இது அஞ்சலி அல்ல

இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் – எழுதித்தான் ஆகவேண்டும்.

என் போன்றவர்களுக்கு சேரனுக்கு முதல் செழியனைத் தெரியும். கவிதைக்கு முன் செய்யுள் எழுதித் திரிந்த காலத்தில், ‘போய் செழியனைப் படி’ என துரத்தி விட்டு விட்டார் எனது எழுத்தை வாசித்த ஒருவர். அந்தக் காலத்தில் மிகச் சிறு வயதில் எந்த இயக்கத்திலும் இலகுவில் சேர முடியாது. என்னைத் துரத்தியவர் யாரெண்டு நினைவில்லை. அக்காலத்தில் புலிகளின் பிரிவில் பிரச்சரத்துக்கு இயங்கியவர்கள் யார் எனத்தெரியாது (கிட்டு மாமா இருந்தால் எழுதி இருக்கலாம் – அல்லது நிலாந்தன் தனக்கு தெரிந்தவைகளை பதிவு செய்ய வேண்டும்).

பூபாலசிங்கம் புத்தகக் கடையில் தேடு தேடு என்று தேடி அந்த புத்தகத்தை கண்டு பிடித்தேன். சின்னஞ் சிறு புத்தகம். குட்டி வடிவம். கையடக்க கவிதைகள். பக்கத்துக்கு பக்கம் எத்தனை தரம் படித்தும் ஏன் செழியன் பெரிய கவிஞன் என எனக்கு விளங்கவில்லை. அசாதாராண வசனங்களை  தேடித்திரிந்த அந்தக் காலத்தில் நான் எழுதுபவை எவ்விதத்தில் குறைந்தவை என்ற பொறமை தான் மேலோங்கியது. அந்தக் காலத்தில் என் போன்றவர்கள் மத்தியில் அறியப்பட்ட கவிஞ்ஞர்களில் செழியன் முதன்மையானவர். அடுத்தவரின் பெயர் கூட சரியாக நினைவில்லை. முகமது தாவீத் உசேன் என நினைக்கிறேன். தமயந்தி, திருமா போன்றவர்களை பின்புதான் அறிந்தோம். போராளிகள் சேரனை பாடிக் கொண்டு திரிந்தார்கள் என்பதெல்லாம் பழங்கதை. யாழ் மேலாதிக்க – பீடங்கள் திட்டமிட்டு முன் தள்ளிய எழுத்துக்கள் ஆயுதப் போராட்டம் முதிர்ச்சி அடையும் காலப் பகுதியில் பின் தள்ளிப் போன விசயங்களை இன்றுவரை யாரும் எழுதவில்லை.

அந்த எழுத்துக்கள் வெறுமை அல்ல. இதன் பின்னே ஒரு போராட்ட இயங்குதல் இருக்கிறது என்ற இன்னொரு பரிமாணம் என்னுள் புகுத்தப் பட்டதும் வாசிப்பு முற்றாக மாறி விட்டது. இந்த மறு வாசிப்பில் பொறமை மேலும் அதிகரித்தது. நானும் இயக்கத்துக்கு சென்றே ஆக வேண்டும் என்ற துடிப்பை ஆழமாக பதிந்தது என்பது பொய் இல்லை. செழியன் வாசிப்பு மீற முடியாத தாக்கத்தை விட்டுச் சென்று விட்டது என்பது மிகையில்லை. செழியன் போராட்ட இலக்கிய எழுத்து நடையின் முன்னோடி. இன்று வரை அந்த தாக்கத்தில் எழுதிக் கொண்டிருபவர்களை வரிசைப் படுத்த முடியும். இதை அவர் இறக்க முதல் எழுதமுடியவில்லை என்ற கழிவிரக்கம் என்னை சிறுமைப் படுத்துகிறது.

செழியனின் நடை புதிது. சுவரொட்டி நடை என்கிறார் தமயந்தி. அப்படித்தான். அவரது மொழி வேறு. போராட்டம் சார்ந்தது என்கிறார்கள். அப்படித்தான். செழியனைப் படிக்க வைத்தல் போராட்ட உணர்வை தூண்ட முடியும் – சிறு பொடிகளின் மண்டைகளை கழுவி இழுக்க முடியும் என அரசியல் அக்கறை உள்ளவர்கள்தான் செழியனை நோக்கி எம் போன்றவர்களை துரத்தினர். அங்கு இலக்கிய -அழகியல் சார் அக்கறை இன்மையை கவனிக்க. இதே சமயத்தில் இயங்கி வந்த இலக்கிய பீடம் ஓன்று யாழ் பல்கலைக் கழகத்தில் அடிக்கடி குத்து விளக்கு ஏற்றி பொன்னாடைகள் போர்த்திக் கொண்டிருந்தது நாம் அன்று அறியோம். இன்று இருப்பது போல் – என்றும் இருப்பதுபோல் இலக்கியத்திலும் இரண்டு எதிர் நிலைகள் இயங்கி வந்தன. ஒரு பக்கம் போராட்ட உணர்வுற்றோருக்கு செழியன் அழகியல் எடுபட மறுபக்கம் அவர் புறக்கணிக்கப் பட்டார். ஆம் இது ஒரு ‘சீரியசான’ குற்றச் சாட்டுத்தான். காலம் கடந்து வரும் ஞானம்தான்.

செழியன் ஒரு அமைப்பு சார்ந்து இயங்கினார் என்பதால் புறக்கணிக்கப் பட்டவர். அவர் கட்சி அரசியல் செய்கிறார் எனப் புறக்கணிக்கப் பட்டவர். அவர் சிவப்புச் சாயம் கொண்டவர் எனப் புறக்கணிக்கப் பட்டவர். இந்துத்துவ ஆளுமையாக – அதன் அழகியலை உள்வாங்காத எழுத்து என்பதாலும் புறக்கணிக்கப் பட்டவர்.

பின்பு புலி எதிர்ப்பு மைய இலக்கிய நடவடிக்கைகள்தான் செழியனை முதன்மை படுத்தின – அதுவே அவரது இலக்கிய மரணத்துக்கு காரணமாயிற்றோ என்ற கேள்வி இருக்கிறது. இது பற்றிய தெளிவில்லை என்பதால் முடிந்த முடிவாக பேச முடியாது.

அந்தக் காலத்தில் மரணத்தை பற்றி மட்டுமே எம்மவர்களால் எழுத முடிந்தது. மரணம் மட்டுமே நிச்சயமாக இருந்தது. அத்தருணத்தில் போராட்டம் பற்றிய உணர்வு நிலை எப்படி இரிந்திருக்கும் என சற்று எண்ணிப் பாருங்கள். எப்படியும் சாகத்தான் போகிறோம் என்ற மன நிலையில் எழுதிய வரிகளை சும்மா வெறுமையாக படிக்காதீர்கள். ‘எங்களை நெருங்கி வரும் மரணத்துக்காய் நாம் நம்பிக்கையோடு காத்து இருக்கிறோம்’ என எழுதியாவது மரணத்தை தாண்டி போராட்டத்தில் நிற்பதை நியாயப் படுத்த நினைத்ததை வாசியுங்கள். தோழர் கொல்லப்பட்டு விட்டார் – எந்த குன்டு எப்படி வந்து எங்கு துளைக்கும் என தெரியாதி நின்ற நிலையில் எழுதியவைகளை ‘கோயில் பிரசன்னம்’ பார்க்கும் முறையில் வாசிக்க முடியாது. உங்கள் வாசிப்பு உங்கள் வர்க்கம், போராட்டம் சார் உங்கள் நிலைப்பாடு என்பவற்றை வெளிக்காட்டி விடும் என்ற பயத்தோடு வாசியுங்கள். செழியனையும் படியுங்கள்.

எனது வகை கவிஞர் செழியன். சிறுவயதில் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற அளவடங்கா ஆசை இருந்தது. முடியவில்லை. அதற்குள் மாறி விட்டார். தாவீத் உசேனை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. பாடசாலைக்கு வரவைத்து – அறிமுகப் படுத்தி விட்டார் ஒருவர். ஆளுக்கு ஆள் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெரும் பேச்சுக்கள் இன்றி பிரிந்தோம். இன்றுவரை எழுத்தாளர்களை தேடிச் சந்திக்கும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. பின்பு செழியனை வாசிக்க கலைச்செல்வனின் தாக்கம் காரனமாயிருந்தது என நினைக்கிறேன். அவ்வளவுதான். பழைய செழியன் வரிகள் மூளையின் முடக்குகளில் இன்னும் ஒளிந்து திரிகின்றன. வெறும் இலக்கியங்களாக இல்லை – சொந்த அனுபவங்களாக.

(நன்றி : எதிர்)