இலங்கையில் தேர்தல் முடிந்தது

கூட்டி கழித்துப் பார்த்தால் ‘இணக்க’ அரசியலுக்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். வீராவேசம் பேசி மக்களை உசுப்பிவிட்டு கதிரைகளை வென்று இணக்கமான “ எதிர்க்கட்சி” வேண்டாம்.. அமைச்சர் ஆகி வேலை வாங்கித்தர யாரால் இயலுமோ அவர்களே தேவை என மக்கள் தெரிவு செய்துள்ளதை அறிய முடிகிறது.

இலங்கையில் பெரும்பான்மை வாக்குகளையும் பாராளுமன்ற கதிரைகளையும் வென்ற கட்சி இதை உணர்ந்து “ இணக்க” அரசியல் கட்சிகளை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளுமா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

எல்லோருமே இணக்கமானால் யாரைத்தான் அமைச்சராக்குவது?

இலங்கை அரசமைப்பு சட்டம் என்பது வாரம் இருமுறை பத்திரிகை போல உள்ளடக்கம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது..

தங்களுக்கு அறுதிப்பெரும்பான்மை வேண்டும் எனக்கேட்ட ராஜபக்‌ஷ கட்சிக்கு மூன்றில் இரண்டு என்கிற பலத்தை கிட்டதட்ட மக்கள் வழங்கி உள்ளனர்.

இலங்கை என்கிற தேசக்கட்டுமானம் பல்வகை இனம் மொழி மதம் என அனைவருடைய அடையாளங்கள், கலாச்சாரங்களை சிதைக்காமல் ஒரு ஜனநாயக நாடாக உருவெடுக்குமா அல்லது இந்திய அழிவுப்பாதை போன்று ஒரு மொழி, ஒரு மதம், ஒரு தேசம் என தன்னை அழித்துக்கொள்ளுமா என்பது மக்களில் 60 சதமானோர் ஆதரவுப் பெற்றுள்ள வெற்றியாளர்கள் கையில்தான் உள்ளது.

சிங்கள மக்களின் இதயங்களை வென்ற ராஜபக்‌ஷ தமிழ் இதயங்களையும் வெல்ல இது ஒரு வாய்ப்பு.. அதை விடுத்து மீண்டும் சிங்கள மக்களின் தலைவனாக தன்னை காட்டிக்கொள்ள விழைந்தால் இந்தப் பெரும்பான்மை ஆதரவை வீணடித்த குற்றத்திற்கு ஆளாவார்.

இலங்கைத் தீவை ஜனநாயக சமய சார்பற்ற குடியரசாக வென்றெடுக்கும் வரலாறு படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ராஜபக்‌ஷ..
யாழ்ப்பாண rabble rouserகளும் அவ்வாறு அவர்களை தூண்டிவிடும் Pub Culture புலம் பெயர்ந்த ‘குடிமகன்களும்’ இலங்கையை
தங்கள் சொந்தப் போக்கில் வாழவிடுவது நல்லது..

19 வது திருத்தம், 13 வது திருத்தம் என எல்லாவற்றையும் இல்லாமல் செய்து அதிகாரம் தனது குடும்பச் சொத்து என எண்ணாமல் , அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு ஜனநாயக ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்கி புத்தரின் மனதிற்கு சாந்தியை தருவார்கள் என நம்புகிறேன்.

அடிப்படையாக நான் சொல்ல விழைவது எதிர்ப்பு அரசியல் பேசி இணக்க அரசியல் நடத்திவந்த ( பேரம் பேசும்) அரசியல் சாயம் வெளுக்கிறது.
ஒன்றுபட்ட இலங்கையில் போலியான தேசியவாதம் பேசாமல் உண்மையான அதகாரப் பகிர்வுடன் ஜனநாயக குடியரசாக இலங்கை வளர்வதற்கு நேரடியான இணக்க அரசியல் கதைப்போரை மக்கள் தெரிவு செய்ய தயங்கவில்லை.
இந்தச் சூழலை ராஜபக்‌ஷாக்கள் தவறவிட்டால் ஒட்டுமொத்த இலங்கைக்கும் தீங்கிழைத்தவர்களீவார்கள்.
2009 ல் பயங்கரவாத – கொலைகார புலிகளை வென்ற மகிந்த சிங்களத் தலைவனாக ஹீரோவாக காட்டிக் கொள்வதை தவிர்த்து தமிழர்களோடு இணைந்து முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு யார் காரணம் என்பதை விளக்கும் விதமாக செயல்பட்டிருந்தால் இலங்கை ஒன்றுபட்டு எழ வாய்ப்பு தவறி இராது.
இப்போதும் கிழக்கில் வடக்கில் மக்கள் இலங்கையராக வாக்களித்துள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையை ஒன்றிணைந்த மக்கள் குடயரசாக வளர்த்தெடுக்க முயலாமல் புத்த பிக்குகளின் மதவாத அரசியலுக்கு அடிபணிந்தால் தேசம் நாசமாக அவர்களே காரணம் ஆவர்.

புலிக்கதை/ தேர்தல் தில்லுமுல்லு என திசை திருப்பும் கூட்டம் யாரையும் வாழவோ வளரவோவிடாது.

உண்மையில் தமிழ் அரசியல் என்பது ஒட்டு மொத்த இலங்கையை ஜனநாயகம்படுத்தும் அரசியலாக உருவெடுத்தால் மட்டுமே தமிழர்களுக்கும் தீர்வு. இலங்கைக்கும் விடிவு.
யாழ்ப்பாண மைய தமிழ் அரசியல் ஒட்டு மொத்த இலங்கைக்கும், ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் கேடுவிளைவிக்கும் அரசியல்..