ஆப்கனில் இடைக்கால அரசு அமைந்ததில் மகிழ்ச்சி: உலகமே மவுனம் காக்க சீனா கருத்து

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

ஆப்கானிஸ்தானைக் கைபற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் நேற்று வெளியிட்டனர்.

அமைச்சரவையில் இடம் பெற்ற பெரும்பாலான தலிபான்கள், தீவிரமான அடிப்படைவாதிகள், மதக்கோட்பாடுகளையும், அரசியல் விதிகளையும் சிறிதுகூட விலகாமல் கடினமாகக் கடைபிடிக்கக்கூடியவர்கள்.

ஆப்கனில் அமையும் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசில் 33 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இடைக்கால அரசு குறித்து உலக நாடுகள் மவுனம் காத்துவரும் நிலையில் சீனா தலிபான் முடிவை வரவேற்றுள்ளது.

“ஆப்கானிஸ்தானில் மூன்று வார கால குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. புதிய இடைக்கால அரசை அமைத்ததோடு தலிபான்கள் நாட்டை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர வேண்டும். ஆப்கன் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால், தலிபான்கள் மிதமான போக்கையே உள்நாட்டிலும் வெளியுறவிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகிறோம். ஆப்கன் மண்ணிலிருந்து அனைத்துத் தீவிரவாத அமைப்புகளையும் வேரறுக்க வேண்டும். அப்போதுதான் பிறநாட்டுடனான உறவைப் பேண முடியும். குறிப்பாக அண்டை நாட்டுடன் நல்லுறவு ஏற்படும்” என்று சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

சீனா தான் தங்களுடைய பங்காளி என்றும் சீன நிதியையே தேசத்தை மீள்கட்டமைக்க நம்பியிருப்பதாகவும் தலிபான்கள் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இநிந்லையில் சீனா தங்கள் நாட்டுக்கான நிதி உதவியை அதிகரிப்பதாகக் கூறியுள்ளதாகவும், கரோனா கட்டுப்பாட்டில் உதவ முன்வந்துள்ளதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

உலகமே மவுனம் காக்கும்போது சீனா மட்டும் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் கூட, தலிபான்கள் பிரிவினைவாத கொள்கை கொண்ட உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எவ்வித ஆதரவும் கொடுத்துவிடுவார்களோ என்ற ஐயமும் கொண்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச அரசியல் நிபுணர்கள், காபூலுடன் நீடித்த நிலையான உறவைப் பேணுவதன் மூலம் சீனா தனது வெளிநாட்டில் கட்டமைப்பை நிறுவும் கொள்கையை விஸ்தரிக்கும் என்றும், சில்க் ரோடு வாயிலான வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளும் என்றும் கூறுகின்றனர்.