முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சிறை

கடந்த 1991 – 96 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்தபோது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அரசு சார்பில் ரூ.15.45 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அந்தத் தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறி, ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம், இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனையும் முன்னாள் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது தி.மு.க.வில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.