கஷொக்ஜியின் இறுதி வார்த்தை: ‘என்னால் சுவாசிக்க முடியாது’

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்படுவதற்கு முந்தைய இறுதித் தருண ஒலிப் பதிவின் எழுத்து வடிவத்தை வாசித்த தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டிய சி.என்.என், ஜமால் கஷொக்ஜியின் இறுதி வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியாது’ என நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த எழுத்து வடிவமானது ஜமால் கஷொக்ஜியின் கொலை ஏற்கெனவே திட்டமிடப்பட்டதென வெளிப்படுத்துவதாகவும் என்ன நடைபெறுகின்றதென்பதை கூறுவதற்கு சில தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டதாகவும் குறித்த தகவல் மூலம் சி.என்.என்க்கு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியாவிலுள்ள உயர் அதிகாரிகளுக்கே குறித்த தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் நம்புவதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.

எழுத்து வடிவமானது, தனது கொலையாளிக்கெதிராக கஷொக்ஜி தடுமாறுவது உள்ளடங்கலாக கஷொக்ஜியின் உடல் அரமொன்றால் வெட்டப்படும் சத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்ததாக சி.என்.என் கூறியுள்ளது.

அசல் எழுத்துவடிவமானது துருக்கி புலனாய்வு சேவைகளால் தயாரிக்கப்பட்ட நிலையில், தமது தகவல் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பதிப்பொன்றையே வாசித்ததாகவும் கஷொக்ஜியின் கொலை தொடர்பாக விசாரணை தொடர்பாகக் கூறப்பட்டதாகவும் சி.என்.என் தெரிவித்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்கு இவ்வாண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி நுழைந்த ஜமால் கஷொக்ஜி, தூதரகத்துக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கஷொக்ஜியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாடுகடத்துமாறு துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவானால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை சவூதி அரேபிய வெளிநாட்டமைச்சர் நேற்று நிராகரித்துள்ளார்.