உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கம்யூனிஸத்தைத் தழுவிக்கொண்ட
ஒரு புரட்சிக்காரன்,,,
ஆயுதத்தை சுமந்த
ஒரு போராட்டக்காரன்….
என்றாலும்….
மெல்லிய மலர்மனம் கொண்டவன்
பத்மநாபா!
இது மாற்று இயக்கத்தவரும்
வழங்கியிருந்த நற்சான்று!

‘வாழும் வகையில்லை…
வாய்ச் சோற்றுக்கும் வழியில்லை… ‘
என்று இரக்கம் வேண்டி அவரிடம் வந்து நின்றான்
ஒரு மீசை துளிர்த்த இளைஞன்.
யார் எவரென்றும் பாராது –
ஈழத்துக் கண்மணியென அவனை
வாரியணைத்துத் தழுவிக்கொண்டார் பத்மநாபா.

இருப்பிடம் தந்தும் –
இருக்கிற உணவைப் பகிர்ந்தும்
அவனைத் தனது
சோதரனாக்கிக் கொண்டார் நாபா.
சின்னஞ்சிறியன் என்பதால் அவனை விளையாட்டாகத்
தோள்மீது சுமந்து நடப்பார் அவர்.
செல்லங்கொஞ்சுவார்.

அந்தப் பயல்தான் –
“வாருங்கள்…கொன்றொழிக்க சரியான தருணம்!”
என்று விடுதலைப் புலிகளுக்கு
அன்னமிட்டவர்களைக் காட்டிக்கொடுத்தான்.
அதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகத்தின்
திரைமறைவு எட்டப்பன் அவன் என்று
அப்போது ஆரும் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.

அவனது சமிக்ஞையின்பேரில்
ஆயுதத்துடன் வந்த எதிரிகள்
நிராயுதபாணிகளான தோழர்களை சுட்டுப் பொசுக்கினர்.
எதிர்ப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவனும்
துப்பாக்கிக்குத் தப்பவில்லை.
செத்தே போனான்.

அந்தத் தெருவே குருதிப் புனலாயிற்று.
பத்து நிமிட வன்முறை…
பதினாறு பேர் செத்து மடிந்தார்கள்.
தப்பியோடிய கொலைகாரர்களோடு
தானும் தப்பியோடினான்
காட்டிக் கொடுத்த அந்தப் பயல்.

அவன் பெயர் சாந்தன்.
ஆண்டுகள் கழிந்தன.
மறுபடியும் அதே சென்னை மண்ணில் –
ராஜிவ்காந்தியின் உடலத்தை
சடலமாக்கி வீழ்த்திய
அந்தக் கொடூர நிகழ்வில்….
கொலையை அரங்கேற்றிய
நபர்கள் பட்டியலில் இருந்த ஒரு பெயர்…..
சாந்தன்!

காட்டிக் கொடுத்துத் தப்பிய
அதே சாந்தன்!
இப்போது சிறையிலடைக்கப்பட்டிருக்கும்
எழுவரில் ஒருவன்
அந்தச் சாந்தன்!
ராஜிவ் கொலை நிகழ்ந்த இந்நாளில் –
அந்த ‘இரட்டைக் கொலை’ சாந்தனின் நினைவு
எனக்கு ஏன் வருகிறது புரியவில்லை!