அரசியல் படிப்பினைகள்

ஆக, இப்போது அரங்கேறியிருப்பது ராஜபக்ஸக்களின் ஆட்சியாகும். அதாவது ராஜபக்ஸக்களின் குடும்ப அதிகாரம். இதனை அவர்கள் ஜனநாயக வழியில், தேர்தல் என்ற மக்கள் ஆணையின் மூலமாகப் பெற்றிருக்கிறார்கள். சட்டபூர்வமான ஆட்சியென உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனால்தான் 2018 ஒக்ரோபரில் அலரி மாளிகையை விட்டுச் செல்ல முடியாது என்று மறுத்துக் கோட்டுக்கு (நீதி மன்றத்துக்கு) போன ரணில் தரப்பு, இப்பொழுது சத்தமில்லாமல் அலரி மாளிகையை விட்டு வீட்டுக்குப்போக வேண்டி வந்தது. ஊடகங்களும் ராஜபக்ஸ எதிர்பாளர்களும் 2018 ஒக்ரோபரில் கொந்தளித்ததைப்போல இந்தத் தடவை கொந்தளிக்க முடியாமலுள்ளது.

பிரதமர் பதவியை ரணில் துறந்திருக்கிறார். அன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இன்று செய்வதறியாமல் திணறிப்போயிருக்கின்றனர்.

ஆனால் இந்த வெற்றியை, இந்தச் சூழலை ராஜபக்ஸக்கள் எளிதாகப் பெறவில்லை. ஊழல், போர்க்குற்றம், ஜனநாயக மறுப்பு, குடும்ப ஆட்சி, சர்வாதிகாரப்போக்கு, வெள்ளை வான் கடத்தல், ராணுவச் சிந்தினை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் மத்தியிலேயே பெற்றிருக்கின்றனர். இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் எதிரணிகளும் பிற சக்திகளும் வலுவாக வெளிப்படுத்திக் கொண்டிருந்த சூழலிலேயே ராஜபக்ஸக்களுக்கான உச்ச ஆதரவைச் சிங்கள மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் பல நீதி மன்ற வழக்குகளும் ஒன்றின் மீதொன்றாக ராஜபக்ஸக்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்தன. இதையெல்லாம் கடந்துதான் சிங்கள மக்கள் ராஜபக்ஸக்களை ஆதரித்திருக்கின்றார்கள்.

இப்பொழுது ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது மட்டுமல்ல, அத்தனை வழக்குகளிலிருந்தும் கோட்டபாய ராஜபக்ஸ விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதியின் மீது வழக்குகளைச் செலுத்த முடியாது என்ற விதிமுறையின் கீழ் இது நிகழ்ந்திருக்கிறது. தங்களைச் சூழந்திறுக்கிக் கொண்டிருந்த நெருக்கடிகளை புத்திபூர்வமாகவும் கடுமையான முயற்சிகளின் வழியாகவும் ராஜபக்ஸக்கள் தகர்த்திருக்கிறார்கள் என்பதையே இதெல்லாம் காட்டுகின்றன.

இந்தச் சாத்தியங்களை ராஜபக்ஸக்கள் எப்படி உருவாக்கினார்கள்? எதற்காகச் சிங்கள மக்கள் ராஜபக்ஸக்களை விரும்புகின்றனர்? அல்லது ஏனிப்படியெல்லாம் நடந்தது? இதில் தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்புகள் என்ன? வெளிச்சக்திகள் எவ்வாறான செல்வாக்கையும் தாக்கத்தையும் உண்டாக்கியுள்ளன?

இதை நாம் ஆராய்ந்தறிய வேணும்.

தமிழர்கள் மட்டுமல்ல, இந்தக் கேள்விக்கு முஸ்லிம்களும் விடைகாண வேண்டும். ஏன் சிங்கள மக்களில் பெருந்தொகுதியினரும் கூட இதைக்குறித்துப் பரிசீலிப்பது அவசியம். குறிப்பாக ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் வலியுறுத்துவோர் இதைப்பற்றிப் பல தளங்களில் ஆராய வேண்டும்.

இதைச் செய்தால்தான் யதார்த்த நிலை என்ன என்று மதிப்பிடவும் உண்மை என்ன என்று அறியவும் முடியும். அதுவே எதிர்கால அரசியலையும் எதிர்காலத் தலைமையையும் சரியாக உருவாக்கக் கூடியதாக இருக்கும். நிகழ்காலச் சூழலைச் சரியாக மதிப்பிடவில்லை என்றால் எதிர்காலத்தைச் சரியாக உருவாக்க முடியாது. ஆகவே எல்லாவற்றையும் விட யதார்த்தம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இது அவசியம். ஏனெனில் யதார்த்தமே எப்போதும் செல்வாக்கைச் செலுத்துவதுடன் நடைமுறையாகவும் உள்ளது.

முதலாவது, ராஜபக்ஸக்களின் இந்த வெற்றிக்கு மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தின் பலவீனமும் தோல்வியும் முக்கியமான காரணம். பின்னாளில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உற்சாகமற்ற நடவடிக்கைகள். எதையும் உறுதியாகவும் வேகமாகவும் வெளிப்படையாகவும் செய்யாத அரசியல் தலைமை என்ற எண்ணம் ஒட்டுமொத்த இலங்கையிலும் ஏற்பட்டிருந்தது. இதை உள்ளுராட்சித் தேர்தலின்போது மக்கள் வெளிப்படுத்தி, உணர்த்தியிருந்தனர். சிங்களப் பகுதிகளில் ஐ.தே.கவும் வடக்குக் கிழக்கில் த.தே.கூவும் சந்தித்த பின்னடைவு இதற்குச் சாட்சி. இதை அடுத்த ஒரு வருடத்திலும் கூடச் சரி செய்வதில் இந்தத் தரப்புகள் முயற்சிக்கவில்லை.

இரண்டாவது, ராஜபக்ஸக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள பேரபிமானம்.

ராஜபக்ஸக்களின் மீதான இந்தப் பேரபிமானத்துக்குக் காரணம், அவர்கள் புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, அதற்குப் பிறகு விரைந்த அபிவிருத்தியை மேற்கொண்டது, கட்டுக்கோப்பான ஆட்சி, விரைவான நிர்வாகத்துறை, வெளிச்சக்திகளுக்கு அதிகம் விட்டுக் கொடுப்புகளைச் செய்யாதிருப்பது… சிங்கள பௌத்தத்தைப்பற்றிய உயர்ந்த மதிப்பை வழங்குவது, அதற்கு விரிவான ஆதரவளிப்பைச் செய்வது …..இப்படியான ஒரு நிகழ்ச்சித் திட்டம். இதெல்லாம் சிங்கள மக்களிடத்தில் ராஜபக்ஸக்களின் மீது கவர்ச்சியையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. பேரபிமானத்தை உண்டாக்கியுள்ளது.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், ஆயிரம் விமர்சனங்களை ஆதாரபூர்வமாக வைத்தாலும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோருக்கு புலிகளிடத்திலும் பிரபாரன் மீதும் அழிக்க முடியாத பேரபிமானம் எப்படியுள்ளதோ, அதைப்போலவே ராஜபக்ஸக்களின் மீது சிங்களச் சனங்களின் பேரபிமானம் குவிந்திருக்கிறது. இவ்வாறான பேரபிமானத்தின் கண்களுக்கு மற்றவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளும் குறைபாடுகளும் விமர்சனங்களும் எளிதிற் புலப்படாது. விசுவாசமும் அபிமானமும் அதைச் சுலபமாக மறைத்து விடுகிறது. அல்லது மன்னிக்கக் கூடியதாக உள்ளது.

ஆக, புலிகள் மீது பலரும் வைக்கும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் இந்தப் பேரபிமானிகள் எவ்வாறு பொருட்படுத்துவதில்லையோ அப்படித்தான் ராஜபக்ஸக்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சிங்களப் பேரபிமானிகள் பொருட்படுத்தவில்லை.

எனவேதான் மிகக் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், வசைபாடுதல்கள், புறக்கணிப்புகள் இருந்தபோதும் ராஜபக்ஸக்களைப் பேரபிமானிகள் தங்களின் தலையில் ஏற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் வெளிப்பாடே கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும். அவர்களைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஸவும் கோட்டபாய ராஜபக்ஸவும் வெற்றிகளின் நாயகர்கள். இவர்கள் இருவரும் தோற்கவும் கூடாது, தோற்கடிக்கப்படவும் கூடாது என்பதே சிங்கள உளவியல் – விருப்பம்.

மூன்றாவது, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தரப்புகளுடன் ஐ.தே.கவுடன் கொண்டிருந்த கூட்டு என்பதும் ரகசிய நடவடிக்கைகளின் கீழ் ரணில் அரசாங்கம் எதையோ செய்ய முயற்சிக்கிறது என்பதும் சிங்கள மக்களுடைய எண்ணம். ஆனால், இவ்வளவுக்கும் ஐ.தே.கவுக்கு ஆதரவளித்ததற்குப் பரிகாரமாக இந்தச் சமூகங்களுக்கு ரணில் அரசாங்கம் எந்தப் பெரிய நன்மைகளையும் செய்யவில்லை என்பது வேறு விசயம். ரணிலின் தந்திரங்களைக் குறித்த சந்தேகம், அவர் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலுக்குரிய ஆள் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைத்தது.

நான்காவது, ஏப்ரல் (ஈஸ்டர் நாட்களில் நடந்த) குண்டு வெடிப்புகளின் பிறகு ஏற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகத்தையும் எதிர்ப்புணர்வையும் பொதுஜன பெரமுன தரப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதைக் கடந்து புதிய தளத்தில் அரசியலை முன்னெடுப்பதற்கு – முறியடிப்பு அரசியலைச் செய்வதற்கு – முஸ்லிம் தலைமைகள் முயற்சிக்கவில்லை. பதிலாக அவை தமிழ்த்தேசிய அரசியல் முறைமையை – எதிர்ப்பு மற்றும் தீவிரத் தேசிய நிலைப்பாடு – கையில் எடுத்தமை. அதன்படி மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு, அதன் வழியான அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சஜீத்தை ஆதரிக்க முன்வந்தமை. இதை சிங்களச் சமூகம் வேறு விதமாக – எதிர்நிலையில் நோக்கியது. தமக்குப் பாதுகாப்பற்ற சூழலை இது உண்டாக்கும் என. இந்த ஊகத்திற்கு அவர்களிடம் ஆதாரங்களில்லை. ஆனால், அதைக் கடந்து வரக் கூடிய நிலையிலும் அவர்களிருக்கவில்லை. அதேவேளை இதைப்பயன்படுத்தி கோட்டபாய தரப்பு “தேசிய பாதுகாப்பு” என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தியது.

ஐந்தாவது, 2015 இல் தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்விலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளை வைத்துக்கொண்டு முன்னெடுத்த அரசியல். அதற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையும் புதிய திட்டமிடல்களும். அதற்கான வேலைத்திட்டங்களில் கூட்டாக உழைத்தமை. பரந்த அளவிலும் மிக வேகமாகவும் முன்னெடுத்த வேலைகளை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றமை.

ஆறாவது, தடைகள், நெருக்கடிகள், எதிர்ப்புகள், ஆபத்துகள் என்பதைக் குறித்த உச்சகட்ட விழிப்புணர்வு ராஜபக்ஸக்களிடமிருந்தமை. இதைச் சரியாக உணர்ந்து கொண்டமையே இந்த வெற்றிக்கான மையத் தூண்டலாகும். கரணம் தப்பினால் மரணம். தாமதமாகும் ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு நொடியும் பெரும் பின்னடைவு, ஆபத்து என்ற அகவுணர்வு அவர்களை செயல் முனைப்பில் குவித்தது. இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு எளிய உதாரணம், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இரண்டு தடவை பதவி வகித்த மகிந்த ராஜபக்ஸ, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் அரசியலில் ஈடுபட்டமை. இதற்கான மனநிலையும் உறுதிப்பாடும் கவனத்திற்குரியது. அப்படி இருந்து கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் என ஐந்து ஆண்டுகளுக்குள் – ஒரு ஆட்சிக்காலத்துள் அதிகாரத்துக்கு வந்தமை. 2015 இல் எதிர்க்கட்சியாகவே இருக்க முடியாத நிலையிலிருந்த ராஜபக்ஸக்கள் பின்னர் அதை உருவாக்கி, எதிர்க்கட்சித் தலைவராகியதும் இப்பொழுது ஆளும் தரப்பாக வந்திருப்பதும் எளிதில் கடந்து விடக்கூடிய ஒன்றல்ல. இதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிமுறைகளைப் பற்றிய விவாதங்களிருக்கலாம். ஆனால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மறுத்துரைக்க முடியாத வகையில் தமது ஸ்தானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ஏழாவது, 2018 இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றம் சட்டரீதியாகப் பெறுமதியற்றது. தவறானது என்று நிரூபிக்கப்பட்டதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, மக்கள் ஆதரவைப் பெற்று ஜனநாயக வழியில் தமது வெற்றியை – அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சித்தமை. அதில் வெற்றியைப் பெற்றிருப்பது.

எட்டாவது, இனப்பிரச்சினைத்தீர்வுக்கு எப்போதும் வெளிச்சக்திகளையே தமிழ்த்தரப்பு வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருப்பது. போர்க்குற்றம் குறித்த விசாரணையை வலியுறுத்துவது. சர்வதேச நீதிப்பொறிமுறைக்கூடாக ராஜபக்ஸக்களை (வெற்றி நாயகர்களை) தண்டிக்க முற்படுவது போன்ற காரணங்கள் உண்டாக்கிய எதிர்ப்புணர்வு. இதை எதிர்கொள்வதற்குப் பலமானதொரு அரசாங்கம் தேவை என்ற சிங்களத்தரப்பின் எண்ணம் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளது. அந்த அரசாங்கத்துக்குரியவர்கள் ராஜபக்ஸக்களே என்ற முடிவு.

ஒன்பதாவது, ஒவ்வொரு சமூகங்களும் தமக்குள் கொண்டிருந்த அச்ச நிலையாகும். ராஜபக்ஸக்களைக் குறித்த அச்சம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிருந்தது. தமிழ், முஸ்லிம் தரப்புகளைக் குறித்த அச்சம் சிங்கள மக்களுக்கிருந்தது. இதுவே ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் பிரதிபலித்தது. அவரவர் தத்தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கருதியவரை ஆதரிக்க முற்பட்டனர். அல்லது அச்சுறுத்தலான தரப்புக்கு எதிராகச் சிந்தித்தனர். இதில் சிங்களச் சமூகம் பெரும்பான்மையினராக இருந்ததால் (66 லட்சம்) அந்த வாக்குகளை கோட்டபாயவின் பக்கமாகத்திரும்பி வெற்றியைக் கொடுத்தது.

பத்தாவது, ஒவ்வொரு சமூகத்தினரும் தமக்குள் கொண்டிருந்த தவறான புரிதல்களும் மதிப்பீடுகளும் இந்த வெற்றியை ராஜபக்ஸக்களுக்கானப் பரிசளித்திருக்கிறது.

பதினோராவது, செய்திருக்க வேண்டிய நல்லிணக்கப் பொறிமுறை, பகை மறப்பு போன்ற பணிகளை சந்திரிகா குமாரதுங்க தரப்பினர் உள்பட அனைவரும் செய்யத் தவறியமை. இதனால் பகை, அச்சம், தடுமாற்றம் போன்றவை வாக்குகளை ராஜபக்ஸக்களின் பக்கமாகத் திருப்பி விட்டது.

பன்னிரண்டாவது, தீர்வு, அமைதி, சமாதானம் போன்றவற்றில் விசுவாசமான ஈடுபாட்டோடு எந்தவொரு அரசியற் சக்தியும் செயற்படாமல் இருப்பதென்பது. மக்களுக்கும் இதில் பற்றில்லை. இதன்விளைவே எதிரும் புதிருமாகச் சிந்திக்க முற்பட்டு ஏதோ எல்லாம் நடந்திருக்கிறது.

பதின்மூன்றாவது, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிச்சக்திகள் தம்மை நோக்கி நெருங்கக் கூடியதொரு உள்ளகச் சூழலை உள்நாட்டரசியலில் ராஜபக்ஸக்கள் உருவாக்கியமை.

இப்படியான காரணங்கள் உருவாக்கிய நிலையே இன்று நாம் கண்டு கொண்டிருப்பதாகும்.

கோட்டாவின் வெற்றியோடு இலங்கை அரசியற் களம் முற்றிலும் வேறாக மாறியுள்ளது. இந்தப் பக்கத்திலிருந்தவர்கள் அந்தப்பக்கத்துக்கும் அந்தப்பக்கத்திலிருந்தவர்கள் இந்தப் பக்கத்துக்கும் என்ற நிலை தோன்றியுள்ளது. அதாவது பிரதமராக இருந்த ரணில் எதிர்க்கட்சித் தலைவராகும் நிலையும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ஸ பிரதமர் ஆகிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ரணிலுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி கூடக் கிடைக்குமா என்பதற்கே உறுதியில்லை. ஐ.தே.கவுக்குள் குத்து வெட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. தோல்வி அதனை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. “அதற்குள் பிரச்சினைகள் உள்ளனதான். ஆனால், அது உள் வீட்டுப் பிரச்சினை” என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்திருப்பது இதைச் சான்றாக்குகிறது.

எனவே இந்தப் பேரபிமானப் பின்புலத்தில் அரசேறியிருக்கும் ராஜபக்ஸக்கள் குறைந்தது இனி வரும் பத்தாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புண்டு. இடையில் அவர்களால் விடப்படும் தவறுகளையும் பிற அரசியற் குறைபாடுகளையும் ஜனநாயக மறுப்புகளையும் அரசியல் முதலீடாக்கி எதிர் அரசியலைச் செய்வதற்கு யாராவது முன்வந்தால் நிலைமைகளில் மாற்றங்கள் நிகழலாம். மற்றும்படி ராஜபக்ஸக்களின் கொடியே பறக்க வாய்ப்புள்ளது.

2015 இல் ரணில் – மைத்திரி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகியபோது இப்படி அண்ணனும் தம்பியும் (மகிந்தவும் கோட்டாவும்) அதிகாரத்தில் உட்காருவதைப்பற்றி யாரும் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பிறகு ஐ.தே.க – சு.க கூட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைத் தேசிய இனக்கட்சிகள் இணைந்திருந்த ஆட்சியின்போதும் ராஜபக்ஸக்களின் எதிர்காலம் கேள்வியாகவே இருந்தது. இதைச் சரியாகச் சொன்னால், ராஜபக்ஸக்கள் பலவீனப்படுத்தப்பட்டுக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்படுவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. நடந்ததெல்லாம் மெல்ல மெல்ல ராஜபக்ஸக்கள் பலமடைந்ததே.

2015 ஜனவரி 09 அதிகாலை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய தோல்வியை அறிந்த மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகையை விட்டுச் சத்தமின்றி வெளியேறி்ச் சென்றார். குனிந்த தலையோடு வெளியேறிச் சென்றவரின் உள்ளே இதயமோ எரிமலையாகக் குமுறி்க் கொண்டிருந்தது. அவரால் அந்தத் தோல்வியை எளிதிற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் எதையும் பேசாமல் தன்னுடைய கிராமத்துக்குச் சென்ற ராஜபக்ஸவைத் தேடிச் சனங்கள் சென்றனர். அனுதாபம் தெரிவிக்கவும் ஆறுதல் சொல்லவும் சென்ற மக்களைப் பார்த்த மகிந்த ராஜபக்ஸவுக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. சனங்கள் தன்னைக் கைவிடவில்லை என்று புரிந்து கொண்டார்.

தொடர்ந்தும் சனங்கள் மகிந்தவைத் தேடி வரத் தொடங்க அதையே தனக்கான அரசியல் நம்பிக்கையாக்கி, முதலீடாக்கினார். வந்த எல்லோருக்கும் பாற்சோறு வழங்கப்பட்டது. பாற்சோற்றோடு சேர்த்து உங்களுக்காக நான் என்ற எண்ணத்தையும் கொடுத்தார் மகிந்த. மக்களின் மன நிலையைச் சரியாக மதிப்பிட்டவர் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் குருநாகலுக்குச் சென்று போட்டியிட்டார். வென்றார். நிறைவேற்று அதிகாரத்தோடு இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்தவர் சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நுழைந்தார். அப்படி நுழையும்போது ஏற்பட்டிருக்கக்கூடிய மனநிலையை ஒருகணம் யோசித்துப்பாருங்கள். தொடர்ந்து நம்பிக்கையோடு வேலை செய்து பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள் ராஜபக்ஸக்கள். புதிதாக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி தந்த உற்சாகம் கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் கூடிய துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்தது.

இவ்வாறு தமக்கான அரசியல் மதிப்பீட்டையும் அவதானிப்பையும் கொண்டே ராஜபக்ஸக்கள் முன்னேறியிருக்கிறார்கள். ராஜபக்ஸக்களை வீட்டுக்கு அனுப்பி, அரசியல் முடக்கத்தை உண்டாக்க முயற்சித்த ரணில் தரப்பும் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளும் இன்று பின்னடைந்து வீட்டுக்குள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தத் தரப்பை ஆதரித்த மக்களும்தான்.

2018 இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு – ஆட்சிப் பறிப்புக்கு – எதிராக நின்று தாக்குப்பிடித்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இலை உதிர்வதைப்போல மெல்லப் பதவி விலகிச் சென்றுள்ளது. அன்று சறுக்கியவர்கள் இன்று எழுந்து நிமிர்ந்திருக்கிறார்கள். வரலாறு, அரசியலும் இப்படித்தான். மேலது கீழாக. கீழது மேலாக.

இதற்குள்ளே ஆயிரம் முடிச்சுகளும் சூக்குமங்களுமுண்டு. அவற்றைப்பற்றித் தனியாகப் பேச வேண்டும். ஆனால், கோட்டபாய ராஜபக்ஸவோ தான் மெய்யாக புதிய ஜனாதிபதியாகவே செயற்படுகிறேன் என்று அடையாளப்படுத்த விரும்புகிறார். இதன்மூலம் அவர் தன்னை ஒரு மாறுபட்ட தலைவராக வளர்த்தெடுக்க முயற்சிக்கிறார் போலும். ஏறக்குறைய ஒரு சிங்களப் பிரபாகரனைப்போல. ஏனெனில் பதவியேற்ற மூன்று நாட்களுக்கள் அவர் செய்திருக்கும் மாற்றங்கள் அப்படியுள்ளன. இது எதை நோக்கிய அறிவிப்புகள் என்பதற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் வேண்டும். அதற்கு முன் புதிய ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புகள்…

1 – ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதும் “அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் புகைப்படங்களை காட்சி படுத்துவதை தடை செய்ததுடன் அதற்க்கு பதிலாக அரச இலட்சனை காட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு.

அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்களை காட்சி படுத்துவதால் மக்களுக்கு அரசின் மீதான ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் தேச எண்ணக்கரு போன்றன ஆளுக்கு ஆள் மாறுபட வழிசமைக்கிறது. அரசு என்பது அனைத்து மக்களும் ஒரே எண்ணக்கருவை தோற்றிவிக்கும் நிர்வாகமாக இருக்க வேண்டும் . அதனை அரசு மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

2 – இலங்கையில் நிலவும் போதைப் பொருள் பாதாள உலகக் கும்பலை அகற்றி நாட்டைச் சுற்றம் செய்வதற்கு முப்படையினரிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பாதாள உலக கோஷ்டியினரால் கிழமைக்கு ஓரிரு துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகி வந்துள்ளமையும் கிழமைக்கு ஒருவர் துப்பாக்கிக்கு இலக்காகி வந்துள்ளதை நிறுத்தவும் முப்படையை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3- மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின்
தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து விழாக்களும்
தலைமை ஏற்பவரின் சொந்த செலவிலேயே நடாத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் தலைமையேற்கும் நிகழ்வுகளுக்கு அரச பணம் அல்லது அவர்களின் அமைச்சு பணத்தை பயன்படுத்த முடியுமான அம்சம் ஒன்று காணப்பட்டது. இதனால் ஆண்டுக்கு கோடிக்கணக்கான பணம் வீணாக்க்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலத்தில் மிக பிரபல்யமான ஒரு அமைச்சர் தன்னுடைய விழாக்களுக்கு மாத்திரம் 300கோடி செலவு செய்திருந்தமை நினைவிருக்கும். இவ்வாறு மக்கள் பணம் செலவழிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

4 – ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணம் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை தேர்தல்களை தள்ளிப்போட்டத்தான் காரணமாக கேட்பாரற்ற நிர்வாகம் ஒன்று நடைபெற்று வந்தது, வருகிறது. இதனால் தலைநகர் உட்பட மேல்மாகாணம் மிகவும் மாசுடன் காணப்படுகிறது. சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும் மிகவும் பாதிப்பை ஏட்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக மாற்றியமைக்கும் பொருட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 – கடந்த ஐந்து வருடங்கள் அசமந்த போக்கில் இயங்கிய அரச நிர்வாகங்கள் அனைத்தும் கடுமையாக கண்காணிக்கப்படுவதுடன் அவை சரியாக இயங்குவது தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருக்கும். நிர்வாகங்கள் அனைத்தும் மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்கும் ஒரு அம்சமாக மாற்றியமைக்கப்படுவதுடன் இதுவரை மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு இருந்தது அதற்க்கு அமைவாக முதல்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆம், இந்தத் தேர்தல் வெற்றி பல முனைகளிலும் பல கேள்விகளை எழுப்புகிறது. பல படிப்பினைகளையும் தருகிறது. பலவிதங்களில் சிந்திக்கவும் தூண்டுகிறது.