இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா?

அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும்.

வழமைபோல, எதிர்க்கும் கட்சியான ஜே.வி.பி, இதனை எதிர்த்து நிற்கிறது; இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நாட்டை ஆளும் எண்ணத்தில், அரசியல் செய்யும் பல கட்சிகள் இருந்தாலும், காலம் முழுவதும், எதிர்ப்பரசியல் செய்யும் எண்ணத்தில் இயங்கும் கட்சிகளும் உள்ளன. ஜே.வி.பி. இதில் இரண்டாவது ரகம்.

 மக்களின் எதிர்ப்பை, கொதிப்பை, சினத்தை தமக்குச் சாதகமாக்கி, தமது வாக்குவங்கியை அதிகரிப்பது பற்றித்தான் ஜே.வி.பி சிந்திக்கிறது என்றே தோன்றுகிறது. மூன்றாக இருக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை, 2004இல் தமக்கிருந்ததைப் போல, 39 பாராளுமன்ற உறுப்பினர்களாக அதிகரிக்கும் கனவில் ஜே.வி.பி இயங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஜே.வி.பியாகத் தனித்துப் போட்டியிட்டு, அந்த 39 ஆசனங்களும் ஜே.வி.பிக்குக் கிடைக்கவில்லை.

சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூர முகமாக ஜே.வி.பி இருந்தபோது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் பங்குதாரராக, அந்தத் தேர்தலில் போட்டியிட்டே ஜே.வி.பிக்கு 39 ஆசனங்கள் கிடைந்திருந்தன.

மறுபுறத்தில், சரத் பொன்சேகா உட்பட்ட சிலர், சர்வகட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதன் காரணமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நீண்டகாலத் திட்டமாகத்தான் இருக்கமுடியும். ராஜபக்‌ஷர்கள் பிரபல்யம் இழந்திருக்கும் இன்றைய நிலையில், அரசியலில் அந்த இடைவௌியை நிரப்ப, டளஸ் அழகப்பெரும மட்டுமல்ல, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றோரும் கனவு காண்கிறார்கள். 

சுதந்திர இலங்கையின் சாபம் என்பது, சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் ஆகும். இலங்கையை மிக மோசமான ரீதியில் கூறுபோட்டு, ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றைக் கட்சியெழுப்ப முடியாதவாறு, சிங்கள-பௌத்த பேரினவாதம், இலங்கை அரசியலைப் பீடித்திருந்தது. 

அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான போட்டியென்பது, யார் மிகப்பெரிய சிங்கள-பௌத்த பேரினவாதி என்ற போட்டியாகவே மாறிப்போனது. பண்டாரநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர்., சந்திரிகா, மஹிந்த, கோட்டா என, சிங்கள-பௌத்த இன-மதத் தேசிய வாக்குவங்கியைக் கவர்வதற்காக, சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக எதையும் செய்யத் துணிந்தவர்களே, பலமான தலைவர்களாக, பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றார்கள். இதுதான், இலங்கையின் கறுப்பு வரலாறு. 

இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், 1983 ஜூலை 11 ஆம் திகதி, ‘லண்டன் டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அளித்திருந்த ஒரு குறுஞ்செவ்வி ஆகும். அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அன்று தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது. 

அந்தக் குறுஞ்செவ்வியில், “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”.

1990களில், தமது மாக்ஸிஸப் புரட்சி தோற்கடிக்கப்பட்டபின்னர், தம்மை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டு வந்த ஜே.வி.பி, மக்களாதரவைப் பெறுவதற்காக, சிங்கள-பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தது.

2000களில் மிகப்பெரிய, சிங்கள-பௌத்த பேரினவாத சக்தியாக ஜே.வி.பியே திகழ்ந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான மனநிலையை, சிங்கள-பௌத்த மக்களிடையே விதைத்தில், ஜே.வி.பியின் பங்கு அளப்பரியது. 

மஹிந்த ராஜபக்‌ஷ, யுத்த வெற்றியை நோக்கி பயணித்து, அதை நெருங்கும் வரை ஜே.வி.பியே, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் குத்தகைக்காரராக இருந்தது. யுத்த வெற்றி, சிங்கள-பௌத்த மக்களின் மாவீரனாக மஹிந்தவை ஆக்கிய பின்னர், அரசியலில் தப்பிப் பிழைப்பதற்காக தனது பாதையை மாற்ற வேண்டிய தேவை, ஜே.வி.பிக்கு ஏற்பட்டது. அவர்கள், அநுர குமார தலைமையில் தாராளவாத முகமூடியை அணிந்துகொண்டார்கள். நிற்க!

அண்மையில், தனது முதலாவது சிம்மாசன உரையில், ஜனாதிபதி ரணில் சொன்ன ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. “நான் அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்தே, இன, மத, மொழி, சாதி பிரிவினைகள் இல்லாத இலங்கை அடையாளத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு தாயின் குழந்தைகள், ஒற்றுமையாக வாழக்கூடிய தேசத்தை உருவாக்க வேண்டும். இந்தச் செயற்பாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டதால், அரசியல் தோல்விகளைச் சந்தித்தேன். இது தீவிர கொள்கை உடையவர்களால் விமர்சிக்கப்பட்டது. இனவெறி மற்றும் மதவெறிக்கு எதிரான எனது தொடர்ச்சியான நிலைப்பாட்டின் காரணமாக, சில அரசியல் கட்சிகள் என்னை இனவாதி என்று அவதூறு செய்தன. எனினும், எனது கொள்கையிலிருந்து நான் விலகவில்லை. அந்தக் கொள்கையில் இருந்து நான் விலக மாட்டேன்” என்று ஜனாதிபதி ரணில் கூறயிருந்தார். 

இது பட்டவர்த்தனமான உண்மையும் கூட! ரணில் மீது பல விமர்சனங்களைப், பலரும் முன்வைக்கலாம். ஆனால், ரணில் இனவாதியல்ல; அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல. ரணில் மீது அநேக தமிழர்கள், முஸ்லிம்கள், உள்ளிட்ட சிறுபான்மையினரிடம் ஒருவகை நல்லெண்ணம் உள்ளமைக்கு இதுதான் காரணம்.

அரசியல் காய்நகர்த்தல்களில் ரணில், தனது மாமா ஜே.ஆரைப் போல ‘நரி’யாக இருக்கலாம், ஆனால், ஜே.ஆரைப் போல, ரணில் இனவாதத்தை அரசியலுக்கு பயன்படுத்தியவர் அல்ல. இனவாதம் பேசினால், பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியைக் கவரலாம் என்ற போதிலும் கூட, அதைச் செய்யாதவர் ரணில்.

ஆகவே, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருக்கும் இன்றைய சூழல், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வொன்றுக்கான முன்னகர்த்தலை முயற்சிக்கக்கூடிய அரிய தருணம். 

இதன் அர்த்தம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளும், ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு நாளில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதல்ல; மாறாக, கோட்டா வந்த போது வாய்ப்பே இல்லையென்று ஆகிப்போன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தற்போது அதிகரிப்புவாத (incrementalism) அடிப்படைகளில், அடுத்த கட்ட நகர்வுகளைச் செய்யக் கூடிய சாத்தியம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

ஒன்றிரண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இந்த வாய்ப்பை தட்டிக் கழித்துவிடக்கூடாது என்பதுதான், இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாக இருக்கிறது. 

இலங்கை இன்று கண்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலை, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்பில், ஒரு துளி எதிர்மறையான எண்ணத்தை, சிங்கள-பௌத்த மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திர இலங்கை எடுத்துக்கொண்ட அரசியல் பாதை தவறு என்பதையும், சிறுபான்மையினர் நடத்தப்பட்ட விதம் பிழை என்பதையும் பலரும் உணர்வதாகத் தெரிகிறது. 

இந்த நேரத்தில், சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தனது, அரசியல் மூலதனமாகக் கொண்டிராத ஒருவர் ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் திறமையிலும் இராஜதந்திரத்திலுமே தங்கியிருக்கிறது. 

ரணிலை எதிர்ப்பது என்பது இலகுவான தெரிவு. அதனால், தமிழ் மக்களுக்குப் பலனேதுமில்லை. ஆனால், ஜனாதிபதி ரணிலோடு, அரசியல்ரீதியாக ஈடுபடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஏதேனுமோர் அடைவையேனும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், அது ஒரு பலனுமில்லாத எதிர்ப்பைவிட, நன்மையானதே. 

தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை விடுத்து, இதைச் ‘சாத்தியமான அரசியல்’ பற்றிப் பேசும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாவது செய்வார்களா என்பதே, இங்கு கேள்வி. ‘வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு’ என்ற வள்ளுவன் வாக்கை, தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகள் தொடர்பில் சிந்தனையில் கொள்ள வேண்டும்.