இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!

– நாபீர் பவுண்டேசன் தலைவர் அபிலாசை –
எஸ். அஷ்ரப்கான்
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை முன்னிறுத்தி மக்கள் அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்து உள்ளார்.
இவர் இது தொடர்பாக விடுத்து உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை முன்னிறுத்தி மக்கள் அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். புரிந்துணர்வின்மை, சந்தேகம், நம்பிக்கையீனம், விரிசல், பகையுணர்வு, பயம் ஆகியன இனத்தால், மதத்தால், மொழியால், பிரதேசத்தால் வேறுபட்ட மக்களுக்கு இடையில் தலை விரித்து ஆடி வருவதை கண்கூடாக நாம் காண முடிகின்றது. சுய இலாப அரசியலுக்காக அரசியல் தலைமைகள் இவ்வாறான பிரிவினைகளை ஊக்குவிப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
பல்லின மக்கள் கூட்டங்களை கொண்ட எமது நாட்டில் 1948 ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஐக்கியம், சமரசம், சக வாழ்வு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை ஆகியன பேச்சளவில் மாத்திரமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன பிரச்சினை என்கிற பெயரால் இனங்களுக்கு இடையிலான இப்பிரச்சினைகளே பூதாகரம் எடுத்து உள்ளன. இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்து நிலைத்து நிற்பதற்கும் சுய இலாப அரசியல் தலைமைகளே அடிப்படை காரணி ஆகும். எனவே மானுடம் தழுவிய புதிய ஒரு அரசியல் கலாசாரம் இந்நாட்டில் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை தமிழ் பேசும் மக்களுக்கு இடையில் பிட்டும், தேங்காய்ப்பூவும் போல முன்பொரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த சூழல் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான சுமூக சூழலையே மக்கள் வரவேற்கின்றனர். ஆனால் இங்கு உள்ள தமிழ் பேசும் மக்களை பிரித்தாள்வதன் மூலம் அரசியலில் சொந்த நிகழ்ச்சி நிரல்களை சுய நல தலைமைகள் நிறைவேற்றி வருகின்றன. இவ்வகையில் பார்க்கின்றபோது தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லாவின் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதுடன் மிக மிக ஆபத்தானதாகவும் உள்ளது. இவரை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் ஒரேயடியாக நிராகரித்து விட்டனர் என்பதையே கடந்த பொது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இவர் உண்மையில் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருக்க வேண்டும். மாறாக அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என்கிற பேராசையில் அம்பாறை மாவட்ட ,முஸ்லிம் மக்களை பிழையாக வழி நடத்துகின்ற பகீரத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஒரு அம்சமாக பொது கூட்டங்கள் என்கிற பெயரில் வெறுப்பூட்டல் பிரசார கூட்டங்களை நடத்தி வருகின்றார். இவருக்கு பிடிக்காதவர்களை அநாகரிகமான முறையில் திட்டி தீர்க்கின்றார். குறிப்பாக தமிழின விரோத பிரசாரங்களை முன்னெடுக்கின்றார். இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அல்லது பிரிப்பு, அரசமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் , வருகின்ற உள்ளூராட்சி தேர்தல், கிழக்கு மாகாணத்துக்கான முஸ்லிம் முதலமைச்சர், அரசியலமைப்பு திருத்த முயற்சிகள் போன்ற விடயங்களை கையில் எடுத்து கொண்டு இன விரோதத்தை கக்குகின்றார். இதன் மூலமாக இவர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இயல்பு நிலை குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதோடு இளையோர்களையும் பிழையாக வழி நடத்துகின்றார்.
நாபீர் பவுண்டேசன் நாடளாவிய ரீதியில் விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் பேதங்களுக்கு அப்பாற்பட்ட நல்லிணக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குகின்ற செயற்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றது. எதிர்கால தலைவர்களாகவும், நற்பிரஜைகளாகவும் உருவாக கூடிய இளையோர்களை இலக்கு வைத்து நல்லெண்ண வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றது. மேலும் வருகின்ற தேர்தல் எதுவாக இருப்பினும் அதில் நாம் போட்டியிட உத்தேசித்து உள்ளோம். நல்லிணக்கத்துக்கான தூதுவர்களாக எமது வேட்பாளர்கள் விளங்குவார்கள் என்பது திண்ணம். நாம் இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டத்தை உருவாக்கி தருவோம்.