அம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்!

சாப்பாட்டுக்கு இத்தனை அக்கப்போரா என கேட்காதீர்கள்!


யாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை நிர்வாகத்தால் பெயரில்லாத- அனாமதேய உணவகமொன்று நடத்தப்படுகிறது. நிர்வாக பதிவேடுகளில் பெயரில்லாத உணவகமாக அது இருந்தாலும், பொதுமக்களால் அம்மாச்சி உணவகம் என்றுதான் அது அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அம்மாச்சி உணவகமல்ல. இன்னும் பெயரிடப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடமாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லையென்பதே இன்றைய யதார்த்தம்.
ஏன் மாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லை?

இதற்கு பின்னால் ஒரு கதையிருக்கிறது. வடமாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் பாரம்பரிய உணவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்காக உணவகமொன்று அமைக்கும் திட்டத்தை அப்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்தார். பாரம்பரிய உணவு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம். இதன் முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் (UNDP) உதவியுடன் வவுனியாவில் ஒரு உணவகம் திறக்கப்பட்டது.

உணவகத்தின் பெயரில் பாரம்பரியத்தன்மை வெளிப்பட வேண்டுமென அம்மாச்சி என்ற பெயரை அப்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சூட்டினார்.

அந்த பகுதிகளில் உள்ள மகளிர் அமைப்புக்கள் உணவகத்தில் சிறிய தொகை வாடகையை செலுத்தி, உணவகத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்வதே அம்மாச்சி உணவகத்தின் பொறிமுறை. இதனால் உள்ளூரிலுள்ள பெண்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் பெறலாம். அத்துடன், பாரம்பரிய உணவு உற்பத்திக்கான ஊக்குவிப்பாகவும் அமையும்.

வவுனியாவில் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் ஓஹோவென்ற வரவேற்பை பெற, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அம்மாச்சி உணவகங்கள் அமைக்கப்பட்டன.
இயற்கையான முறையில் அதிக சுகாதாரத்துடன் தயாரிக்கப்படும் உணவுகள், மிக மலிவு, ஆரோக்கியம், அரிதாகும் பாரம்பரிய உணவுகள் போன்ற காரணத்தால் மிக விரைவில் பட்டிதொட்டியெங்கும் அம்மாச்சியின் பெயர் சென்றது.

எண்பது ரூபாய்க்குள் மிகத்திருப்தியான மதிய உணவென்பதையெல்லாம் இந்த காலத்தில் கற்பனை பண்ணவும் முடியாது. அதை அம்மாச்சி உணவகம் வழங்கியது.

மன்னாரிலும் அம்மாச்சி உணவக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வடமாகாணசபை நிதியில் இது ஆரம்பிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் யாழ்ப்பாணத்திலும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மாகாண விவசாய பணிப்பாளர், யாழ்ப்பாண உணவகத்திற்கான நிதியை மத்திய விவசாய அமைச்சிடம் கேட்டு பெற்றுள்ளார். இதுதான் இன்றுவரையான சர்ச்சையின் காரணம்.

உணவக பணிகள் முடிந்து திறப்புவிழா நெருங்கிய சமயத்தில்தான் சர்ச்சை ஆரம்பித்தது. மத்திய அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டதால் விவசாய அமைச்சர் துமிந்த சில்வாவை உணவகத்தை திறந்து வைக்க வேண்டும், ஹெல போஜன என்ற பெயர் வைக்க வேண்டுமென மத்திய விவசாய அமைச்சு அதிகாரிகளால் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஹெல போஜன சல என்பது, மத்திய அரசின் கீழ் இயங்கும் பாரம்பரிய உணவகங்கள். பல வருடங்களின் முன்பிருந்தே தெற்கில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஹெல என்பதன் அர்த்தம் இலங்கை. போஜன என்பது உணவு. இலங்கையின் உணவு என்பது இதன் அர்த்தம்.

இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறுவதற்கு முன்னரே- கடந்த மே மாதம் அளவில், மாகாண விவசாய பணிப்பாளர் மத்திய அரச நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதங்களில் அம்மாச்சி என்ற பெயர் பாவிக்கப்படவில்லை. பாரம்பரிய உணவகம் என்ற தலைப்பிலேயே கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
பின்னர் துமிந்த திசாநாயக்கவை பிரதம விருந்தினராக அழைத்து அம்மாச்சி உணவத்தை திறக்க மாகாண விவசாய அமைச்சு அதிகாரிகள் தயாரான சமயத்தில், அப்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலையிட்டு நிகழ்வை இடைநிறுத்தினார். முதலமைச்சர் விக்னேஸ்வரனை பிரதமவிருந்தினராக அழைத்து நிகழ்வை நடத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் பதவிவிலகிய பின்னர், மீண்டும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உணவகத்தை திறக்க முயன்றனர். விவசாய அமைச்சையும் கவனித்து வந்த முதலமைச்சர் தலையிட்டு நிகழ்வை இடைநிறுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து மத்திய விவசாய அமைச்சர் துமிந்த சில்வா தொலைபேசியில் முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். ஹெல போஜன் என்ற பெயரையே வைக்க வேண்டுமென இதன்போது முதலமைச்சரிடம் கூறினார் துமிந்த திசாநாயக்க. இந்த பேச்சின் பின்னர், முதலமைச்சர் கடிதமொன்றை துமிந்த திசாநாயக்கவிற்கு அனுப்பினார். அதில் ஹெல என்பதற்கு இலங்கை என்பதை போல ஈழம் என்றும் பொருள் கொள்ளலாம். ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாமென்ற சிபாரிசை முதலமைச்சர் அனுப்பினார்.

அவ்வளவுதான். மறுமுனையிலிருந்து எந்த பதிலும் இல்லை.

அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சினால் பெருமெடுப்பிலான விவசாய கண்காட்சி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டிருந்தது. இதன்போது சத்தமின்றி அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டு விட்டது!

ஆனால் எந்த பெயரும் அதற்கு வைக்கப்படவில்லை. மத்திய அரசை பகைக்ககூடாதென வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன் நினைப்பதால் எந்த பெயரையும் வைக்கவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டால் வழுவழுப்பான பதிலை சொல்லிவிட்டு தப்பிக்கிறார். ஆனால் வடக்கு அதிகாரிகளும், விவசாய அமைச்சும் வெளிப்படுத்தும் நல்லெண்ணங்களை மத்திய விவசாய அமைச்சு வெளிப்படுத்துவதில்லை. இதற்கு ஒரு உதாரணம், வடக்கில் மிகப்பற்றாக்குறையாக உள்ள இலங்கை விவசாயசேவை தர அதிகாரிகள் வெற்றிடத்தை நிரப்புமாறு பல கோரிக்கைகள் விடப்பட்டபோதும், மத்திய விவசாய அமைச்சு பாராமுகமாகவே இருக்கிறது. தவிரவும், மத்தியிலிருந்து மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இரந்து பெறப்படுவதாக இருக்ககூடாது. அது ஒரு சீரானபொறிமுறையானதாக இருக்க வேண்டும்.

அம்மாச்சி சிக்கலாகியதற்கு காரணம், மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரின் நடவடிக்கை என்ற விமர்சனம் உள்ளது. அவருக்கு மத்திய விவசாய அமைச்சு அதிகாரிகளுடன் உள்ள நெருக்கத்தின் அடிப்படையில் அம்மாச்சிக்கான நிதியை பெற்று, அவர்களின் விருப்பபடி ஹெலபோஜன் என்ற பெயரை வைக்க விரும்பினார். இந்த விடயத்தில் அவர் விவசாய அமைச்சர், முதலமைச்சருடன் கலந்துரையாடவில்லை.

உணவும் தமிழர்களின் ஒரு பண்பாட்டு கூறுதான். உணவு முறை மாற்றமடைவதும் பண்பாட்டு, கலாசார சீரழிவை வேகமாக நிகழ்த்திவிடும். ஒருமித்த இலங்கை கோட்பாடு பற்றிய பேச்சுக்களும், நடவடிக்கைகளும் தீவிரம் பெற்றுள்ள இந்த சமயத்தில், பல்கலாசார அம்சங்களை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாகவும் அம்மாச்சியை நோக்கலாம். ஹெல போஜன திட்டத்தில் இலங்கை பாரம்பரிய உணவுகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் தமிழ் பாரம்பரிய உணவுகளிற்கு இடமில்லை. ஹெல போஜனின் பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யலாமென மத்திய அரசு கூறினாலும், அது தொடர்ந்து நீடிக்குமா, மத்திய அரசின் அத்துமீறலை அதிகாரிகள் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவர்களா என்பதெல்லாம் சந்தேகத்திற்குரியது. இதைவிட, நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
மாகாண விவசாய அமைச்சரும், அதிகாரிகளும் எப்பொழுது புரிந்து கொள்வார்கள் இதை?

இதேவேளை, தமிழ் பக்கம் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்குள்தான் மாகாண விவசாய பணிப்பாளரின் தங்குமிடமும் உள்ளது. உதவி பண்ணை முகாமையாளர் விடுதியில் மாகாண விவசாய பணிப்பாளர் தங்கியுள்ளார். மாகாண பணிப்பாளர்களிற்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் விதிமுறைகள் எதுவும் இல்லாதபோதும், மாகாண விவசாய பணிப்பாளர் விடுதி வசதியை அனுபவித்து வருகிறார். பிரதி விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையில் விவசாய பண்ணை இயங்க வேண்டும். ஆனால் திருநெல்வேலியில் இப்பொழுது ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்கின்றன. மாகாண விவசாய பணிப்பாளரும் அங்கு தங்கியிருப்பது நிர்வாக குறுக்கீடுகளை நிகழ்த்துகிறது.

இதேவேளை, திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தின் முன்பாக உள்ள தனியார் விதை உற்பத்தி, மரக்கன்றுகள் விற்பனை நிலையத்தை நடத்துவது, விவசாய பயிற்சி நிலைய மூத்த அதிகாரியொருவரின் மனைவி. விவசாய பயிற்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக குறுக்கீடுகளினால், அந்த அதிகாரி கடமைநேரத்திலும் மனைவியின் விற்பனை நிலையத்தில் போய் இடையிடையே உட்கார்கிறாராம்.

(Page Tamil)