நுண்கடன் திட்டத்துக்கு எதிராக கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு

“நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில், செங்கலடி-பதுளை வீதியில், கித்துள் சந்தியில் அமைதியான முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம், “நுண்கடனை தடுத்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதியே நடவடிக்கையெடுங்கள்”, “கடனில் இருந்து விடுபட்டு எங்களையும் மனிதர்களாக வாழவிடு”, “வறுமையின் கோரப்பிடியில் வாழும் மக்களுக்கான நீதியை நிலைநாட்டு”, “நாட்டில் நுண்கடன் செயற்பாடுகளை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

நுண்கடன் பெறும் நிறுவனங்களின் செயற்பாடுகளால் நாட்டில் பல பெண்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தனியார் நுண்கடன் திட்டங்களை இல்லாமல் செய்து, அரச வங்கிகள் ஊடாக பெண்களுக்கான கடன்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் வட மாகாணத்திலும் நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது உறவுகளைத் தேடி கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு 1,863 நாள்கள் கடந்தும்,  தமக்கான தீர்வு கிடைக்காத நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி, தங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நடத்தி வருவதாகவும்  தங்களுக்கான  தீர்வு சர்வதேசத்திடம் இருந்து விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், நாடு பூராகவும் 28 இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் நிம்மதியை இழந்து, நித்திரையை இழந்து தவிக்கும் தமது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.