இலங்கை: கொரனா செய்திகள்

நாடுபூராகவும்  அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் வகை என்ன என்பது குறித்து புதிய பரிசோதனைகளை ஆரம்பிக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோய்எதிர்ப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென அதன் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பரவி வரும் கொ​ரோனா தொற்றை, சாதாரண பிசிஆர் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், குறித்த புதிய பரிசோதனை ஆரம்பிக்கப்படவுளதொகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்கா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றா, இலங்கையில் பரவுகின்றது என்பது குறித்து புதிய பரிசோதனை மூலம் அறிந்துக்கொள்ளலாம் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருநாகல்- தித்தவெல்கால பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கமைய, அங்கு 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் 700 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 500 பேரின் அறிக்கைகள் கிடைத்துள்ளதென்றும் இதற்கமைய, 100 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதென்றும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தித்தவெல்கால பிரதேசத்தில் 1,320 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸாருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னரே, 11 பொலிஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 20 பொலிஸாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.