ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?

கர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது.

காரணம் ஜி.பரமேஸ்வரா கொரட்டாகிரே தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி வேட்பாளர் சுதாகர் லாலை எதிர்த்துதான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகியுள்ளார். இதன் மூலம் பரமேஸ்வரா மாநிலத் தேர்தல்களில் 5வது முறையாக வெற்றி பெற்றார்.

கர்நாடக காங்கிரஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் பரமேஸ்வரா பற்றி குறிப்பிடும் போது ராஜீவ் காந்தியே ஒருமுறை தும்கூர் மாவட்டத்திற்கு வந்த போது இவரிடம் திறமை இருப்பதாக அடையாளம் கண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரமேஸ்வரா முதலில் கர்நாடக காங்கிரஸின் இணைச் செயலராகப் பொறுப்பேற்றார். ஆனால் அதன் பிறகு தலைவரான இவர் 8 ஆண்டுகளாக தலைவர் பதவியில் நீடித்து வருகிறார்.

மதுகிரி தொகுதியில் 1989, 1999, 2004 ஆகிய ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற 2008-ல் கொரட்டாகெரே தொகுதியில் வென்றார்.

இருப்பினும் 2013-ல் இதே கொரட்டாகெரே தொகுதியில் பரமேஸ்வரா தோற்கடிக்கப்பட்டார். அப்போது கர்நாடக முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் பரமேஸ்வரா பெயரும் அடிபட்டது. ஆனால் இவர் தோற்றதால் சித்தராமையா முதல்வரானார்.

கர்நாடகா பட்டுப்பூச்சி வளர்ப்புத்துறை அமைச்சராக 1993-94-லிலும் 1999-2004-ல் உயர்கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

துணை முதல்வராக பரமேஸ்வரா பொறுப்பேற்றார் என்றால் அவர் முதல் தலித் துணை முதல்வராவார்.

முன்னதாக பரமேஸ்வரா கூறும்போது, “மக்களில் பலரின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நாங்கள் ஜேடிஎஸ்-உடன் சென்றிருக்கக் கூடாதுதான், ஆனால் அதைவிட முக்கியமானது மதச்சார்புச் சக்தியான பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டுதான் கட்சியின் மூத்தவர்கள் ஜேடிஎஸ் உடன் செல்ல முடிவெடுத்தனர்” என்றார்.