மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன

மத்திய நகரான மக்வேக்கு அருகிலுள்ள விமானத் தளத்தில் நான்கு றொக்கெட்டுகள் முதலாவது தாக்குதலில் ஏவப்பட்டதாக, இணையத்தில் வெளியிடப்பட்ட இராணுவ செய்தியாளர் மாநாடொன்றில் அறிவிப்பாளரொருவர் தெரிவித்துள்ளார். மூன்று றொக்கெட்டுகள் பண்ணைகளைத் தாக்கியதுடன், ஒன்று வீதியில் விழுந்துள்ளது. தளத்திலுள்ள ஒரு கட்டடம் சிறிது சேதமடைந்ததாக பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய மியான்மாரிலுள்ள மெய்க்டிலாவிலுள்ள மியான்மாரின் பிரதான விமானத் தளமொன்றின் மீது ஐந்து றொக்கெட்டுகள் பின்னர் ஏவப்பட்டிருந்தன. எனினும், எதுவித சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், மத்திய நகரான பகொவுக்கருகில் ஆயுதக் களஞ்சிய வசதியில் தொடர்ச்சியான வெடிப்புகள் ஏற்பட்டதாக பகொ வோச் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டிருந்தது.