கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை; தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கிய தொழிலதிபர்

கரூர் மாவட்டம் புஞ்சைபுகழூர், தோட்டக்குறிச்சி பேரூராட்சிகளில் கரோனா தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி செம்படாபாளையத்தில் இன்று (ஏப்.10) நடைபெற்றது.

செம்படாபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தோகை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் புஞ்சைபுகழூர் பேரூராட்சி செம்படாபாளையம் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் 10 தூய்மைப் பணியாளர்களின் கால்களை தண்ணீரால் கழுவி கால்களில் மஞ்சள், குங்குமம் இட்டு, சால்வை அணிவித்து, கால்கள் மற்றும் தலையில் மலர்கள் தூவி அவர்களின் காலில் விழுந்து வணங்கி, சூடம் ஏற்றி தீபாராதனை காட்டி கவுரவித்தனர்.

மேலும், புஞ்சைபுகழூர் பேரூராட்சியைச் சேர்ந்த 80 பேர், புஞ்சை தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த 25 பேர் என மொத்தம் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு, 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரூ.600 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை தோகை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர், தொழிலதிபர் அன்புநாதன் ஆகியோர் வழங்கினர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 2,000 பேருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரூ.600 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் என சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்.