கைகளால் கழிவகற்றுவோருக்கு எப்போதுதான் விடிவுகாலம்?

மற்றொரு மரணம்; பாதாளக் குழியில் இறங்கி கழிவகற்றும்போது விஷவாயு தாக்கி தமிழ்நாட்டில் மற்றொரு மரணம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. கழிவுகளை அகற்றும்போதான உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ‘கைகளால் மனிதக் கழிவகற்றுவோர்’ என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்கிறது இணையம். ஏன் இந்தத் தனிப் பெரும் பெருமை? ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்; தீண்டாமை நம் தனித்துவம் என்பதால்! ‘சாதிய சமூகம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன்தான் இத்தகைய முயற்சிகள் தொடங்க வேண்டும்’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன். இக்கேவலத்திலிருந்து மீட்கப்படுவோரின் மறு வாழ்வுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கு இன்னும் முகங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.