம்.
100kg மாட்டெருவில் உள்ள கனியுப்புக்கள் வருமாறு
● 1.22kg நைதரசன்
● 0.62kg பொஸ்பரஸ்
● 1.2kg பொட்டாஸ்
30kg மாட்டெருவை ஒரு தென்னை மரத்திற்கு போடும் பொது அது மரத்திற்கு தேவையான முழு அளவிலான நைதரசனை வழங்குகின்றது.
ஆனால் மரத்திற்கு தேவையான முழு அளவிலான பொஸ்பரஸ், பொட்டாஸ் என்பவற்றை வழங்குவதில்லை .
இதை ஈடுசெய்ய 500g சபேஸ் பொஸ்பேட்,
300g மியூரியேட் ஒப் பொட்டாஸ் என்பவற்றை இட்டாலேயே மரத்திற்கு தேவையான முழு போசணைப் பெறுமானமும் கிடைக்கும்.
உயிர் உரங்கள் ( Bio fertilizer) மரத்திற்கு தேவையான முழு போசணைப் பெறுமானத்தையும் வழங்குமா?
காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்குகின்ற செயன்முறையையே உயிர் உரங்கள் செய்கின்றன.
1. ரைசோபியம் (Rhizobium):- இது அவரைக் குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுக்களில் இயற்கையாக காணப்பட்டு காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்குகின்றது.
2. அசட்டோபாக்ட்டர் ( Azotobactor)- இதை ஒருவித்திலை தாவரங்களின் விதைகளுடன் கலந்து விதைக்கும் போது ஒரு வித்திலை தாவர வேர்களில் தங்கி இருந்து காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்கும். கரும்பு செய்கையில் நடவிற்கு முன் கரும்பு விதைத்துண்டங்கள் அசட்டோபாக்ட்டர் கலவையில் தோய்த்து நடப்படுகிறது.
3. அசோஸ்பைரில்லம் ( Azospirillum )- இதை தானிய பயிர் விதைகளுடனும், மரக்கறிப் பயிர் விதைகளுடனும் கலந்து விதைக்கும் போது அப்பயிர்களின் வேர்களில் தங்கி இருந்து காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்குகிறது.
4. நீலப்பச்சைப்பாசி ( Blue green alge ) :- அல்கா வகையைச் சேர்ந்த இத்தாவரம் நெல் வயல்களில் காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்குகின்றது.
5. அசோலா ( Azolla ) :- பன்ன வகை தாவரமான இதுவும் காற்றில் இருந்து நைதரசனை கிரகித்து பயிர்களுக்கு வழங்குகின்றது. தற்போது கால்நடை தீவனமாகவும் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.
6. பொஸ்போபாக்டீரியா ( Pseudomonas putida )- பக்றிரியா வகையை சேர்ந்த இந்த உயிர் உரம் மண்ணில் காணப்படும் கரைய முடியாத பொசுபேற்றுக்களை கரையக்கூடிய பொஸ்பரஸ் ஆக மாற்றி பயிர்களுக்கு வழங்குகின்றது.மண்ணில் பொசுபேற்றுக்கள் காணப்படாவிட்டால் இந்த பக்க்டீரியாக்களால் எவ்வித பயனும் இல்லை. அதாவது இவை காற்றிலோ வேறு இடத்திலோ இருந்து பொஸ்பரஸை பெற்று மண்ணுக்கு வழங்குவதில்லை மண்ணில் பொசுபேற்று இருந்தாலே இது செயற்பட்டு பொஸ்பரஸை பயிர்களுக்கு வழங்கும்.
7. றைற்க்கோடெர்மா விரிடி (Trichoderma viride ) :- இதை வெங்காயம், மிளகாய், கத்தரி, தக்காளி ஆகிய பயிர்களின் விதைகளுடன் விதை நேர்த்தி செய்து பயிரிடும் போது இது நாற்று அழுகல் நோயை கட்டுப்படுத்திடுகிறது.
ஆக மொத்தத்தில் உயிர் உரங்களால் பயிர்களின் நைதரசன் தேவையை மட்டுமே பூர்த்திசெய்ய முடியும். பொசுபரசு, பொட்டாசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
தற்போதுள்ள வேளாண் செயன்முறையில் அளவிற்கு அதிகமான நைதரசன் உர பாவனையான மிகை யூரியா, மிகை அமோனியம் சல்பேற்று இடுதல் என்பனவே உணவையும் நீரையும் நஞ்சாக்குகின்றது.
எனவே யூரியா, அமோனியம் சல்பேற்று ஆகிய நைதரச செயற்கைப் பசளைகள் பாவித்தலை நிறுத்தி அல்லது குறைத்து உயிர் உரங்கள் மூலம் பயிரின் நைதரசன் தேவையை நிறைவு செய்து கொண்டு; மற்றய மூலகங்கள் உள்ள செயற்கைப் பசளைகளான மியூரியேட் ஒப் பொட்டாஷ்; சூப்பர் பொஸ்பேற் என்பனவற்றை சிபாரிசுக்கேற்ப பயன்படுத்துவதே, நஞ்சற்ற வெற்றிகரமான வேளாண்மைக்கு வழிவகுக்கும்.
வடகோவை வரதராஜன் — 12 / 07 / 2021