என்று தணியுமிந்த அமெரிக்க மோகம்?

திராவிட முன்னேற்றக் கழக ஸ்தாபகர் சி.என்.அண்ணாத்துரை ‘ஆரிய மாயை’ என்றொரு நூலை எழுதினார். அவர் அதில் திராவிடர்கள் (தென்னிந்தியர்கள்) எவ்வாறு வட இந்தியர்களான ஆரியர்களை நம்பிச் சீரழிகிறார்கள் என்பதை விளக்கியிருந்தார்.

இப்பொழுது ஆப்கானிஸ்தானை கடந்த 20 வருடங்களாக தனது சகபாடிகளுடன் இணைந்து ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா தனது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறி இருப்பதால், இலங்கைத் தமிழர்களின் அமெரிக்கா பற்றிய மாயையையும் விவாதிப்பதற்கான பொருத்தமான நேரம் இதுதான் என எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில், தமிழர்களின் இன்றைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தலைமைத்துவத்தில் தானே நம்பிக்கையற்று, எடுத்ததிற்கெல்லாம் ‘சர்வதேச சமூகம் இலங்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது, அது பொறுத்த நேரத்தில் இலங்கையில் தலையிட்டு தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்’ எனச் சொல்வது ஒரு வழமையாக இருந்து வருகிறது. (கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனின் கீறல் விழுந்த றெக்கோர்ட் பேச்சு இதுதான்).

அவர்கள் சர்வதேச சமூகம் என அழைப்பது சீனாவையோ அல்லது ரஸ்யாவையோ அல்ல. அவர்களது அகராதியில் ‘சர்வதேச சமூகம்’ என்பது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளையும்தான்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஏகாதிபத்திய விசுவாசத்தால்தான் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சார்பாக போராடும் அவர்களின் உறவினர்களும் கூட தமது ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் கொடிகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதுடன், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் நேரடியாகத் தலையிட்டு தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என அப்பாவித்தனமாக கோசம் எழுப்புகிறார்கள்.

தமிழர்களின் இந்த அமெரிக்க ஆதரவு மாயையை நிரூபிப்பது போல இறுதி யுத்த நேரத்தில் அமெரிக்கா தனது கப்பல் ஒன்றை முள்ளிவாய்க்கால் கடலுக்கு அனுப்பி அங்கு ‘சிக்கியிருந்த மக்களை’ மீட்க எத்தனித்தது. ஆனால் மக்கள் என்ற போர்வையில் அமெரிக்கா அங்கு இக்கட்டான நிலையில் சிக்கியிருந்த புலிகளின் தலைமையை மீட்க எத்தனிகக்கூடும் என்று கருதிய இலங்கை அரசாங்கம், அதற்கு இடமளிக்காமல் உறுதியாக மறுத்துவிட்டது. அதன் காரணமாகவே இன்று இந்த ‘சர்வதேச சமூகம்’ இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது என்பது இரகசியமல்ல.

இலங்கைத் தமிழர்களின் அமெரிக்க மாயைக்கு இன்னொரு காரணம், வி.உருத்திரகுமாரனின் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்’ செயலகத்தை அமெரிக்காவில் அமைப்பதற்கு அமெரிக்க அரசு அனுமதித்துள்ள விடயமாகும்.ஆனால் இவையெல்லாவற்றையும் விட நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழரசுக் கட்சி அமெரிக்க ஆதரவு விதைகளை தமிழர்களின் மனதில் தூவிவிட்டது. இதை இன்றைய தலைமுறையினர் பலர் அறியமாட்டார்கள்.

1961இல் தமிழரசுக் கட்சி சில கோரிக்கைளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் அரச எதிர்ப்பு சத்தியாக்கிரகம் ஒன்றை நடத்தியது. அப்பொழுது, ‘தமிழர்களே தமிழினம் அழிக்கப்படுகிறது, தமிழ் பறிபோகிறது, எனவே அதைக் காப்பற்ற உங்கள் தாலியை அறுத்துத் தாருங்கள்’ என தமிழ் மக்களை நோக்கி கோசமிட்டது.

இந்த வேசதாரிகளின் சொல்லை நம்பி பெருந்தொகையான தமிழர்கள் பொன்னாகவும் பணமாகவும் தமிழரசுக் கட்சிக்கு வாரி வழங்கினர். பின்னர் தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம் பிசுபிசுத்து நின்றுவிட்டது. ஆனால் அவர்கள் அப்பாவித் தமிழ் மக்களிடம் சேர்த்த பொன்னுக்கும் பணத்துக்கும் என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை. இந்த நிலைமையில் தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ் பொதுமகன் ஒருவர் இதுபற்றி கட்சித் தலைவர்களிடம் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியைக் கேட்டு சீற்றத்துடன் எழுந்த ‘தள(ர்)பதி’ அ.அமிர்தலிங்கம், ‘அந்தப் பணம் எமது போராட்டத்துக்கான ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என ஒரே போடாகப் போட்டு கேள்வி கேட்டவரின் வாயை அடைத்துவிட்டார். (அந்தப் பணத்தை எவ்வாறு தமிழரசு எம்.பிக்கள் தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற விபரத்தை எம்.கே.அந்தனிசில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தீப்பொறி’ பத்திரிகை அம்பலப்படுத்தயதால், சாவகச்சேரி நகரிலுள்ள கடையொன்றுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்ட அந்தப் பத்திரிகையின் முழுப் பிரதிகளையும் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி எம்.பி. வி.என்.நவரத்தினம் பணம் கொடுத்து வாங்கி தனது வீட்டில் தீயிட்டுக் கொளுத்திய சம்பவமும் நிகழ்ந்தது).

ஆனாலும் தமிழர்களின் அமெரிக்க மாயை ஒழிந்துபோய் விடவில்லை. ஆனபடியால் தன்னை நம்பிய ஆப்கான் மக்களை ‘அம்போ’ என கைவிட்டுவிட்டு அமெரிக்கா ஓடிய இன்றைய சூழலிலும் கூட ஈழத்துத் தமிழர்களின் அமெரிக்க மாயை ஒழிந்துவிடும் என எதிர்பார்ப்பதற்கில்லை.

(Maniam Shanmugam)