இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை நேற்று இரவு 9 மணிக்கு(உள்ளூர்நேரப்படி) வெடித்துச் சிதறி, எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.

அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள சைல்டு எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சுமத்ரா, ஜாவா கடற்கரைப்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதிலும் நேற்று பவுர்ணமி என்பதால், கடல் ஆவேசமாகக் காணப்பட்டது. அனைத்து ஒன்று சேர்ந்த நிகழ்வால் சுனாமி அலைகள் உருவாகின

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரஹோ கூறுகையில், “ தெற்கு சுமத்ரா, ஜாவா மேற்குப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்திப்பகுதியை சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தாக்கின. அலைகள் ஏறக்குறைய 20 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது.

முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கின என்று சந்தேகித்தோம். ஆனால், கிராகட் எரிமலையில் உள்ள சைல்டு எனும் எரிமலை வெடித்தது, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டுள்ளது எனத் தகவல் அறிந்தோம்’’ எனக் கூறினார்.

இந்த சுனாமி அலை தாக்கியதால், கரிட்டா கடற்கரைப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரைக் காணவில்லை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் அரசு அலுவலகங்களில்பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.