சிந்து நதிநீர் நிறுத்தம்: நீர் பஞ்சத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2, 2024 உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2, 2025 நிலவரப்படி, சிந்து நதி நீர் அமைப்பில் (பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள்) கிடைக்கும் நீரின் சதவீதம் 10.3 சதவீதம் குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வருவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால், வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிந்து நதி நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA), இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி பஞ்சாப் மாகாணத்தில் 1,28,800 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த நீர் சேமிப்பை விட 14,888 கனஅடி குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் காரீப் பயிர் விதைப்பு பருவம், தென்மேற்கு பருவமழை ஜூலை இறுதி வரை பஞ்சாப் மாகாணத்தை அடைய வாய்ப்பில்லை. மேலும் கடுமையான வெப்ப அலைகள் ஆகியவற்றால் விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இந்த கோடையில் நாட்டின் மொத்த நீர் ஓட்டத்தில் 21 சதவீத பற்றாக்குறையையும், இரண்டு முக்கிய அணைகளில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு பற்றாக்குறையையும் எதிர்கொள்வதாக பாகிஸ்தான் கடந்த மாதம் கூறியது. அணை அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன விநியோக கண்காணிப்பு நிறுவனங்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.