காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

ஆண்டாண்டுக்காலம் அடங்கியிருந்த நிலையில், காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த டிகே.மாதவன் கொஞ்சம் காங்கிரஸ்காரர்களை சேர்த்துக் கொண்டு துணிந்து களமிறங்கிப் போராடினார். தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்கூட அச்சத்தினால் போராட்டத்துக்கு செவி சாய்க்கக்கூட இல்லை. ஆனால் மாதவன் மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார்.

ஆனால், அரசாங்கம், பிரிட்டிஷ் காவல் துறை, உயர்சாதி இந்துக்களின் கடும் அடக்குமுறை இவையெல்லாம் எல்லைமீறி போயிற்று. மாதவன் சிறைப்பட்டார்.

போராட்டம் நசுக்கப்படும் வேளையில், அழைப்பின்பேரில் பெரியார் ஈவெரா ஒரு சூறாவளியாய்க் களமிறங்கினார்.

பெரியாரின் தீவிரம் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. அவர் கைதுசெய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறைவைக்கப்பட்டபோது, அவர் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் களத்தில் இறங்கி சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

விடுதலையான ஈவெரா மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறுமாத கடுங்காவலுக்கு ஆளானார். வைக்கத்தில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டது.

கைது, சிறை, கைகலப்பு, அடிதடி, வாள் ஊர்வலம், கண்ணில் சுண்ணாம்பைப் பூசுதல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் உயர் சாதி சத்யாகிரகிகளை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து, அவர்களைச் சாதி விலக்கம் செய்தல், ஊர் விலக்கம் செய்தல்… இப்படிப் பல தாக்குதல்கள் நிகழ்ந்து, முடிவு ஏற்படாமல் ஓராண்டுக்கும் அதிகமாக அறப்போராட்டம் நீண்டுகொண்டிருந்த வேளையில் –

1925 மார்ச் 9 அன்று மாலை 6 மணி அளவில் வைக்கத்தில் வந்து இறங்கினார் காந்தி.

இறங்கியதுதான் தாமதம். உயர்சாதி வைதீகர்கள் தங்கள் கண்டனத்தை கடிதம் ஒன்றின் மூலம் அவரிடமே பதிவு செய்தார்கள்.

தமது எதிர்ப்பைக் காட்டிய எதிர்த்தரப்பான உயர்சாதியினர் முதல், சத்தியாகிரகிகள், ஈழவர், புலையர் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினர், அரசாங்க அதிகாரிகள், தாழ்த்தப்பட்டவர்களின் ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ நாராயணகுரு ,திருவாங்கூர் மஹாராணி என்று அனைவரையும் இந்த ஒரே பயணத்தில் காந்தி ஓய்வே இல்லாமல் சந்தித்து தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டி ஆகவேண்டுமென வலியுறுத்தினார்.

ஸ்ரீ நாராயணகுருவுடனான சந்திப்பில் காந்தியுடன் ஈவெரா பெரியார், ராஜாஜி, வ.வே.சு. ஐயர் போன்றோர் உடனிருந்தனர்.

டபிள்யூ.எச்.பிட் என்ற போலீஸ் கமிஷனரிடம் பேசி காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி ‘வைக்கம் வீரர்’ என்று புகழ் பெற்றிருந்த பெரியார் வைக்கத்தில் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. ‘ஒப்பந்தத்தினால் விளைந்த ஒரு சிறந்த நன்மை ஈவெராவின் மீதான தடை நீக்கம் ‘என்று காந்தியே ‘யங் இண்டியா ‘ இதழில் எழுதினார்.

வர்க்கலா என்னுமிடத்திலிருந்து காந்தியுடன் திருவனந்தபுரம் வந்த பெரியார் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். காந்தி, மஹாராணியைச் சந்தித்த பின்னர் தன்னைக் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் ஒருமுறை அவரைச் சந்தித்ததாக பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

வைக்கம் வந்த மறுநாள் மதியமே – சமாதானப் பேச்சின் தொடக்கமாக உயர்சாதிப் பிரதிநிதிகளை இந்தன்துருந்தில் நீலகண்டன் நம்பியாத்ரியின் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார் காந்தி.

கடல் கடந்து செல்லக்கூடாது என்ற ஹிந்து சனாதன தர்மத்தை மீறியவர் என்பதாலும், ஈழவரைச் சந்தித்துப் பேசி தீட்டுப்பட்டவர் என்பதாலும், அவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே நிற்கவைத்தபடி நம்பூதிரிக்கூட்டம் பேச்சுவார்த்தை நடத்தியது என்று கேரளமக்களிடம் இன்றும் செவிவழிச்செய்திகள் உண்டு.

காந்தி அந்த அவமானத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தீர்வை ஏற்படுத்த முனைந்தார் என்கிறார்கள் கேரளத்தவர்கள்.

இந்த உரையாடலில் – “சென்ற பிறப்பில் செய்த தவறுகளுக்காக இப்பிறப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் தண்டனையைப் பெற்றனர் !” என்று உயர்சாதியினர் வாதாட, ” ஒருக்கால் அப்படியே இருந்தாலும், தண்டனையைத் தருவதற்கு நீங்கள் யார்? கடவுளா?” என்று கேட்டார் காந்தி. “ஆமாம் தெய்வம் மனுஷ்ய ரூபம். அது உயர்சாதியாகிய நாங்களே!” என்றனர் வைதிகர்கள். “உண்மையான ஹிந்து மதத்தில் தீண்டாமை இல்லவே இல்லை!” என்று வாதிட்ட காந்தி, ” காரணங்கள் சொல்ல முடியாத எதுவும் வரலாற்றில் நிலைக்க முடியாது!” என்று சுட்டிக்காட்டினார்.

முடிவில் காந்தி மூன்று யோசனைகளை முன்னுரைத்தார்.

முதலாவது, பொது வாக்கெடுப்பு. அதாவது, திருவாங்கூர் அல்லது வைக்கத்தில் வயது வந்தோரிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பு.

இரண்டாவது, நடுவர் மன்றம் அமைப்பது. இருதரப்பிலும் ஒவ்வொரு அறிஞர் தம் தரப்பின் நியாயத்தை எடுத்துரைப்பர். திவான் நடுவராக இருந்து இறுதி முடிவைச் சொல்வார். சத்யாகிரகத் தரப்பின் சார்பில் வாரணாசி ஹிந்து பல்லைக்கழகத்தை நிறுவிய மாபெரும் கல்வியாளரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான மதன்மோகன் மாளவியா வாதாடுவார் என்று கூறி நம்பூதிரிகளை அதிர வைத்தார் காந்தி.

மூன்றாவது, ஆதாரத்தை நிரூபிப்பது. தாழ்த்தப்பட்ட ஈழவரை உயர்சாதியினர் இப்படி இழிவாக நடத்துவதற்குரிய சான்றை, ஆதாரத்தை உயர்சாதிக்காரர்கள் காட்ட வேண்டும். அதை, கல்வி அறிவு மிகுந்த பண்டிதர் ஒருவர் படித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த மூன்று யோசனைகளையும் தெரிவித்த காந்தி, இதில் ஏதாவது ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமென்று அந்த வாய்ப்பையும் உயர்சாதிக்காரர்களிடமே அளித்து திகைக்க வைத்தார்.

உயர்சாதியினர் முதல் இரண்டு யோசனைகளையும் நிராகரித்தனர்.

மூன்றாவது யோசனையின் அடிப்படையில் சங்கரஸ்மிருதியைக் கொண்டுவந்து, காந்தியிடம் அளித்து விளக்கினார்கள். அதன் நம்பகத்தன்மையை காந்தி கேள்வி எழுப்பினார்.

எனினும், படித்த பண்டிதர்களிடம் கேட்டுத் ‘தெளிந்த பிறகு ‘ திரும்பப் பேசுவதாகப் பதில் அளித்தார் காந்தி.

ஈழவரின் கோரிக்கையில் பொதிந்துள்ள சமூக நீதி நியாயத்தை ஹிந்து தர்மம் என்ற கோட்பாட்டுக்குள்ளிருந்தே உயர்சாதி சனாதனிகளிடம் விளக்கினார் காந்தி .

அவரது வாதங்கள் மனத்தளவில் சாதிவெறியர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருந்திருக்காதெனினும், காந்தியெனும் தேசந்தழுவிய மக்கள் ஆதரவுகொண்ட சக்தியின்முன் அவர்களால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க ஏலவில்லை. காந்தியின் வருகைக்குப்பின் திரண்ட மக்கள் திரளும் அவர்களை வாயடைக்க வைத்திருந்தன. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை காந்தி உணர்த்தியிருந்தார் .

1925 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்டது போராட்டம்.


ஆதாரங்கள் |

தமிழ் விக்கிபீடியா | பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்: காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள் ‘ hindutamil.in கட்டுரை