இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு சொல்லும் சேதி

எதிர்பார்க்கப்பட்டதைப் போல் தமிழ் பேசும் மக்களின் (தமிழ், முஸ்லீம், மலையக மக்கள்) வாக்குகள் சிறீலங்கா ஆதரவுத்தள கோட்டாபாய இற்கு அதிகம் கிடைக்காமல் ஐ.தே கட்சியின் வேட்பாளர் சஜித்திற்கு கிடைத்திருப்பது ஒன்றும் புதினம் இல்லை. சந்திரிகா குமாரவிஜயகுமார ரணதுங்காவிற்கு இதில் விதிவிலக்காக அதிக வாக்குகளை தனது காலத்தில் பெற்றிருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மற்றயபடி இது கடந்த 70 வருட கால இலங்கை அரசியலின் பொதுப் போக்காகவே இருக்கின்றது.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான 70 இற்கு மேற்பட்ட ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் இலங்கையின் வலதுசாரி பெரும்பான்மை கட்சியை தமிழ் மிதவாதக் கட்சிகள் ஆதரித்த அளவிற்கு ஏனைய பெரும்பான்மைக கட்சிகளை கட்சிகளை ஆதரிக்கவில்லை. இதற்கான காரணம் நண்பன் போல வேடம் போடும் ஐ.தே கட்சியை இலகுவில் நம்புவது.

இந்த நம்பிக்கை ஏற்படுத்த ஜி.ஜி பொன்னம்பலம் தொடக்கம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இதனைத் தொடர்ந்த புலிகளின் உருவாக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரைக்கும் தமிழ் குறும் தேசியவாதத்தினால் கட்டுண்ட தமிழ் பேசும் மக்களின் பகுத்தறியாமல் ஒவ்வொரு காலத்திலும் இந்த தமிழ் வலதுசாரித் தலமைகள் தூக்கி பிடிக்கும் குறும் தேசியவாத்திற்குள் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் தமிழ் மக்கள் சுய ஆய்வின்ற செயற்பட்டு வருவதே பிரதான காரணம். கூடவே யாழ்ப்பாண மையவாதத் தலமைகளின் ஊடக ஆதரவு பெற்ற உசுப் பேத்தும் வார்த்தைகளினால் ஏற்பட்ட மயக்க நிலையில் இருக்கும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மனநிலையுமாகும்.

இத்தனைக்கும் இலங்கையில் நடைபெற்ற அதிகமான கலவரங்கள், அரசியல் ஒப்பந்தங்களை கிழித்தெறிதல், இனவழிப்பிற்காக கொத்து கொத்தான கொலைகள் அதிகம் நடைபெற்றது ஐ.தே கட்சியின் ஆட்சி காலகட்டங்களில்தான். இறுதியாக வலிந்து உருவாக்கப்பட்ட யுத்தங்களில் சந்திரிகா ஆட்சியில் யாழ்ப்பாணத்தை இழந்ததும், வன்னியையும் இழந்து முள்ளிவாய்காலில் துப்பாக்கிகளை மௌனமாக்கி மக்களை பலி கொடுத்த நிகழ்வுகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தளத்தில் நடைபெற்றன. இந்த தோல்விக்கான அடித்தளத்திற்கான பிளவுகள் ரணில் விக்கரமசிங்க காலத்தில் உருவாக்கப்பட்தை அவர்களே பதிவு செய்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டது, உட்பட பண்டா செல்வா ஒப்பந்தம் கிழக்கப்பட்டது, வெலிக்கடைப் படுகொலை, 1983ம் ஆண்டுக் கலவரம் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையை இயங்கவிடாது இல்லாமல் செய்தது, சந்திரிகா கொண்டு வந்த அதிக அதிகாரபரவலாக்க வரைபில் உள்ள சமஷ்டி முறமையிலாக தீர்வுத் பொதியை கொழுத்தியது என்று எல்லாவற்றையும் நடாத்திய இந்த ஐ.தே கட்சிதான். கூடவே 2009 இறுதி யுத்தத்தின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை தமது ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்க ஆசீர்வாத்துடன் நிறுத்தியதும் இதே ஐதே கட்சிதான். ஆனாலும் ஐ.தே. கட்சி தமிழ் பேசும் மக்களின் நண்பன் என்று நம்பும் தமிழ் மேற்தட்டு தலமைகளும் இதற்குள் தம்மை பலிக்கடாவாக்கிக் கொள்ளும் தமிழ் மக்களையும் இட்டு என்னவென்று சொல்வது.

2009 யுத்த வெற்றியுடன் ஆரம்பமான மகிந்த சகோதரர்களின் ஆட்டம் நாட்டை அபிவிருத்தி செய்தல் என்பதில் காட்டிய அதேயளவு அக்கறைகளை இலங்கை பல தேசியங்கள் வாழும் ஒரு நாடு இங்கு சகல தேசிய இனங்களும் சமஉரிமையுடன் வாழ்வதற்குரிய அரசியல் ஆக்கத்தை உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் தேர்தல் முடிவுகளுக்கு அப்பால் சிங்கள் பெரும்பான்மை மக்களும் சகோதர்களின் சொல் கேட்கும் சூழல் நிலவிய 2010 தொடக்கிய ஆட்சியில் ஏற்படுத்தியிருக்க முடியும். தமிழர் தரப்பும் சகோதர்களை கழுவில் ஏற்றுவோம் என்று ஐ.நா. வரையும் காவடி தூக்கி அமெரிக்காவை துணைக்கு அழைத்து ‘மிரட்டியதை’ விடுத்து அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தால சிலவேளைகளில் ஓரளவு சுபம் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கங்கள் ஏற்படாமல் இல்லை.

‘கழுவில்” எற்றுவதற்கு பதிலடியாக வெள்ளை வான் என்றும் கிறிஸ் மனிதன் என்றும் பத்திரிகையாளர்களை காணாமல் செய்தல் என்ற நிகழ்வுகளை கையில் எடுத்ததை தவிர்த்திருந்தால் 2015 தேர்தல் தோல்வியிற்கு சிறீலங்கா சுதந்திரகட்சியை உடைத்து ஐதே கட்சியுடன் இணைத்து மைதிரியை ஐனாதிபதியாக்கும் மேற்குலக செயற்பாட்டை சகோதர்கள் தோற்கடித்திருக்க முடியும். நல்லாட்சி என்று 5 வருடங்களை நாசப்படுத்திய கால விரயத்தை விக்னேஸ்வரனின் வடமாகாணசபை போல் ஏற்படுத்திருக்கவும் தேவையில்லை. ஆனால் சகோதரர்கள் இதில் நிதானம் தவறியே நடந்திருக்கின்றார்கள் என்று இன்று எந்த சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு இன்று வாக்களித்தார்களோ அவர்களே அன்று நம்பினார்கள்.

2015 இல் மகிந்த ராஜபக்ஷ இற்கு ஏற்பட்ட தோல்வியுடன் அம்பாந்தோட்டை, மெடமுலன இல் தனது பொதுவாழ்கையை முடித்துக் கொள்ளச் சென்ற சகோதரர்களை மீண்டும் எழுச்சியிற்குள் கொண்டு வந்ததில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் ஐ.தே கட்சியிற்கும் சிறுபான்மை சமூகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைபிற்கும். காத்தான்குடி மர்ம சஹரானுக்கு பக்கபலமாக செயற்பட்டவர்களுக்கும் பெரும் பங்குண்டு. பாதுகாப்பான நாடு, பிளவுபடாத நாடு, வளர்ச்சிப் பாதையில் நாடு என்ற நம்பிக்கைகளை ராஜபக்கஷ சகோதர்களாலேயே உருவாக்க முடியும் என்று பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையினரும் சிறுபான்மை மக்களில் சிறுபான்மையினரும் நம்பிய நிலையில் கோட்டாபாய இன் வெற்றி மகத்தானதாக அமைய வாய்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கை சீனசார்பாக அதிகம் சாய வாய்விருக்கின்றது என்ற வாதம் நல்லாட்சியிலும் சீனத்தை வெளியேற்ற எதையும் செய்ய முடியவில்லை என்ற யதார்தத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன என்பது இலங்கையில் ஒடும் வாகனங்கள் பதில் கூறி நிற்கும். தண்டவாளங்களும் யாழ்ப்பாண விமான நிலையமும் தலைமன்னார் தனுஸ்கோடி பாலம் அமைத்தல் முடிவில்லாம் இழுபடுவதில் இருந்து இந்திய சந்தை ஆதிகம் இலங்கையில் எவ்வளவிற்கு ஆழமாக உள்ளது என்பதை புரிந்து கொள்வதற்கு போதுமானது. கூடவே யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராலம்…. ஏன் மறவன்புல பட்டைகளின் செயற்பாடுகளையும் துணைக்கு அழைக்கலாம்.

தேர்தல் முடிவு கோட்டாபாய இற்கு தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இருந்து சென்ற செய்தி நாம் இன்னமும் தங்களை அதிகம் நம்பவில்லை என்பதே. அது 2009 முள்ளிவாய்கால் யுத்தமாக இருக்கலாம், யுத்தத்திற்கு பின்பு 2015 வரையிலான காலப்பகுதியில் முஸ்லீம்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பட்ட தேரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாமல் இருந்தமை, மலையகத்தில்(இது ஏனைய தமிழ் பகுதிகளுக்கும் பொருந்தும். நல்லாட்சியிலும் இன்னும் அதிகமாக தொடர்ந்தன) எங்கு நின்று பார்த்தாலும் எல்லாத் திசைகளிலும் தெரியும் வெள்ளையடிக்கப்பட்ட புத்த விகாரைகளின் தோற்றமாக இருக்கலாம்.
சகோதரர்கள் மீதான சந்தேகங்களை ஏன் வெறுப்பை என்று கூடச் சொல்லலாம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த தார்ப்பரியங்களை சகோதரர்கள் சரியாக புரிந்து கொண்டு கிடைத்திருக்கும் ஆட்சி வாய்பை சரியாக பயன்படுத்தி இலங்கை இங்கு வாழும் சகல இன மக்களும் சரிசமமாக வாழவ்தற்குரிய நாடு. இங்கு யாரும் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என்று உரிமைகளில் உசத்தி, குறைவு என்றில்லாமல் யாவரும் சமம் என்று செயற்படுவார்களானால் எதிர் காலத்தில் நாமல் ஜனாதிபதியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது.

அன்றேல் இடையிடையே இன்னொரு ‘நல்லாட்சி” ஏற்பட்டுத்தான் ஆகும். 2009 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட தமது ஆட்சிக்காலத்து செயற்பாடுகளை சீர் தூக்கி பார்த்து தவறுகளை திருத்தி, சிறப்புக்களை மேலும் செயற்பாட்டுத் திறனுள்ளவையாக மாற்றினால் இலங்கை வரலாறு பல் தேசிய இனம் வாழும் முன் மாதிரியான நாடுகளில் ஒன்று என்று எழுதப்படும். இதனைச் செய்வார்கள் சகோதரர்கள் என்று நம்புவோம்.


(நவம்பர் 20, 2019)