எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 16)

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதம் விவசாய நிலப்பரப்பாக உள்ளது. அதாவது இருபத்துநான்கு (24) லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பு. இதனை ஏக்கர் கணக்கில் கூறுவதானால் சுமார் 60 (அறுபது) லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு. இதில் சுமார் இருபத்தி நான்கு (24)லட்சம் ஏக்கர்கள் தேயிலை, றப்பர் மற்றும் தென்னை பெருந் தோட்டங்களின் நிலங்களாகவும் அத்துடன் கோப்பி, கொக்கோ, மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களின் பயிர்களைக் கொண்ட நிலங்களாகவும் உள்ளன. நெல் பயிர் செய்கைக்காக சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்களும், ஏனைய பருவகால பயிர்கள் செய்யப்படுபவையாக சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களும், பழ வகைகள் மற்றும் பயன்தரு மரங்களைக் கொண்டவையாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களும் உள்ளன. இவை தவிர மேய்ச்சல் நிலங்களாக சுமார் 60000 (அறுபதாயிரம்) ஏக்கர் பயன்படுத்தப்படுகின்றது.  

இந்த வகையில், இங்கு நாட்டு மக்களின் தேவைக்கான உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக நேரடியாக பயன்படுத்தப்படும் விவசாய நிலத்தின் அளவு சுமார் 35 (முப்பத்தைந்து) லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு. அதாவது சராசரியாக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்வதற்கு இருக்கின்ற நிலத்தின் அளவை நெற் காணிப் பரப்பில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட நான்கு (4) பரப்பு நிலம் மட்டுமே. இந்த நான்கு பரப்பு நிலத்தைக் கொண்டுதான் சராசரியாக ஒரு ஆளுக்குத் தேவையான அரிசி, மா வகைகள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள் உட்பட அனைத்து மரக்கறி வகைகள், பால் மற்றும் பாலுணவுப் பொருட்கள், முட்டை மற்றும் இறைச்சி வகைகள், சீனி மற்றும் இனிப்பு வகைகள், சமையல் எண்ணெய் வகைகள் மற்றும் உணவு தயாரிப்புக்கான உப உணவுப் பண்டங்கள் ஆகிய அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும்.  

எங்கும் பசுமையான காட்சி கொண்ட இலங்கை: உணவு உற்பத்தியில் எங்கே உள்ளது 

குறைந்த சனத் தொகையையும் கூடுதலான நிலப்பரப்பையும் கொண்ட நாடுகளை இங்கு இலங்கையோடு ஒப்பிடாமல் உலகிலேயே அதி கூடிய சனத்தொகையைக் கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் சீனாவை ஒப்பிடுவோமாயின் இலங்கை தலாநபருக்காகக் கொண்டிருக்கும் விவசாய நிலம் கூடுதலாகவே உள்ளது. அதாவது இலங்கை சராசரியாக ஒரு பிரஜைக்கு நான்கு பரப்பு பயிர் செய் நிலத்தைக் கொண்டிருக்க, இந்தியாவோ 3 பரப்பு நிலத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. சீனாவோ இன்னமும் குறைவாக சுமார் இரண்டரை பரப்புபளவு  நிலத்தையே கொண்டிருக்கின்றது.  

சீனா மற்றும் இந்தியாவோடு ஒப்பிடுகையில் பிரதான உணவு உற்பத்திகளில் இலங்கையின் உற்பத்தித் திறன் நிலையை கீழ்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம். இந்த ஒப்பீட்டின் மூலம் இலங்கை  எவ்வளவு தூரம் விவசாயத்தில் பின்தங்கிய நாடாக உள்ளது என்பதைக் காணலாம். 

ஒரு ஏக்கருக்கான விளைச்சல் (கிலோ கிராமில்) – 2017ம் ஆண்டு தரவுகள் – 

 சீனா இந்தியா இலங்கை 
நெல் 2765 1540 1250 
மரவள்ளி 6600 8400 5600 
கத்தரிக்காய் 17150 6800 4500 
உருளைக்கிழங்கு 7250 8900 6600 
தக்காளி 22300 10500 6060 
பெரிய வெய்காயம் 8800 6800 6200 
மாம்பழம் 5000 3800 1280 

 உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)  

இந்தியா மற்றும் சீனாவில் 40 சதவீத பயிர் செய் நிலங்களே நீர்ப்பாசன வசதிகளை நம்பியுள்ளன. ஏனையவற்றில் பருவகால மழையை நம்பிய விவசாயமே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இலங்கையிலோ 60 சதவீதமான பயிர் செய் நிலங்கள் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. இருந்தும் இலங்கையில் உணவுப் பயிர்செய்கைகளின் சராசரி விளைச்சல் மேற்குறிப்பிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் இருப்பது கவனத்திற்குரிய ஒன்றாகும்.  

இந்திய நிலைமைகளோடு ஒப்பிட்டால் இலங்கை மக்கள் கல்வித் தராதரத்தில் உயர்ந்தவர்கள். இங்கு கிராமப்புற விவசாயிகள் அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான தூரம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவோடு ஒப்பிடுகையில், கிராமங்களின் விவசாய செய்கை நிலப்பரப்புகளுக்கும்  சந்தை வாய்ப்புக்களுக்கும் இடையேயுள்ள துரரமும் இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையினுடைய மத்திய மற்றும் மாகாண அரசுகளின் கீழே விவசாய நடவடிக்கைகள் மற்றும் விவசாய அபிவிருத்தி தொடர்பாக உள்ள இலாக்காக்களின் அலுவலகங்களும், விவசாய சேவைகள், ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான நிறுவனங்களின் கட்டமைப்பும் நாடு முழுவதுவும் பரவலாக உள்ளன. மேலும் அவற்றில் சேவையாற்றும் நிபுணர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை நாட்டின் விவசாய நிலங்களின் அளவு மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆகியவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில் இலங்கையில் மிக அதிகமாகவே உள்ளனர். இவ்வாறாக பல்வேறு விடயங்கள் சாதகமானவைகளாக இருந்தும் இலங்கையின் விவசாய உற்பத்தித் திறன் மிக முக்கியமான பயிர்களின் விடயத்தில் குறைவாக இருப்பது விமர்சனத்துக்கு உரியதோர் விடயமாகும்.  

இலங்கையானது 4000 அமெரிக்க டொலரை அண்மித்த அளவுக்கு தலாநபர் வருமானத்தைக் கொண்ட நாடு என பிரகடனப்படுத்தப்படுகிறது. இலங்கை சர்வதேச தராதரத்தில் குறைந்த வருமான (Low Income) நாடு என்ற நிலையிலிருந்து முன்னேறி கீழ் மத்தியதர வருமான (Lower Middle Income) நிலையை அடைந்துள்ள நாடு என வரையறுக்கப்படுகிறது. ஆனால் இந்த நாட்டின் பிரஜைகள் இங்கு சராசரியாக நுகருகின்ற உணவின் அளவு அந்த நிலையைப் பிரதிபலிக்கிறதா என்பதனை அவதானிப்பது அவசியமாகும். இந்த விடயத்தையும் குறைந்த வருமான நாடு என்ற வகையறாவைச் சேர்ந்த இந்தியாவில் உள்ள நிலைமையோடும், மத்தியதர வருமான நாடு எனும் வகையைச் சேர்ந்த சீனாவில் உள்ள நிலைமையோடும், இலங்கையின் தலாநபர் வருமானத்துக்கு கிட்டத்தட்ட சமனாக உள்ள நாடான இந்தோனேசியாவோடும் ஒப்பிட்டுப்பார்ப்பது பொருத்தமானதாகும். இதனைக் கீழ் வரும் அட்டவணையில் காணலாம்.  

சராசரியாக ஒரு பிரஜைக்கு ஒரு வருடத்தில் வழங்கப்படும் அளவு (கிலோ கிராமில்) 

2017ம் ஆண்டுக்கான தரவுகள்

உணவு வகைகள் இலங்கை இந்தோனேசியா இந்தியா சீனா 
அரசி, கோதுமை, சோளம் மற்றும் தானியங்கள் 210 260.0 190.0 195.0 
மரவள்ளிக் கிழங்கு 10.0 68.0 3.0 2.0 
உருளைக் கிழங்கு மற்றும் ஏனைய கிழங்கு வகைகள் 12.0 11.0 27.0 60.0 
தக்காளி மற்றும் அதன் உற்பத்திகள் 3.6 3.5 14.5 35.0 
ஏனைய அனைத்து காய்கறி வகைகள் 27.5 35.5 61.0 310.0 
ஏனைய அனைத்து காய்கறி வகைகள் 7.5 0.2 10.0 1.0 
சீனி மற்றும் சர்க்கரை வகைகள் 27.5 16.0 20.0 8.0 
பழ வகைகள் 60.0 75.0 56.0 95.0 
இறைச்சி வகைகள் 6.5 11.0 4.5 65.0 
முட்டை வகைகள் (எண்ணிக்கையில்) 80.0 105.0 60.0 350.0 
மீன் வகைகள் 29.0 30.0 8.0 38.0 
பால் மற்றும் அதன் தயாரிப்புகள் 20.0 5.0 105.0 25.0 
சாப்பாட்டு எண்ணெய் வகைகள் 3.0 3.5 10.0 8.0 

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)  

மேலே தரப்பட்டுள்ள அட்டவணை, இலங்கையின் மக்கள் சராசரியாக எந்த அளவுக்கு குறைவாக  உணவைப் பெறுகின்றனர் என்பதைக் காட்டுகின்றது. 

  1. அரசி, கோதுமை, சோளம் மற்றும் சிறுதானியங்கள் எனும் அடிப்படையான உணவை உண்பதில் மொத்தத்தில் இலங்கை மக்கள் அவ்வளவு குறைவானவர்களாக இல்லை என்பது உண்மை. ஆனாலும் இந்த உணவு வகைகளில் 20 சதவீதத்தை இறக்குமதி செய்வதன் மூலமே இலங்கை மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றமை இங்கு குறிப்பிடத் தக்கது. 
  2. மரவள்ளிக் கிழங்கு தவிர, உருளைக் கிழங்கு மற்றும் கிழங்கு வகைகளின் நுகர்வில் இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கையின் நுகர்வு அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளது. அதனை சீனாவோடு ஒப்பிட்டால் ஐந்தில் ஒரு பங்காகவே உள்ளது. இலங்கை உருளைக் கிழங்கு விடயத்திலும் பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ளது. 
  3. தக்காளி மற்றும் அதன் அடிப்படையிலான உணவு வகைகளின் நுகர்வில் இந்தியாவோடு ஒப்பிட்டால் இலங்கையின் நுகர்வு கால் வாசியாகவே உள்ளது. அதனை சீனாவோடு ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்காகவே உள்ளது. 
  4. காய்கறி வகைகளின் நுகர்வில் இந்தியாவோடு ஒப்பிட்டால் இலங்கையின் நுகர்வு அரைவாசிக்கும் குறைவாக இருப்பதைக் காணலாம். அதனை சீனாவின் நிலையோடு ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 12ல் ஒரு பங்காக இருப்பதைக் காணலாம். சீனாவில், கிழங்கு வகைகள், தக்காளி மற்றும் வெங்காய வகைகளை உள்ளடக்கா வகையில் அங்கு ஒரு பிரஜைக்கு சராசரியாகக் கிடைக்கும் காய்கறியின் அளவு ஒரு வருடத்துக்கு 310 கிலோவாகும். அதாவது ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைந்த குழந்தைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் சீனாவில் ஒரு பிரஜை ஒரு நாளைக்கு ஒரு கிலோ காய்கறி வகைகளை உண்பதாகக் காட்டுகிறது. ஆனால் அவ்வகையில் இலங்கையிலோ கிழங்கு வகைகள், தக்காளி மற்றும் வெங்காயம் உட்பட, ஒரு பிரஜை சராசரியாக 100 கிராம் மரக்கறியோடு ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டியுள்ளது. 
  5. இலங்கையானது பருப்பு மற்றும் கடலை வகைகளைப் பொறுத்த வரையில் 80 சதவீதத்துக்க மேல் இறக்குமதியே செய்கின்றது. இறக்குமதி இல்லையென்றால் மேலே குறிப்பிட்ட அளவு பருப்பு மற்றும் கடலை வகைகளை இலங்கையர்கள் உண்ணவே முடியாது என்பதே உண்மை. 
  6. சீனி மற்றும் சர்க்கரை வகைகளைப் பொறுத்த வரையிலும் இலங்கையின் தேவையில் ஏறத்தாழ 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதன் மூலமே மக்களுக்கு வழங்கப்படுகிறது. 
  7. அட்டவணையின்படி இறைச்சி வகைகள் மற்றும் முட்டை வகைகளைப் பொறுத்த வரையில் இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை முன்னேற்றகரமானதாகத் தெரியலாம். ஆனால் சீனாவோடு ஒப்பிட்டால் இலங்கையில் இறைச்சி வகைகளின் நுகர்வு நிலை பத்தில் ஒரு பங்காக உள்ளது. அவ்வாறாக முட்டை வகைகளின் நுகர்வு நிலை இங்கு ஐந்தில் ஒரு பங்காகவும் உள்ளது. இவ்வகை உணவுகளை உற்பத்தி செய்வதற்கான கால்நடை உணவுத் தீவனங்களில் மிகப் பெரும்பகுதியை இலங்கை இறக்குமதி செய்வதிலேயே தங்கியுள்ளது.   
  8. பால் மற்றும் அதன் அடிப்படையிலான உற்பத்திகளை மேற்கொள்வதிலும் நுகர்வதிலும் சீனா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தின் வேறுபாடு காரணமாகவே அங்கு உற்பத்திகளும் நுகர்வுகளும் மிகக் குறைவாக உள்ளன. ஆனால் இலங்கையானது இந்த விடயத்தில் தென்னாசிய உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டதாகும். ஆனால் இங்கு பால் மற்றும் அதன் அடிப்படையிலான உணவுப் பண்டங்களின் நுகர்வு மிகக் குறைவாகவே உள்ளதை அட்டவணையில் காணலாம். பால் மற்றும் பால் அடிப்படையிலான உணவு வகைகளின் நுகர்வை இந்தியாவோடு ஒப்பிட்டால் இலங்கையர்களின் நுகர்வு ஐந்தில் ஒரு பங்காகவே உள்ளது. மேலும் இலங்கைக்கு தேவையான பால் மாவில் பெரும்பகுதியை இலங்கை இறக்குமதி செய்வதாக உள்ளமையை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.  
  9.  நாலு பக்கமும் கடல் சூழ உள்ள இலங்கையின் மீன் உற்பத்தியையும் அதன் நுகர்வு அளவையும் ஒப்பீட்டு ரீதியில் பாராட்டலாம். அதேவேளை இலங்கையர்களின் கருவாட்டு வகைகளின் தேவையில் கணிசமான பகுதியை இலங்கை இறக்குமதி செய்தே சமாளிக்கிறது என்பதை குறிப்பிடுவது அவசியமாகும்.  
  10. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சராசரியாக ஒரு பிரஜையின் ஒரு வருடத்திற்கான இறைச்சியின் நுகர்வு கிட்டத்தட்ட 100 கிலோக்களாக உள்ளமையையும், அதேபோல பால் மற்றும் பால் அடிப்படையிலான தயாரிப்புகளின் நுகர்வானது 250 லிட்டர்களுக்கும் அதிகமாக உள்ளதையும், முட்டையின் நுகர்வு எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும் என்பதையும் அறிந்து கொள்வது பயனுடையதாகும். இதன் மூலம் இலங்கை மக்களின் உணவு உட்கொள்ளும் அளவுகளினதும் தராதரங்களினதும் நிலைமைகள் எந்த அளவில் உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம்.   

நாளைக்கும் சீவிப்பதற்கே இன்றைக்கு சாப்பாடு – மிகப் பெரும்பான்மையினர் பிரியமானவற்றை போதிய அளவுக்கு உண்ண இங்கு வாய்ப்பேயில்லை

இலங்கையில் உணவு வகைகளின் கிடைப்பனவு மற்றும் நுகர்வு விடயத்தில், மானுட நுகர்வுக்குத் தேவையான அரிசி வகைகள், இறக்குமதி செய்யப்பட்டு மான்ய அடிப்படையில் விற்கப்படும் தீட்டப்பட்ட கோதுமை மாவு, ஒப்பீட்டு ரீதியில் மலிவான விலையிலோ அல்லது தத்தம் வீடுகளிலோ கிடைக்கும் தேங்காய்கள், மற்றும் ஓரளவு மலிவு விலையில் கிடைக்கும் சிறிய வகை மீன்கள், மரவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், மற்றும் கீரை வகைகள் என்பவற்றைக் கொண்டுதான் இலங்கை மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தமது உடல் வளர்ச்சியையும், உடலுக்கான சக்தியையும் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதே இங்கு உண்மையாகும். இலங்கையின் மக்கள் பரப்பில் மேல் மட்டத்தில் உள்ள 25 அல்லது 30 சதவீதத்தினர் தமக்குப் பிரியமான உணவு வகைகளை அதாவது இறைச்சி, முட்டை, பால், நல்ல ரக மரக்கறிகள் என போதிய அளவு சாப்பிட்டால் இலங்கையின் 70 அல்லது 75 சதவீதமான மக்கள் அவ்வகை உணவுகளை சாப்பிடுவதற்கான வாய்ப்பே ஏற்படாது. அந்த அளவுக்குத் தான் இலங்கை மக்களுக்கு சராசரியாக கிடைக்கும் உணவு வகைகளின் நிலைமை காணப்படுகிறது. இப்போதும் இலங்கை மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அவ்வகையான உணவு வகைகளை மிக அரிதாகவேதான் உண்கிறார்கள். இலங்கை மக்களின் பற்றாக்குறையான உணவு நுகர்வு பற்றி இலங்கையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான அறிஞர்களும் மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள். 

இங்கு அவதானிக்கப்பட வேண்டிய பிரதானமான அம்சம் என்னவெனில், இலங்கையானது, மேற்குறிப்பிட்ட சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில், சராசரி ஒரு நபருக்கான உணவுத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கான பயிர் செய் நிலங்ளை கூடுதலாகவே கொண்டிருந்தும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு முடியாத வகையாக இலங்கையின் விவசாயம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றமைதான். 

ஒரு நாடு வறிய நாடு அல்லது பின் தங்கிய நாடு என்ற வரையறையைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய நாடாக ஆக வேண்டுமானால் அந்த நாடு முதலில் தன்னுடைய பிரஜைகளுக்குத் தேவையான அடிப்படையான உணவு வகைகள் அனைத்தையும் தானாக சுயமாக உற்பத்தி செய்யும் நாடாக முன்னேற வேண்டும். மேலும் அவ்வகைப் பொருட்களில் சிலவற்றை இறக்குமதி செய்வதாயினும் அதற்கேற்ற சுய பொருளாதார ஆற்றலை அது வளர்த்துக் கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கை மக்களின் அடிப்படை உணவுக்கான தானிய உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு கண்டுள்ள ஒரு நாடு என்பது மிகப் பொய்யானதொரு கூற்றாகும். முதலாவதாக, இலங்கை மக்களின் அரிசித் தேவைக்காகக் கூட ஒரு பகுதியை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அடிப்படைத் தானிய உணவுத் தேவைக்காக சுமார் 25 சதவீதத்துக்கு மேல் கோதுமையாகவும் சோளமாகவும் இலங்கை இறக்குமதி செய்கிறது. அதற்கு பரிமாற்றாக தனது தானிய வகையை ஏற்றுமதி செய்யும் ஆற்றல் இலங்கைக்கு இல்லை. மேலும் ஒரு நாடு தானிய உற்பத்தியில் தன்னிறைவு காண்பதென்பது வெறுமனே பிரஜைகளின் தானிய உணவுக்கான உற்பத்திகளை மட்டும் மேற்கொள்வதைக் குறிக்காது. மாறாக பால், முட்டை மற்றும் இறைச்சி வகைகளைத் தரும் கால் நடைகளுக்கும் தேவையான போதிய தானிய வகைகளையும் சுயமாக உற்பத்தி செய்வதாக இருக்க வேண்டும். இலங்கை அந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல படி முன்னேற்றங்களை அடைய வேண்டும். 

கடந்த 90 ஆண்டுகளாக இலங்கை ஆட்சியாளர்கள் விவசாய அபிவிருத்திக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். 1960களில் ‘பசுமைப் புரட்சி’யையும் முழு வீச்சுடன் இலங்கை தொடங்கியது. 1970களின் ஆரம்பத்தில் ஐந்தாண்டுத் திட்டத்தோடு இலங்கை இறக்குமதிப் பிரதியீட்டுப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண முற்பட்டது. 1977ல் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கையை ஆரம்பித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விருத்தியடைந்த தொழில் நுட்பங்களெல்லாம் நாட்டுக்குள் வரும் – உற்பத்திகள் பெருகும் – திறந்த சந்தைப் போட்டிகளால் விலைகளெல்லாம் குறையும் – நாட்டில் எதற்கும் பற்றாக்குறையே ஏற்படாது என்றார். இப்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சா அவர்கள் ‘இயற்கை விவசாயப் புரட்சி’ செய்வோம் என்கிறார். இந்த விடயங்களை இக்கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

(அடுத்த பகுதி 17ல் தொடருவோம்)