‘பெயர்’ மாற்றம் வேண்டாம்

வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

வவுனியா வடக்கில் சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக, வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டுத்திட்டக் கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த உத்தியோகத்தர் ஒருவர், “இராசபுரம் என்னும் தமிழ் மக்களின் பூர்வீகக் கிராமத்தின், பெயர் லைக்கா ஞானம் கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களை மீள்குடியேற்றுவதற்காக வீட்டுத்திட்டம் வழங்குவது நல்ல விடயமாக இருக்கின்ற போதும் ஒரு பாராம்பரிய பழமையான கிராமத்தின் பெயரான இராசபுரம் என்பதை மறைப்பது வரலாற்றை மாற்றுவதாக அமைந்து விடும் எனவும் குறிப்பிட்டார்.

அவரது, கூற்றுக்கு பதிலளித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புராதன கிராமங்களின் பெயர்கள், அந்தக் கிராமங்களின் அடையாளங்களாகவும் ஏதோவொரு வகையில் அந்தக் கிராமத்தவர்களுடன் தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளது.

அந்த அடையாளங்களை நாம் மாற்ற முடியாது. அது தொடர்பில் உடனடியாக பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் வலியுறுத்தினார்.

அந்த கோரிக்கைக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தானும் ஆதரவு வழங்கினார்.

இதனையடுத்து பதிலளித்த வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர் க.சத்தியசீலன், கிராமத்தின் பெயரை மாற்றி வீதிப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் எம்மிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த கிராமத்தின் பெயரை மாற்ற முடியாது எனவும் அது, இராசபுரம் கிராமம் என்றே தொடர்ந்தும் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், உடனடியாக புதிதாக பெயர் மாற்றி அமைக்கப்பட்ட வீதிப் பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.