கொரனாவும் சோசலிச நாடுகளும்

வெனிசூலாவின் இடதுசாரி ஜனாதிபதி மதுரோ அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளதுடன், மனித குலம் பெரும் அழிவை எதிர்நோக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் சித்தாந்த மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்த நோய்க்கு எதிராகப் போராடுவதில் தம்முடன் ஒன்றிணையுமாறு அமெரிக்காவுக்குச் சார்பான கொலம்பியாவின் வலதுசாரி ஜனாதிபதி இவான் டுகுயுவை கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் ஈரான், கியூபா, வெனிசூலா, வட கொரியா போன்ற வலிமை குன்றிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க மறுத்து வருகிறது. இது அமெரிக்காவின் ஏகாதிபத்திய குணாம்சத்தையும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள கல்நெஞ்சத்தையும் உலகின் முன் புட்டு வைத்திருக்கிறது.

ஆனாலும் அமெரிக்காவின் மிக மோசமான பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும் இந்த நாடுகள் அமெரிக்காவை விட கொரோனா வைரசை ஒடுக்குவதில் முன்னேற்றகரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் இந்த நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை நேசிக்கும் இடதுசாரிகளாக இருப்பதுதான்.

இதற்கு ஒரு உதாரணம், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான இத்தாலியில் கொரோனா வைரஸ் மோசமாகப் பரவியுள்ள சூழலில் சக மேற்கத்தைய நாடுகள் உதவி செய்ய முன்வரவில்லை. ஆக, சோசலிச நாடுகளான சீனாவும் கியூபாவும்தான் இத்தாலிக்கு மருந்து வகைகளையும் வைத்திய நிபுணர்களையும் அனுப்பி வைத்துள்ளன.

இன்னொரு உதாரணம், சுமார் 600 மேற்கு நாட்டவர்கள் பயணம் செய்த ஒரு குறூஸ் (உல்லாசப்பயண) கப்பலில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் அந்தக் கப்பலை எந்தவொரு முதலாளித்து நாடும் தமது துறைமுகங்களில் தரிக்க அனுமதிக்கவில்லை. இந்த நிலைமையில் கியூபா மட்டுமே தனது துறைமுகம் ஒன்றில் மனிதாபிமான அடிப்படையில் தரிக்க அனுமதித்துள்ளது.

இதிலிருந்து தெரிகிறதல்லவா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் பேசும் ஜனநாயகம், மனிதவுரிமை, மனிதாபிமானம், சர்வதேச உதவி, என்பனவற்றின் இலட்சணம்.