பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா?- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு

பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு(27) உட்பட 4 பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இதைக் கொண்டு அந்தப் பெண்களை பலமுறை மிரட்டி தொந்தரவு செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி-க்கும், பின்னர் சிபிஐ-க்கும் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவ – மாணவியரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் நேற்று முன்தினம் பல ஊர்களில் நடந்தது. நேற்று அதைவிட சற்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டு போராட்டம் விரிவடைந்ததது. இந்தப் போராட்டங்களை மிகக் கவனமாக கையாளுமாறு போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனால் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அமைப்புகள் மீது சந்தேகம்இதுகுறித்து உளவுப்பிரிவினர் கூறும்போது, பாலியல் சம்பவத்தைக் கண்டித்து உணர்வுரீதியான மாணவர்கள் போராட்டமாக திசை திருப்பவும், படிப்படியாக அதிகரிக்கச் செய்து, ஸ்டெர்லைட் போராட்டம் போல் மாற்றவும் சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் நேரத்தில் தங்களுக்குச் சாதகமாக இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்ல, எந்த ரூபத்திலும் போராட்டத்தை எடுத்துச்செல்ல வேண்டும் என அந்த இயக்கத்தினர் ஆலோசனைவழங்கி வருகின்றனர். இதனால் போராட்டத்துக்கான பின்னணியில் உள்ளோர், பங்கேற்போர் உண்மையிலேயே மாணவர்கள் மட்டும்தானா என பல்வேறு வழிகளில் கண்காணிக்கிறோம்.

வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கியிருப்பதையும் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். அரசு ஊழியர்சங்கமும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகளில் அரசு ஊழியர்கள் தலையிட மாட்டார்கள்.

மாணவர்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபடுவோர் அமைதியாக கலைந்து செல்லும்வரை போலீஸார் பாதுகாப்பு அளிக்கவும், கைதுசெய்வதைத் தவிர்க்கவும், எக்காரணத்துக்காகவும் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் போராட்டத்துக்கிடையே யாரும் ஊடுருவி விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், சம்பவ இடங்களில் 2 போலீஸ் வீடியோகிராபர்களை பணி அமர்த்தவும், கேமரா பொருத்தப்பட்ட வேன்களை நிறுத்தி, கணினியில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக நடக்கும் போராட்டம் தொடர்பான அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பி வருகிறோம் என்றனர்.