மணித்தியாலத்துக்கு 32 பேர் பறக்கின்றனர்

“தேசிய மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலும் சிறந்த நாட்டுக்கான புதிய அரசியலமைப்பும்” என்ற கூட்டத் தொடரின் புத்தளம் மாவட்டத்துக்கான கூட்டம் சிலாபத்தில் இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல், ஜனநாயகத்தை பாதுகாத்தல், தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்தல் போன்ற உன்னத கொள்கைகளுடன் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றோம். 

அதேபோன்று மாதுளுவாவே சோபித்த தேரரின் கொள்கையையும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றோம். இந்த பிரதேசத்தின் மத தலைவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களை சந்தித்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளோம். 

நாட்டை கட்டி எழுப்புவதற்கு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அண்மை காலங்களாக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் நாட்டின் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாக நாம் கருதுகின்றோம். 

எவ்வித மக்கள் பங்களிப்பும் இன்றி 2020இல் நிறைவேற்றப்பட்ட 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் காரணமாக ஜனநாயகம் அழிவை சந்தித்தது. நாட்டின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அந்த அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்த சந்தர்ப்பம் முதலே அதை இரத்து செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீள் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பினோம். அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, உயர் நீதிமன்ற பரிந்துரைகளுக்கு அமைய மேற்படி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அது அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும்.

வாழ்க்கை செலவு, மின் துண்டிப்பு, எரிபொருள் மற்றும் அன்னிய செலாவணி பற்றாக்குறை, விவசாய துறையின் வீழ்ச்சி, மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். 

புதிய அறிக்கைகளுக்கு அமைய இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த எட்டு மாத காலத்தினுள் 500 க்கு மேற்பட்ட  மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பொறியியலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

வருங்காலம் பற்றி ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையின் காரணமாகவே இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி செல்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குதல் அவர்களின் முதன்மை நோக்கமாக அமைந்திருக்கின்றது. 

எமது நாட்டின் பல்கலைக்கழகங்கள் போதிய அளவு இல்லாத காரணத்தினால் பெற்றோர்கள் காணிகளை விற்றுவிட்டு பிள்ளைகளுடன் வெளிநாடு செல்கின்றனர். எமது நாட்டின் வளங்களை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். 

இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இதன் போது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது. இதை பாராளுமன்றத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒட்டுமொத்த பிரஜைகளிடமும் அந்த நிலைப்பாடு ஏற்பட வேண்டும்” என்றார்.