இலங்கை: கொரனா செய்திகள்

  • மினுவங்கொடை கல்வி வலயத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
  • அந்த கல்வி வலயத்தைச் சேர்ந்த  78 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • அந்த கல்வி வலயத்தில் 14 பெற்றோர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 46 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  திருகோணமலை  பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை மாவட்டத்தில், கல்விப் பிரிவுகள் சிலவற்றில், பாடசாலைகள் மூன்று திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில் மாணவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளர். அத்துடன், திருகோணமலை அபயபுரம் வித்தியாலயத்தின் அதிபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. அதனையடுத்து அவ்விரு வித்தியாலயங்களும் மூடப்பட்டன.

சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது அதனையடுத்து அப்பாட​சாலையும் மூடப்பட்டது.

அந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த ஏனைய மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால், மேற்படி மூன்று பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று 9 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது அதிகரித்து வரும் நிலையில்  பாடசாலைகளை மீண்டும் மூடுவது குறித்துத்   தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளை தெரிவித்துள்ளார்.