14 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம்

இதுதவிர, இந்திய தேசிய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் அரசாங்கத்தை வீழ்த்தக் காரணமான 17 சட்டமன்ற உறுப்பினர்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹொலி, மஹேஷ் குமதஹல்லி, சுயாதீன உறுப்பினரான ஆர். ஷங்கர் ஆகியோரை கடந்த வியாழக்கிழமை தகுதிநீக்கம் செய்திருந்தார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், கர்நாடக சட்டபையின் தற்போதைய பதவிக்காலமானது 2023ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த நகர்வால் கர்நாடக சட்டசபையின் பெரும்பான்மை இலக்கானது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் அரசாங்கத்தின் வரையறைக்குள் வந்துள்ள நிலையில், இந்த அரசாங்கமானது கர்நாடக சட்டசபையின் இன்று (29) நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது.

இந்த தகுதிநீக்கங்களால் கர்நாடக சட்ட சபையான 208 உறுப்பினர்களைக் கொண்டதாக மாறுகின்ற நிலையில், பெரும்பான்மையானது 105 உறுப்பினர்களாகும். பாரதிய ஜனதாக் கட்சியானது தற்போது 105 உறுப்பினர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதியதொரு சபாநாயகர் தேர்தெடுக்கப்படும் வரையில் கே.ஆர். ரமேஷின் பதவிக்காலம் நீடிக்கும் என்ற நிலையில், தான் சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.