என் மனவலையிலிருந்து……

(சாகரன்)

தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது,

தமிழ் நாட்டுத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில தினங்கள் ஆகும். இந்திய சுதத்திரத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைத்து பின்பு அது காமராசர் காங்கிரஸ் ஆட்சியாக மாறிய தமிழ் நாட்டு அரசியல் பெரியாரின் திராவிட முன்னெடுப்பு அண்ணாத்துரையின் திமுக ஆட்சிக்கு வித்திட்டது. நல்லாடசி வழங்கிய காமராசரின் தோல்வியும் இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உழைச்சல்களும் அவரை காவு கொண்டதுடன் தமிழ் நாட்டு மக்களின் நல்லாட்சிக்கும் மரணசாசனம் எழுதியதாக அமைந்துவிட்டது. அண்ணாத்துரையின் மரணமும் கருணாநிதியின் விலத்தியோட்டமும் இவரை ஆட்சியமைக்க வழிவகுத்தாலும், எம்ஜிஆரின் கவர்ச்சிக்கு எதிரே நீண்ட காலம் கலைஞரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

தொடர்ந்த சினிமாக் கவர்ச்சி முன்னோக்கி நகர கொடை வள்ளல் போல் காட்சியளித்த எம்.ஜி.ஆர் இன் புதிய கட்சி அதிமுக ஆட்சியமைத்தது. எம்ஜிஆரின் மரணம் வரை தொடர்ந்த இந்த ஆட்சி எம்ஜிஆர் உடன் முடிந்து விட்டது என்று தோற்றம் பெற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் திமுக வின் அடாவடித்தனமான ஆட்சியும் ஜெயலலிதாவின் எம்.ஜி.ஆர் ஐ முன்னிலைப்படுத்திய கவர்ச்சிகளும் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியது.
தொடர்ந்த தேர்தல்களில் இரு திராவிடர் கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல் செயற்பட்டனர்.

ஊழல்களிலும் சரி, தேர்தலுக்கான இனாம்களை வழங்குவதிலும் சரி, ஒரு அரசு ஆரம்பித்த திட்டங்களை மற்றய அரசு ஆட்சிக்கு வந்தால் அதனைத் தொடராமல் நிறுத்துவதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்றே செயற்பட்டனர். காங்கிரஸ் என்ற இந்திய அளவிலான மாபெரும் இயக்கமும் தமிழ் நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் உறுதியான கணிசமான வாக்கு வங்கிகளை வைத்திருந்தாலும் இவர்கள் யாருடனாவது கூட்டுவைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதே வரலாறு. இதனையே இடதுசாரிக்கட்சிகளும் தொடரவேண்டிய சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் குறும் தேசியவாத சிந்தனையை தமது தேர்தல் வெற்றிக்காக பாவிக்கும் நிலைக்கு முதலில் திராவிட கட்சிகளைத் தள்ளிய நிலமை ஏற்பட்டு பின்பு ஒவ்வொரு தேர்தலிலும் தமது வெற்றிக்கான ஏலக்காயாக, கறிவேப்பிலையாக ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுப்பது ஒரு வழமையாகிவிட்டது. இதில் திராவிட, காங்கிரஸ் கட்சிகளிலிருந்து உடைந்து சென்ற வைகோ வகையறாக்களும் ஈழத்தமிழருக்காக யார் ஆடுவெட்டி வேள்வி வைப்பது என்பதில் போட்டிபோட்டுக் கொண்டனர்.

ராஜீவ் காந்தியின் தமிழ்நாட்டில் நடைபெற்ற படுகொலை இந்த ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு தமிழகக் கட்சிகளுக்கும் அதிகளவில் கைகொடுக்காவிட்டாலும்…. முள்ளிவாய்கால் படுதொலைகளையும் இன்றுவரை தமிழகக் கட்சிகள் வேறு தீனி இல்லாதததினால் பாவித்து வருவதற்கு வாய்பை அளித்துவிட்டது. இவர்களின் ஈழத்தமிழருக்கான குரல் கொடுப்பு ஒரு வீதமேனும் ஈழத்தமிழருக்கு உதவிகரமாக அமைந்தது, அமையும் என்பது பலரும் நம்பும் பொய்கள். அதேபோல் இந்த கோஷங்கள் இவர்களின் தேர்தல் வெற்றிகளுக்கும் பெரிய அளவில் உதவப்போவதில்லை. ஆனால் இதற்குள் ஒழித்திருக்கும் பணம் பட்டுவாடா இற்கு இது உதவுகின்றது. வைகோவின் கட்சியின் வாழ்தலுக்கும், சீமானின் சீறலுக்கும், நெடுமாறனின் இருமலுக்கும் இதுவே காரணம்.

சரி எவை எப்படி இருப்பினும் தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவும் கிராமத்தின் பலத்தினால் தாங்கங்கப்படும் நாடுகள், தேசங்கள் ஆகும். படிப்பறிவு குறைந்த அப்பாவி மக்களுக்கு தெரிந்த கை(காங்கிரஸ்), சூரியன்(திமுக). இரட்டை இலை(அதிமுக) ஆகிய சின்னங்களை தமது சின்னங்களாக வரிந்தெடுத்த மக்கள் தமக்கு பிடித்த சின்னங்களுக்கு வாக்களிக்கும் முறமைகளையே இன்றுவரை பெரும்பான்மையாக கொண்டிருப்பது இவ் மூன்று கட்சிகளும் தொடர்ந்தும் கணிசமான விகித வாக்குப் பலத்தை தேர்தலில் பெறுகின்றனர். இவர்களுக்கு பின்னால் உள்ள நல்லது, கெட்டதை அறியாத பாமர மக்களின் பெருவாரியான வாக்குகளினால் நடத்தப்படும் தேர்தலில் இவர்களுக்கே பெருவாரியான வாக்குககள் கிடைக்கும்.

இதுவே இந்த முறைத் தேர்தலிலும் நடைபெறப்போகின்றது. தொலைக்காட்சி செய்த மாயம் திராவிட கட்சிகள், காங்கிரஸ் மீதான விருப்பு, வெறுப்புக்களை இந்த பாமர மக்கள் மத்தியில் சிறிதளவு ஏற்படுத்தியிருப்பதினால் சில சூத்திரங்கள் இம் முறை மாறலாம். இதில் சில கூட்டல்கள், கழித்தல்கள் எற்படும், இது ஜெயலலிதாவிற்கு கழித்தலாகவும் திமுக இற்கு இந்தக் கழித்தலால் ஏற்படும் அவ்வளவும் கூட்டலாக அமையாமல் ஒரு பகுதி மட்டும் அமைய…. இடதுசாரிகளின் கூட்டமைப்பிற்கு மிகுதி கூட்டலாக அமையும். அதுதான் விஜயகாந்தின் தலைமையிலான கட்சிக்கு. மற்றயபடி சீமானின் சீறல்கள், பாமகவின் உறுமல்கள், பாஜக வின் (இந்துவத்துவா) வெறிகள் பாரியளவு தாக்கத்தை இத் தேர்தலில் ஏற்படுத்தாது.

யாரும் அறுதிப் பெருபான்மை பெற முடியாத நிலையில் கூட்டமைப்பதற்கு திமுக வுடன் இதசாரிக் கூட்டணிகு வசதியாக இருப்பதினால் இவர்களின் கூட்டே ஆட்சியை அமைக்கும் என்பதே என் கணிப்பு ஆகும். யார் ஆண்டாலும் ஈழத் தமிழ் மக்களுக்கோ தமிழ் நாட்டுத் தமிழ் மக்களுக்கோ பாரியளவு நன்மை ஏதும் ஏற்படப் போகும் புதிய தமிழக அரசால் ஏற்படப்போவதில்லை.