இலங்கை: கொரனா நிலவரம்

மன்னார் மாவட்டத்தில், எதிர்வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மன்னார் மாவட்டத்தில் எவ்வாறு வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில், இன்று (11) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இதில் 30 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கும் அடுத்த வாரமே கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பான பெரிமுறைகள் ஆராயப்பட்டுள்ளதென்றார்.

அதே நேரம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென, அரச வைத்தியதிகரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

குறித்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்ததாவது, “ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்தப் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவக் கூடுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அய்வுக்கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அதாவது, தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 – 1,200 வரை அதிகரிக்க கூடும். எனவே, இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்” என்றார்.

புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவல், இதுவரை கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.